சகரியா 14 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 இதோ! ஆண்டவரின் நாள் வருகின்றது, அப்போது உன்னிடமிருந்து கொள்ளையிடப்பட்ட பொருள்கள் உன் கண்ணெதிரே பங்கிடப்படும்.2 எருசலேமுக்கு எதிராகப் போர்தொடுக்கும்படி நான் வேற்றினத்தார் அனைவரையும் ஒன்று கூட்டப்போகிறேன்; நகர் பிடிபடும்; வீடுகள் கொள்ளையிடப்படும்; பெண்கள் மானபங்கப்படுத்தப்படுவார்கள்; நகர் மக்களுள் பாதிப்பேர் அடிமைகளாய் நாடு கடத்தப்படுவார்கள்; ஆனால், எஞ்சியுள்ள மக்களோ, நகரிலிருந்து துரத்தப்படமாட்டார்கள்.3 பின்பு, ஆண்டவர் கிளம்பிச்சென்று, முன்னாளில் செய்ததுபோல் அந்த வேற்றினத்தாருக்கு எதிராகப் போர்புரிவார்.4 அந்நாளில் அவருடைய காலடிகள் எருசலேமுக்குக் கிழக்கே உள்ள ஒலிவமலையின் மேல் நிற்கும்; அப்போது ஒலிவமலை கிழக்குமேற்காய்ச் செல்லும் மிகப்பெரும் பள்ளத்தாக்கு ஒன்றில் இரண்டாகப் பிரிக்கப்படும். ஆகவே, அம்மலையின் ஒரு பகுதி வடக்கு நோக்கியும் மற்றொரு பகுதி தெற்கு நோக்கியும் விலகிநிற்கும்.5 அப்போது, நீங்கள் என் மலைகளின் பள்ளத்தாக்கு வழியாய்த் தப்பியோடுவீர்கள்; மலைகளின் பள்ளத்தாக்கு ஆட்சால் வரை பரவியிருக்கும்; நீங்களோ யூதாவின் அரசன் உசியாவின் காலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது தப்பியோடியதுபோல் ஓடிப்போவீர்கள்; அப்போது உங்கள் கடவுளாகிய ஆண்டவர் தம் புனிதர்கள் அனைவரோடும் வருவார்.⒫6 அந்நாளில் வெப்பமோ குளிரோ உறைபனியோ இராது.7 அது ஒரே பகலாயிருக்கும், அதன் வரவை ஆண்டவர் மட்டுமே அறிவார். பகலுக்குப்பின் இரவு வராது. மாலை வேளையிலும் ஒளிபடரும்.8 அந்நாளில் வற்றாத நீரூற்று ஒன்று எருசலேமிலிருந்து தோன்றி ஓடும்; அதன் ஒரு பாதி கீழ்க்கடலிலும் மறு பாதி மேற்கடலிலும் சென்று கலக்கும். கோடைக்காலத்திலும் குளிர்காலத்திலும் அது ஓடிக்கொண்டேயிருக்கும்.9 ஆண்டவர் உலகம் அனைத்திற்கும் அரசராய்த் திகழ்வார். அந்நாளில் ஆண்டவர் ஒருவர் மட்டுமே இருப்பார்; அவர் திருப்பெயர் ஒன்று மட்டுமே இருக்கும்.⒫10 கேபாவிலிருந்து எருசலேமுக்குத் தெற்கில் உள்ள ரிம்மோன்வரை உள்ள நாடு முழுவதும் சமவெளியாக்கப்படும்; எருசலேமோ தான் இருந்த இடத்திலேயே ஓங்கி உயர்ந்து பென்யமின் வாயிலிலிருந்து முன்னைய வாயில் இருந்த இடமான மூலைவாயில் வரையிலும், அனனியேல் காவல் மாடத்திலிருந்து அரசனுடைய திராட்சை ஆலைகள் வரையிலும் மக்கள் குடியேற்றத்தால் நிறைந்திருக்கும்.11 அங்கே மக்கள் குடியிருப்பார்கள். இனி அவர்கள் சாபத்திற்கு ஆளாக மாட்டார்கள். எருசலேம் அச்சமின்றி வாழும்.⒫12 எருசலேமுக்கு எதிராகப் போர்தொடுத்த எல்லா மக்களினங்களையும் வதைக்கும் பொருட்டு ஆண்டவர் அனுப்பும் கொள்ளை நோய் இதுவே. அவர்கள் நடமாடிக் கொண்டிருக்கும்போதே ஒவ்வொருவனது சதையும் அழுகிப்போகும். அவர்களுடைய கண்கள் தம் குழிகளிலேயே அழுகிப்போகும். நாக்குகளும் வாய்க்குள்ளேயே அழுகி விடும்.13 அந்நாளில் ஆண்டவர் அவர்களுக்கிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்துவார்; அப்போது அவர்கள் ஒவ்வொருவரும், அடுத்திருப்பார்மேல் கைவைப்பர்; அடுத்திருப்பாருக்கு எதிராகக் கையை ஓங்குவர்.14 யூதாவும்கூட எருசலேமுக்கு எதிராகப் போர்தொடுக்கும்; அப்போது சுற்றிலுமுள்ள வேற்றினத்தாரின் செல்வங்களாகிய பொன், வெள்ளி, ஆடைகள் பெருமளவில் திரட்டப்படும்.15 அவர்களுக்குக் கொள்ளைநோய் வந்தது போலவே அவர்களுடைய பாளையங்களில் இருக்கும் குதிரைகள், கோவேறு கழுதைகள், ஒட்டகங்கள், கழுதைகள் முதலிய எல்லா விலங்குகளுக்கும் கொள்ளைநோய் வரும்.⒫16 பின்பு எருசலேமுக்கு எதிராக எழும்பிய வேற்றினத்தாரில் எஞ்சியிருக்கும் அனைவரும் படைகளின் ஆண்டவராகிய அரசரைத் தொழவும் கூடாரத் திருவிழாவைக் கொண்டாடவும் ஆண்டுதோறும் அங்கே போவர்.17 உலகின் இனத்தார் எவரேனும் படைகளின் ஆண்டவராகிய அரசரைத் தொழ எருசலேமுக்குப் போகவில்லை என்றால் அவர்கள் நாட்டில் மழை பெய்யாது.18 எகிப்து நாட்டினர் அவரை வழிபட வரவில்லையாயின் அவர்களுக்கும் மழை இல்லாமற் போகும். கூடாரத் திருவிழாவைக் கொண்டாட வராத மக்களினங்களை வதைத்த அதே கொள்ளைநோய் அவர்களையும் வதைக்கும்.19 இது எகிப்தின் பாவத்திற்கும் கூடாரத் திருவிழாவைக் கொண்டாட வராத மற்றெல்லா வேற்றினத்தாரின் பாவத்திற்கும் கிடைக்கும் பயன்.⒫20 அந்நாளில் குதிரைகளின் கழுத்திலுள்ள மணிகளில் ‘ஆண்டவருக்கென அர்ப்பணிக்கப்பட்டவை’ என்று எழுதப்பட்டிருக்கும். ஆண்டவரின் கோவிலில் இருக்கும் பானைகள் பலிபீடத்தின் முன்னிருக்கும் கிண்ணங்களைப் போலிருக்கும்.21 யூதாவிலும் எருசலேமிலும் உள்ள ஒவ்வொரு பானையும் படைகளின் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டதாய் இருக்கும்; பலி செலுத்துவோர் எல்லாரும் பலி இறைச்சியைச் சமைப்பதற்காக அவற்றை எடுக்க முன்வருவார்கள். மேலும், அந்நாள் முதல் படைகளின் ஆண்டவரது கோவிலில் வணிகர் எவரும் இருக்கமாட்டார்.