1 வீபனோனே, உன் வாசலைத் திற. அதனால் நெருப்பு அதன் வழியாக வந்து உன் கேதுரு மரங்களை எரிக்கும்.
2 சைபிரஸ் மரங்கள் அழும். ஏனென்றால் கேதுரு மரங்கள் விழுந்திருக்கும். அந்தப் பலமான மரங்கள் எடுத்துச் செல்லப்படும். பாஷானிலுள்ள ஓக் மரங்கள், வெட்டப்பட்ட காடுகளுக்காக கதறும்.
3 அழுதுகொண்டிருக்கும் மேய்ப்பர்களைக் கவனி. அவர்களின் ஆற்றல்மிக்க தலைவர்கள் கொண்டுப்போகப்பட்டனர். கெர்ச்சித்துக்கொண்டிருக்கும் இளஞ் சிங்கங்களைக் கவனி. அவற்றின் அடர்ந்த புதர்கள் யோர்தான் நதிக்கரையில் இருந்தன. அவை அழிந்துப்போயின.
4 எனது தேவனாகிய கர்த்தர் கூறுகிறார்: “கொலைச் செய்யப்படுவதற்குரிய ஆடுகளைப் பொறுப்புடன் கவனித்துக்கொள்ளுங்கள்.
5 அவர்களின் தலைவர்கள் சொந்தக்காரர்களையும், வியாபாரிகளையும்போலஉள்ளனர். சொந்தக்காரர்கள் தமது ஆடுகளைக் கொல்கிறார்கள், ஆனால் தண்டிக்கப்படுவதில்லை. வியாபாரிகள் ஆட்டினை விற்று, ‘கர்த்தரைத் துதியுங்கள். நான் செல்வந்தன் ஆனேன்!’ என்பார்கள். மேய்ப்பர்கள் தம் ஆடுகளுக்காக வருத்தப்படுவதில்லை.
6 நான் இந்நாட்டில் வாழ்கிற ஜனங்களுக்காக வருத்தப்படுவதில்லை.” கர்த்தர் இவற்றைச் சொன்னார்: “பார், நான் ஒவ்வொருவரையும் அவர்களது அயலகத்தாரும், அரசனும் அடக்கியாண்டு அவர்களது நாட்டினை அழிக்கும்படி விடுவேன். அப்போது நான் அவர்களைத் தடுப்பதில்லை!”
7 எனவே, நான் கொல்லப்படுவதற்குரிய அந்தப் பரிதாபத்துக்குரிய ஆடுகளை மேய்ப்பேன். நான் இரண்டு கோல்களை கண்டெடுப்பேன். ஒன்றிற்கு அனுக்கிரகம் என்றும் இன்னொன்றிற்கு ஒற்றுமை என்றும் பேரிடுவேன். பின்னர், நான் ஆடுகளை மேய்க்கத் தொடங்குவேன்.
8 நான் ஒரே மாதத்தில் மூன்று மேய்ப்பர்களைக் கொன்றுப்போட்டேன். நான் ஆடுகளின் மேல் கோபமுற்றேன். அவை என்னை வெறுக்க தொடங்கின.
9 பின்னர், “நான் உங்களை கவனியாமல் நிறுத்திவிடுவேன். நான் உங்களை இனிமேல் மேய்ப்பதில்லை. நான் அவற்றில் மரிக்க விரும்புகிறவர்களை மரிக்கட்டும் என்று விடுவேன். நான் அவற்றில் அழிய விரும்புகிறவர்கள் அழியட்டும் என்று விடுவேன். மீதியானவை ஒன்றை ஒன்று அழிக்கும்.”
10 பிறகு நான் அனுக்கிரகம் என்ற கோலை எடுத்தேன். நான் அதனை உடைத்தேன். தேவன் அனைத்து ஜனங்களோடும் செய்த உடன்படிக்கை உடைந்துபோனது என்பதைச் காட்டவே இதனைச் செய்தேன்.
11 அந்நாளில் உடன்படிக்கை முடிந்தது. எனக்காகக் காத்திருந்த பரிதாபத்திற்குரிய ஆடுகள், இச்செய்தி கர்த்தரிடமிருந்து வந்தது என்பதை அறிந்தன.
12 பிறகு நான் சொன்னேன், “நீங்கள் எனக்குக் கூலி கொடுக்க விரும்பினால் கொடுங்கள். இல்லாவிட்டால் வேண்டாம்.” எனவே அவர்கள் எனக்கு 30 வெள்ளிக் காசுகளைக் கொடுத்தார்கள்.
13 பிறகு கர்த்தர் என்னிடம், “நான் இவ்வளவே மதிப்புள்ளவன் என்று அவர்கள் நினைக்கிறார்கள். எனவே அத்தொகையை ஆலயக் கருவூலத்தில் எறி” என்றார். எனவே நான் முப்பது வெள்ளிகாசுகளை எடுத்து கர்த்தருடைய ஆலயக் கருவூலத்தில் எறிந்தேன்.
14 பின்னர் நான் ஒற்றுமை என்ற கோலை, இரண்டு துண்டுகளாக உடைத்தேன். யூதாவும், இஸ்ரவேலும் கொண்ட ஒற்றுமை உடைந்தது என்று காட்டவே இவ்வாறு செய்தேன்.
15 பிறகு கர்த்தர் என்னிடம், “மதியற்ற மேய்ப்பனொருவன் பயன்படுத்தும் பொருட்களை இப்பொழுது நீ எடுத்துக்கொள்.
16 இது நான் இந்த நாட்டுக்குப் புதிய மேய்ப்பனை ஏற்படுத்துவேன் என்பதைக் காட்டும். ஆனால் இந்த இளைஞனால் இழந்துப்போன ஆடுகளைப் பேணிக்காக்க இயலாது. அவனால் காயப்பட்ட ஆடுகளைக் குணப்படுத்தவும் முடியாது. அவனால் மெலிந்தவற்றுக்கு ஊட்ட முடியாது. அவன் கொழுத்தவற்றை முழுமையாக உண்பான். அவற்றின் குளம்புகள் மட்டுமே மீதியாகும்” என்றார்.
17 ஓ! எனது பயனற்ற மேய்ப்பனே, நீ என் மந்தையைக் கைவிட்டாய். அவனைத் தண்டித்துவிடு. அவனது வலது கண்ணையும், கையையும் வாளால் வெட்டு. அவனது வலது கை பயனற்றுப்போகும். அவனது வலது கண் குருடாகும்.
சகரியா 11 ERV IRV TRV