சங்கீதம் 72 ERV ஒப்பிடு Tamil Easy Reading Version
1 தேவனே, அரசனும் உம்மைப்போன்று ஞானமுள்ள முடிவுகளை எடுக்க அவருக்கு உதவும். உமது நல்லியல்பை அரசனின் மகனும் அறிந்துகொள்ள உதவும்.
2 அரசன் உமது ஜனங்களுக்குத் தகுதியான நீதி வழங்க உதவும். உமது ஏழை ஜனங்களுக்காக ஞானமுள்ள முடிவுகளை எடுக்க அவனுக்கு உதவும்.
3 தேசம் முழுவதும் சமாதானமும் நீதியும் நிலவட்டும்.
4 ஏழைகளுக்கு அரசன் நல்லவனாக இருக்கட்டும். திக்கற்றோருக்கு அவன் உதவட்டும். அவர்களைத் தாக்குவோரை அவன் தண்டிக்கட்டும்.
5 சூரியன் ஒளிவிடும் மட்டும், சந்திரன் வானிலுள்ள மட்டும் ஜனங்கள் அரசனுக்குப் பயந்து அவனை மதிப்பார்கள் என நான் நம்புகிறேன். என்றென்றும் ஜனங்கள் அவனுக்குப் பயந்து அவனை மதிபார்கள் என நான் நம்புகிறேன்.
6 வயலில் விழும் மழையைப்போன்றிருக்க அரசனுக்கு உதவும். பூமியில் விழும் தூறலைப் போன்றிருக்க அவனுக்கு உதவும்.
7 அவன் அரசனாக இருக்கும்போது நன்மை மலரட்டும். சந்திரன் இருக்கும்மட்டும் சமாதானம் நிலவட்டும்.
8 ஐபிராத்து நதியிலிருந்து பூமியின் தூரத்து எல்லை வரைக்கும், கடலிலிருந்து கடல் வரைக்கும் அவன் அரசு பெருகட்டும்.
9 பாலைவனத்தில் வாழும் எல்லா ஜனங்களும் அவனுக்குத் தலை வணங்குவார்கள். புழுதியில் முகத்தைப் புதைத்து அவன் பகைவர்கள் அவனுக்கு முன்பாக விழுந்து வணங்கட்டும்.
10 தர்ஷீசின் அரசர்களும் தூரத்துத் தேசங்களின் அரசர்களும் அவனுக்குப் பரிசுகளைக் கொண்டுவரட்டும். ஷேபாவிலும், சேபாவிலுமுள்ள அரசர்கள் தங்கள் கப்பத்தை அவனுக்குக் கொண்டுவரட்டும்.
11 எல்லா அரசர்களும் நமது அரசனை விழுந்து வணங்கட்டும். எல்லா தேசங்களும் அவனுக்குச் சேவை செய்யட்டும்.
12 நமது அரசன் திக்கற்றோருக்கு உதவுகிறார். ஏழையான திக்கற்ற ஜனங்களுக்கு நம் அரசன் உதவுகிறார்.
13 ஏழையான திக்கற்ற ஜனங்கள் நம் அரசனைச் சார்ந்திருப்பார்கள். அரசன் அவர்களை உயிரோடு வாழச் செய்கிறார்.
14 அவர்களைத் துன்புறுத்த முயலும் கொடியோரிடமிருந்து அரசன் அவர்களைக் காப்பாற்றுகிறார். அந்த ஏழை ஜனங்களின் உயிர்கள் அரசனுக்கு மிக முக்கியமானவை.
15 அரசன் நீடூழி வாழ்க! அவர் சேபாவின் பொன்னைப் பெறட்டும். எப்போதும் அரசனுக்காக ஜெபம் செய்யுங்கள். ஒவ்வொரு நாளும் அவரை ஆசீர்வதியுங்கள்.
16 வயல் நிலங்கள் மிகுதியான தானியத்தை விளைவிக்கட்டும். மலைகளும் பயிர்களால் நிரம்பட்டும். நிலங்களில் புல் வளர்வது போன்று நகரங்கள் ஜனங்களால் நிரம்பட்டும்.
17 அரசன் என்றென்றும் புகழ்பெறட்டும். சூரியன் ஒளிவிடும்மட்டும் ஜனங்கள் அவர் நாமத்தை நினைவுகூரட்டும். ஜனங்கள் அவரால் ஆசீர்வதிக்கப்படட்டும். அவர்கள் எல்லோரும் அவரை வாழ்த்தட்டும்.
18 இஸ்ரவேலரின் தேவனாகிய, கர்த்தராகிய தேவனைத் துதியுங்கள். தேவன் ஒருவரே அத்தகைய அற்புதமான காரியங்களைச் செய்யமுடியும்.
19 அவரது மகிமைபொருந்திய நாமத்தை என்றென்றும் துதியுங்கள்! அவரது மகிமை முழு உலகத்தையும் நிரப்பட்டும்! ஆமென், ஆமென்!
20 ஈசாயின் மகனாகிய தாவீதின் ஜெபங்கள் இங்கு முடிகின்றன.