பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: நீ பார்வோனிடத்தில் போ. அவர்கள் நடுவே நான் இந்த என் அடையாளங்களைச் செய்யும்படிக்கும்,
Exodus 10:2நான் எகிப்திலே நடப்பித்ததையும் நான் அவர்களுக்குள் செய்த என் அடையாளங்களையும், நீ உன் பிள்ளைகளின் செவிகள் கேட்கவும், உன் பிள்ளைகளுடைய பிள்ளைகளின் செவிகள் கேட்கவும் விவரித்துச் சொல்லும்படிக்கும், நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறியும்படிக்கும், நான் அவன் இருதயத்தையும் அவன் ஊழியக்காரரின் இருதயத்தையும் கடினப்படுத்தினேன் என்றார்.
Exodus 10:3அப்படியே மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் வந்து: உன்னைத் தாழ்த்த நீ எதுவரைக்கும் மனதில்லாதிருப்பாய்? என் சமுகத்தில் எனக்கு ஆராதனை செய்ய என் ஜனங்களைப் போகவிடு.
Exodus 10:4நீ என் ஜனங்களைப் போகவிடமாட்டேன் என்பாயாகில், நான் நாளைக்கு உன் எல்லைகளுக்குள்ளே வெட்டுக்கிளிகளை வரப்பண்ணுவேன்.
Exodus 10:5தரை காணாதபடிக்கு அவைகள் பூமியின் முகத்தை மூடி, கல் மழைக்குத்தப்பி மீதியாக வைக்கப்பட்டதைப் பட்சித்து, வெளியிலே துளிர்க்கிற செடிகளை யெல்லாம் தின்றுபோடும்.
Exodus 10:6உன் வீடுகளும் உன் ஊழியக்காரருடைய வீடுகளும் எகிப்தியரின் வீடுகளும் எல்லாம் அவைகளால் நிரம்பும்; உன்பிதாக்களும் பிதாக்களின் பிதாக்களும் தாங்கள் பூமியில் தோன்றிய நாள்முதல் இந்நாள்வரைக்கும் அப்படிப்பட்டவைகளைக் கண்டதில்லை என்று எபிரெயரின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்லி, திரும்பிக்கொண்டு பார்வோனை விட்டுப் புறப்பட்டான்.
Exodus 10:7அப்பொழுது பார்வோனுடைய ஊழியக்காரர் அவனை நோக்கி எந்தமட்டும் இந்த மனிதன் நமக்குக் கண்ணியாய் இருப்பான்? தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்ய அந்த மனிதரைப் போகவிடும்; எகிப்து அழிந்துபோனதை நீர் இன்னும் அறியவில்லையா என்றார்கள்.
Exodus 10:8அப்பொழுது மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்துக்குத் திரும்ப அழைக்கப்பட்டார்கள். அவன் அவர்களை நோக்கி: நீங்கள் போய் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள் என்று சொல்லி; யாரார் போகிறார்கள் என்று கேட்டான்.
Exodus 10:9அதற்கு மோசே: எங்கள் இளைஞரோடும், எங்கள் முதியோரோடும், எங்கள் குமாரரோடும், எங்கள் குமாரத்திகளோடும், எங்கள் ஆடுகளையும் எங்கள் மாடுகளையும் கூட்டிக்கொண்டு போவோம், நாங்கள் கர்த்தருக்குப் பண்டிகை கொண்டாடவேண்டும் என்றான்.
Exodus 10:10அப்பொழுது அவன்: நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் எப்படி விடுவேனோ, அப்படியே கர்த்தர் உங்களோடிருப்பாராக; எச்சரிக்கையாயிருங்கள், உங்களுக்குப் பொல்லாப்பு நேரிடும்;
Exodus 10:11அப்படி வேண்டாம்; புருஷராகிய நீங்கள் போய், கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்; இதுதானே நீங்கள் விரும்பிக் கேட்டது என்று சொன்னான். அவர்கள் பார்வோன் சமுகத்தினின்று துரத்திவிடப்பட்டார்கள்.
Exodus 10:12அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: வெட்டுக்கிளிகள் எகிப்து தேசத்தின் மேல் வந்து, கல்மழையினால் அழியாத பூமியின் பயிர்வகைகளையெல்லாம் பட்சிக்கும்படிக்கு, எகிப்து தேசத்தின்மேல் உன் கையை நீட்டு என்றார்.
Exodus 10:13அப்படியே மோசே தன் கோலை எகிப்து தேசத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் அன்று பகல் முழுவதும் அன்று இரா முழுவதும் கீழ்காற்றைத் தேசத்தின்மேல் வீசப் பண்ணினார்; விடியக்காலத்திலே கீழ்காற்று வெட்டுக்கிளிகளைக் கொண்டுவந்தது.
Exodus 10:14வெட்டுக்கிளிகள் எகிப்து தேசமெங்கும் பரம்பி, எகிப்தின் எல்லையில் எங்கும் மிகவும் ஏராளமாய் இறங்கிற்று; அப்படிப்பட்ட வெட்டுக்கிளிகள் அதற்குமுன் இருந்ததுமில்லை, அதற்குப்பின் இருப்பதுமில்லை.
Exodus 10:15அவைகள் பூமியின் முகம் முழுதையும் மூடிற்று; தேசம் அவைகளால் அந்தகாரப்பட்டது; கல்மழைக்குத்தப்பியிருந்த நிலத்தின் பயிர்வகைகள் யாவையும் மரங்களின் கனிகள் யாவையும் அவைகள் பட்சித்துப் போட்டது; எகிப்து தேசம் எங்குமுள்ள மரங்களிலும் வயல்வெளியின் பயிர்வகைகளிலும் ஒரு பச்சிலையும் மீதியாயிருக்கவில்லை.
Exodus 10:16அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் தீவிரமாய் அழைப்பித்து: உங்கள் தேவனாகிய கர்த்தருக்கும் உங்களுக்கும் விரோதமாகப் பாவம் செய்தேன்.
Exodus 10:17இந்த ஒரு முறைமாத்திரம் நீ என் பாவத்தை மன்னிக்க வேண்டும்; உங்கள் தேவனாகிய கர்த்தர் இந்தச் சாவை மாத்திரம் என்னை விட்டு விலக்க அவரை நோக்கி விண்ணப்பம் பண்ணுங்கள் என்றான்.
Exodus 10:18அவன் பார்வோனை விட்டுப் புறப்பட்டுப் போய், கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான்.
Exodus 10:19அப்பொழுது கர்த்தர் மகா பலத்த மேல்காற்றை வீசும்படி செய்தார்; அது வெட்டுக்கிளிகளை அடித்துக்கொண்டு போய் செங்கடலிலே போட்டது; எகிப்தின் எல்லையில் எங்கும் ஒரு வெட்டுக்கிளியாகிலும் மீதியாயிருந்ததில்லை.
Exodus 10:20கர்த்தரோ பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் போகவிடவில்லை.