யாத்திராகமம் 7:14

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: பார்வோனின் இருதயம் கடினமாயிற்று; ஜனங்களை விடமாட்டேன் என்கிறான்.

யாத்திராகமம் 7:15

காலமே நீ பார்வோனிடத்துக்குப் போ, அவன் நதிக்குப் புறப்பட்டு வருவான்; நீ அவனுக்கு எதிராக நதியோரத்திலே நின்று, சர்ப்பமாக மாறின கோலை உன் கையிலே பிடித்துக்கொண்டு,

யாத்திராகமம் 7:16

அவனை நோக்கி: வனாந்தரத்தில் எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களை அனுப்பிவிட வேண்டும் என்று சொல்லும்படி எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் என்னை உம்மிடத்திற்கு அனுப்பியும், இதுவரைக்கும் நீர் கேளாமற்போனீர்.

யாத்திராகமம் 7:17

இதோ, என் கையிலிருக்கிற கோலினால் நதியில் இருக்கிற தண்ணீர் மேல் அடிப்பேன்; அப்பொழுது அது இரத்தமாய் மாறி,

யாத்திராகமம் 7:18

நதியில் இருக்கிற மீன்கள் செத்து, நதி நாறிப்போம்; அப்பொழுது நதியில் இருக்கிற தண்ணீரை எகிப்தியர் குடிக்கக் கூடாமல் அரோசிப்பார்கள்; இதினால் நானே கர்த்தர் என்பதை அறிந்துகொள்வாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

யாத்திராகமம் 7:19

மேலும், கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஆரோனிடத்தில் உன் கோலை எடுத்து எகிப்தின் நீர் நிலைகளாகிய அவர்கள் வாய்க்கால்கள்மேலும் நதிகள்மேலும் குளங்கள்மேலும் தண்ணீர் நிற்கிற எல்லா இடங்கள் மேலும், அவைகள் இரத்தமாகும் படிக்கு, உன் கையை நீட்டு; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மரப் பாத்திரங்களிலும் கற்பாத்திரங்களிலும் இரத்தம் உண்டாயிருக்கும் என்று சொல் என்றார்.

யாத்திராகமம் 7:20

கர்த்தர் கட்டளையிட்டபடி மோசேயும் ஆரோனும் செய்தார்கள்; பார்வோனுடைய கண்களுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரரின் கண்களுக்கு முன்பாகவும் கோலை ஓங்கி; நதியிலுள்ள தண்ணீரை அடிக்க, நதியிலுள்ள தண்ணீரெல்லாம் இரத்தமாய் மாறிப்போயிற்று.

யாத்திராகமம் 7:21

நதியின் மீன்கள் செத்து, நதி நாறிப்போயிற்று; நதியின் தண்ணீரைக் குடிக்க எகிப்தியருக்குக் கூடாமற் போயிற்று, எகிப்து தேசமெங்கும் இரத்தமாயிருந்தது.

யாத்திராகமம் 7:22

எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திர வித்தையினால் அப்படிச் செய்தார்கள்; கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது. அவர்களுக்குச் செவிகொடாமற் போனான்.

யாத்திராகமம் 7:23

பார்வோன் இதையும் சிந்தியாமல், தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான்.

யாத்திராகமம் 7:24

நதியின் தண்ணீர் குடிக்க உதவாதபடியால், குடிக்கத்தக்க தண்ணீருக்காக எகிப்தியர் எல்லாரும் நதியோரத்தில் ஊற்றுத் தோண்டினார்கள்.