Revelation 22 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 பின்பு, அந்த வானதூதர் வாழ்வு அளிக்கும் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த ஓர் ஆற்றை எனக்குக் காட்டினார். அது பளிங்குபோல் ஒளிர்ந்தது. அது கடவுளும் ஆட்டுக்குட்டியும் வீற்றிருந்த அரியணையிலிருந்து புறப்பட்டு,2 நகரின் தெரு நடுவே பாய்ந்தோடியது. ஆற்றின் இரு மருங்கும் வாழ்வுதரும் மரம் இருந்தது.* மாதத்திற்கு ஒருமுறையாக அது ஆண்டுதோறும் பன்னிரு முறை கனி தரும். அதன் இலைகள் மக்களினங்களைக் குணப்படுத்தக் கூடியவை.3 சாபத்துக்கு உள்ளானது எதுவும் நகரில் இராது. கடவுளும் ஆட்டுக்குட்டியும் வீற்றிருக்கும் அரியணை அங்கு இருக்கும். கடவுளின் பணியாளர்கள் அவரை வழிபடுவார்கள்;4 அவரது முகத்தைக் காண்பார்கள். அவரது பெயர் அவர்களுடைய நெற்றியில் எழுதப்பட்டிருக்கும்.5 இனி இரவே இராது. விளக்கின் ஒளியோ கதிரவனின் ஒளியோ அவர்களுக்குத் தேவைப்படாது. ஏனெனில், கடவுளாகிய ஆண்டவர் அவர்கள் மீது ஒளி வீசுவார்; அவர்கள் என்றென்றும் ஆட்சிபுரிவார்கள்.6 பின்னர், அந்த வானதூதர் என்னிடம், “இவ்வாக்குகள் நம்பத்தக்கவை, உண்மையுள்ளவை. விரைவில் நிகழவேண்டியவற்றைத் தம் பணியாளர்களுக்குக் காட்டுமாறு, இறைவாக்கினரைத் தூண்டியெழுப்பும் கடவுளாகிய ஆண்டவர் தம் வானதூதரை அனுப்பினார்.⒫7 இதோ! நான் விரைவில் வருகிறேன்” என்றார். இந்த நூலில் உள்ள இறைவாக்குகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்.⒫8 யோவானாகிய நானே இவற்றையெல்லாம் கண்டேன், கேட்டேன். அப்பொழுது இவற்றை எனக்குக் காட்டிய வானதூதரை வணங்கும் பொருட்டு அவருடைய காலடியில் விழுந்தேன்.9 அவரோ என்னிடம், “வேண்டாம். உனக்கும் இறைவாக்கினர்களான உன் சகோதரர் சகோதரிகளுக்கும், இந்த நூலில் உள்ள வாக்குகளைக் கடைப்பிடிப்போருக்கும் நான் உடன் பணியாளனே. கடவுளை மட்டுமே நீ வணங்க வேண்டும்” என்றார்.10 அவர் தொடர்ந்து என்னிடம் பின்வருமாறு கூறினார்: “இந்த நூலில் உள்ள இறைவாக்குகளை முத்திரையிட்டு வைக்காதே; இதோ! காலம் நெருங்கி வந்துவிட்டது.11 இதற்கிடையில், தீங்குபுரிவோர் தீங்குபுரிந்து கொண்டே இருக்கட்டும்; இழுக்கானவற்றைச் செய்வோர் இழுக்கானவற்றைச் செய்து கொண்டே இருக்கட்டும்; தூயோர் தூய்மையானவற்றைச் செய்துகொண்டே இருக்கட்டும்.⒫12 “இதோ! நான் விரைவில் வருகிறேன். அவரவர் செயலுக்கு ஏற்ப அவரவருக்கு நான் அளிக்கவிருக்கின்ற கைம்மாறு என்னிடம் உள்ளது.13 அகரமும் னகரமும், முதலும் இறுதியும், தொடக்கமும் முடிவும் நானே.⒫14 “தங்கள் ஆடைகளைத் துவைத்துக் கொண்டோர் பேறுபெற்றோர். வாழ்வு தரும் மரத்தின்மீது அவர்களுக்கு உரிமை உண்டு. அவர்கள் வாயில்கள் வழியாக நகருள் நுழைவார்கள்.15 நடத்தைகெட்டோர்,* சூனியக்காரர், பரத்தைமையில் ஈடுபடுவோர், கொலையாளிகள், சிலைவழிபாட்டினர், பொய்ம்மை நாடி அதன்படி நடப்போர் ஆகிய அனைவரும் அதில் நுழைய மாட்டார்கள்.16 “திருச்சபைகளுக்காக உங்கள்முன் இவ்வாறு சான்று பகருமாறு இயேசுவாகிய நான் என் வானதூதரை அனுப்பியுள்ளேன். தாவீதின் குலக்கொழுந்தும், வழித்தோன்றலும் நானே! ஒளிபடைத்த விடிவெள்ளியும் நானே!”17 தூய ஆவியாரும் ஆட்டுக்குட்டியின் மணமகளும் சேர்ந்து, “வருக! வருக!” என்கிறார்கள். இதைக் கேட்போரும், “வருக! வருக!” எனச் சொல்லட்டும். தாகமாய் இருப்போர் என்னிடம் வரட்டும்; விருப்பம் உள்ளோர் வாழ்வு தரும் தண்ணீரை இலவசமாய்க் குடிக்கட்டும்.”⒫18 இந்த நூலில் உள்ள இறைவாக்குகளைக் கேட்போர் அனைவரையும் யோவானாகிய நான் எச்சரிப்பது யாதெனில்: இந்த இறைவாக்குகளோடு எதையாவது யாரேனும் சேர்த்தால், இந்நூலில் எழுதப்பட்டுள்ள வாதைகள் அவர்களை வந்தடையுமாறு கடவுள் செய்வார்.19 இந்த நூலில் உள்ள இறைவாக்குகளுள் எதையாவது யாரேனும் எடுத்து விட்டால், இந்த நூலில் எழுதப்பட்டுள்ள வாழ்வு தரும் மரத்தினின்றும் திருநகரினின்றும் அவர்களுக்குரிய பங்கைக் கடவுள் எடுத்துவிடுவார்.⒫20 இவற்றுக்குச் சான்று பகர்பவர், “ஆம், விரைவாகவே வருகிறேன்” என்கிறார். ஆமென். ஆண்டவராகிய இயேசுவே, வாரும்.⒫21 ஆண்டவராகிய இயேசுவின் அருள் அனைவரோடும் இருப்பதாக!