ரூத் 3 ERV ஒப்பிடு Tamil Easy Reading Version
1 பிறகு நகோமி ரூத்திடம், “என் மகளே, உனக்காக நான் ஒரு நல்ல கணவனையும், சிறந்த வீட்டையும் ஏற்பாடு செய்ய வேண்டும். அதுதான் உனக்கும் நல்லது.
2 அதற்கு போவாஸ் சரியான மனிதனாக இருக்கலாம். போவாஸ் நமது நெருக்கமான உறவினன். நீ அவனது வேலைக்காரிகளோடு வேலை செய்திருக்கிறாய். இன்று இரவு களத்தில் தானியத்தைப் போரடிக்கும் இடத்தில் அவன் வேலை செய்வான்.
3 நீ குளித்து நன்றாக ஆடை அணிந்துகொள். தானியத்தை போரடிக்கும் களத்திற்குப் போ. அவன் இரவு உண்டு முடிக்கும்வரை போவாஸின் கண்ணில் படாமல் இரு.
4 அவன் உண்டு முடித்ததும், ஓய்வுக்காகப் படுப்பான். அவனையே கவனித்துக்கொண்டிருந்தால் அவன் படுக்கும் இடத்தை நீ அறிந்து கொள்ள முடியும். அங்கேபோய் அவனது காலை மூடியிருக்கும் போர்வையை ஒதுக்கிவிட்டு அவனோடு படுத்துக்கொள். நீ திருமணத்துக்காகச் செய்ய வேண்டியதைப்பற்றி அவன் உனக்குக் கூறுவான்” என்றாள்.
5 பிறகு ரூத், “நீங்கள் சொன்னபடியே நான் செய்வேன்” என்று பதில் சொன்னாள்.
6 எனவே ரூத் தானியத்தைப் போரடிக்கும் களத்திற்குச் சென்றாள். ரூத் தனது மாமியார் சொன்னபடியே எல்லாவற்றையும் செய்து முடித்தாள்.
7 உணவை உண்டு, குடித்தபின் போவாஸ் மிகவும் மனநிறைவோடு இருந்தான். அவன் ஒரு தானிய அம்பாரத்துக்கு அடியிலே படுத்துக்கொண்டான். பிறகு ரூத் அமைதியாக அவன் அருகிலே சென்று காலருகே போர்வையை விலக்கிவிட்டு படுத்துக்கொண்டாள்.
8 நடு இரவில் போவாஸ் தூக்கத்தில் புரண்டு படுத்தான். அப்போது விழிப்பு வந்தது. தன் காலடியில் ஒரு பெண் படுத்திருப்பதைக் கண்டு அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
9 போவாஸ் அவளிடம், “யார் நீ?” என்று கேட்டான். அவளோ, “நான் உங்கள் வேலைக்காரியான ரூத். உங்கள் போர்வையை என்மேல் மூடுங்கள். நீங்களே எனது பாதுகாவலர்” என்றாள்.
10 பிறகு போவாஸ், “இளம்பெண்ணே! கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கட்டும். நீ என்னிடம் கருணை உடையவளாய் இருக்கிறாய். நீ உன் மாமியாரின் பேரில் வைத்திருக்கும் கருணையைவிட என்மீது வைத்திருக்கும் கருணை மிகவும் உயர்ந்தது. ஏழையோ பணக்காரனோ, உன்னால் ஒரு இளைஞனை மணந்திருக்க முடியும். ஆனால் நீ அவ்வாறு செய்யவில்லை.
11 இளம் பெண்ணே, இனிமேல் நீ பயப்பட வேண்டாம். நீ கேட்கும் உதவியை உனக்குச் செய்வேன். நீ மிகவும் சிறந்த பெண் என்பதை நகரத்தில் உள்ள அனைவரும் அறிவார்கள்.
12 நான் உனது நெருங்கிய உறவினன் என்பதும் உண்மைதான். ஆனால் என்னைவிட நெருக்கமான உறவினன் ஒருவன் உனக்கு இருக்கிறான்.
13 இன்று இரவு இங்கேயே தங்கியிரு. காலையில் அவன் உனக்கு உதவுவானா என்று பார்க்கலாம். அவன் உனக்கு உதவுவதாகத் தீர்மானித்துவிட்டால் அது மிகவும் நல்லதாக இருக்கும். ஒருவேளை அவன் மறுத்துவிட்டால், பிறகு கர்த்தருடைய பேரால் ஆணையிட்டுக் கூறுகிறேன், நானே உன்னை மணந்துகொள்வேன். உனக்காக எலிமெலேக்கின் நிலத்தையும் வாங்கித் தருவேன். எனவே காலைவரை இங்கேயே படுத்திரு” என்றான்.
14 எனவே ரூத், போவாஸின் காலருகே காலைவரை படுத்திருந்தாள். விடியும் முன், இருள் இருக்கும்போதே ரூத் எழுந்தாள். போவாஸ் அவளிடம், “நேற்று இரவு நீ இங்கே வந்தது. நமக்குள் இரகசியமாக இருக்கட்டும்” என்று கூறினான்.
15 மேலும் அவன், “உனது போர் வையைக் கொண்டு வா. அதனை விரித்துப்பிடி” என்று கூறினான். எனவே ரூத் போர்வையை விரித்துப் பிடித்தாள், போவாஸ் அதில் ஆறுபடி வாற்கோதுமையை அளந்துபோட்டான். அதை நகோமிக்குத் தனது அன்பளிப்பாகக் கொடுக்கச் சொன்னான். பிறகு அதை அவளது முதுகில் ஏற்றிவிட்டு, நகரத்தை நோக்கி போவாஸ் போனான்.
16 ரூத் தனது மாமியாரான நகோமி இருந்த வீட்டிற்குப் போனாள். நகோமி கதவருகே வந்து, “யாரங்கே?” என்று கேட்டாள். ரூத் வீட்டிற்குள்ளே போய் போவாஸ் அவளுக்காகச் செய்ததை எல்லாம் எடுத்துச் சொன்னாள்.
17 அவள், “போவாஸ் உங்களுக்கு அன்பளிப்பாக இதை என்னிடம் கொடுத்தார். உங்களுக்கு அன்பளிப்பாக எதையும் எடுத்துச் செல்லாமல் நான் வீட்டுக்குப் போகக் கூடாது என்று சொன்னார்” என்றாள்.
18 அதற்கு நகோமி, “மகளே, என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ளும்வரை பொறுமையாக இருப்போம். தான் செய்ய வேண்டியவற்றை போவாஸ் செய்து முடிக்கும்வரை ஓய்வெடுக்கமாட்டான். என்ன நடக்கப் போகிறது என்பதை இன்று இரவுக்குள் நாமறிவோம்” என்றாள்.