1 இப்பொழுது வலிமையான நகரமே, உனது வீரர்களை கூட்டு. அவர்கள் நம்மைத் தாக்குவதற்கு நம்மை சுற்றி இருக்கிறார்கள். அவர்கள் இஸ்ரவேலின் நீதிபதியைத் தன் தடியால் கன்னத்தில் அடிப்பார்கள்.

2 எப்பிராத்தா என்று அழைக்கப்படும் பெத்லேகேமே, நீ தான் யூதாவிலேயே சிறிய நகரம். உனது குடும்பம் எண்ண முடியாத அளவிற்குச் சிறியது, ஆனால் “இஸ்ரவேலை ஆள்பவர்” எனக்காக உங்களிடமிருந்து வருவார். அவரது துவக்கங்கள் நீண்ட காலத்திற்கு முன்பாகவும் பழங்காலத்திலிருந்தும் இருக்கின்றன.

3 வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட அரசனான குழந்தையை, அந்தப் பெண் பெற்றெடுக்கும்வரை கர்த்தர் தமது ஜனங்களை கைவிட்டுவிடுவார். பிறகு மீதியுள்ள அவனது மற்ற சகோதரர்கள் இஸ்ரவேலுக்கு திரும்பி வருவார்கள்.

4 பின்னர் இஸ்ரவேலை ஆள்பவர் நின்று மந்தைகளை மேய்ப்பார். அவர் அவர்களை கர்த்தருடைய ஆற்றலால், தேவனாகிய கர்த்தருடைய அற்புதமான நாமத்தால் அவர்களை வழிநடத்துவார். ஆம், அவர்கள் சமாதானமாக வாழ்வார்கள். ஏனென்றால் அந்த நேரத்தில், அவரது மகிமை பூமியின் எல்லைவரை செல்லும்.

5 ஆமாம், நமது நாட்டிற்குள் அசீரியன் படை வரும். அப்படை நமது பெரிய வீடுகளை அழிக்கும். ஆனால், இஸ்ரவேலரின் ஆள்பவர் ஏழு மேய்ப்பர்களையும் அவர் எட்டுத் தலைவர்களையும் தேர்ந்தெடுப்பார்.

6 அவர்கள் தமது வாள்களைப் பயன்படுத்தி அசீரியர்களை ஆள்வார்கள். அவர்கள் கையில் வாள்களுடன் நிம்ரோதின் தேசத்தை ஆள்வார்கள். அவர்கள் அந்த ஜனங்களை ஆள தமது வாள்களைப் பயன்படுத்துவார்கள். பின்னர் இஸ்ரவேலை ஆள்பவர், நமது நாட்டிற்குள் வந்து எல்லைகளையும் நிலங்களையும் வீடுகளை மிதிக்கும் அசீரியர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றுவார்.

7 பிறகு யாக்கோபிலே மீதியானவர்கள் கர்த்தரிடமிருந்து வருகிற பனியைப்போன்று ஜனங்களிடையே சிதறிப்போவர்கள். அவர்கள், புல்லின் மேல் விழுகிற பனியைப் போன்று ஜனங்களிடையே இருப்பார்கள். அவர்கள் எவருக்காகவும் காத்திருக்கமாட்டார்கள். அவர்கள் எவருக்காகவும் எந்த மனிதன் மேலும் சார்ந்திருக்கமாட்டார்கள்.

8 யாக்கோபிலே மீதமானவர்கள், காட்டு மிருகங்களிடையே உள்ள சிங்கத்தைப் போன்று பல தேசங்களிடையே இருப்பார்கள். அவர்கள் ஆட்டு மந்தைகளிடையே உள்ள இளஞ்சிங்கத்தைப் போன்று இருப்பார்கள். சிங்கம் கடந்து போனாலும் அது தான் விரும்பிய இடத்துக்குப் போகும். அது ஒரு மிருகத்தைத் தாக்கினால், எவராலும் அந்த மிருகத்தைக் காப்பாற்ற முடியாது. மீதமானவர்களும் அவ்வாறே இருப்பார்கள்.

9 நீங்கள் உங்களது பகைவருக்கு எதிராகக் கைகளைத் தூக்கி அவர்களை அழிப்பீர்கள்.

10 “நான் அந்த வேளையில் உங்கள் குதிரைகளை உங்களிடமிருந்து அபகரிப்பேன். நான் உங்கள் இரதங்களை அழிப்பேன்.

11 நான் உங்கள் நாட்டிலுள்ள நகரங்களை அழிப்பேன். நான் உங்கள் கோட்டைகளையெல்லாம் நொறுக்குவேன்.

12 நீங்கள் இனிமேல் சூன்ய வித்தைகளை செய்யமாட்டீர்கள். நீங்கள் இனிமேல் எதிர்காலத்தைப் பற்றி குறி சொல்லும் ஆட்களைப் பெற்றிருக்கமாட்டீர்கள்.

13 நான் உங்களது அந்நிய தெய்வங்களின் உருவச் சிலைகளை உடைத்தெறிவேன். சிலைகளை அழிப்பேன். அந்நிய தெய்வங்களை நினைவுப்படுத்தும் கற்களை நான் உடைத்தெறிவேன். உங்கள் கைளால் செய்யப்பட்டவற்றை நீங்கள் வழிபடமாட்டீர்கள்.

14 நான் உன் அஷ்ரா சிலைக் கம்பங்கள் வழிபடாதவாறு அழிப்பேன். நான் உனது அந்நிய தெய்வங்களை அழிப்பேன்.

15 சில ஜனங்கள் நான் சொல்வதைக் கேட்கமாட்டார்கள். நான் எனது கோபத்தைக் காட்டுவேன். நான் அந்த தேசங்களைப் பழிவாங்குவேன்.”

மீகா 5 ERV IRV TRV