1 கர்த்தர் மேன்மையானவர். தேவன் தமது பரிசுத்த நகரில் துதிக்குரியவர்.
2 தேவனுடைய பரிசுத்த நகரம் அழகானது. அது உலகை சுற்றியுள்ள அனைத்து ஜனங்களையும் மகிழ்ச்சியடைச் செய்யும். சீயோன் மலை உயர்ந்த, பரிசுத்த மலை. அதுவே பேரரசரின் நகரமாகும்.
3 அந்நகரத்து அரண்மனைகளில் தேவனே கோட்டை என்று எண்ணப்படுவார்.
4 ஒருமுறை, சில அரசர்கள் சந்தித்து, இந்நகரைத் தாக்கத் திட்டமிட்டார்கள். அவர்கள் ஒருமித்து நகரை நோக்கி அணிவகுத்தார்கள்.
5 அவ்வரசர்கள் அந்நகரைக் கண்டதும், ஆச்சரியமடைந்து, பயந்து, திரும்பி ஓடினார்கள்.
6 அச்சம் அவர்களை ஆட்கொண்டது. அவர்கள் பயத்தால் நடுங்கினார்கள்.
7 தேவனே, நீர் வலிய கிழக்குக் காற்றால் பெருங்கப்பல்களை உடைத்தீர்.
8 ஆம், உமது வல்லமையான காரியங்களை நாங்கள் கேள்விப்பட்டோம். ஆனால், சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய நகரில், எங்கள் தேவனுடைய நகரில் அது நிகழக்கண்டோம். தேவன் அந்நகரை என்றும் வலிமையுள்ள நகராக்கினார்.
9 தேவனே, உமது ஆலயத்தில் உமது அன்பான தயவைக் கவனமாக நினைத்துப் பார்த்தோம்.
10 தேவனே, நீர் புகழ் வாய்ந்தவர், பூமியெங்கும் ஜனங்கள் உம்மைத் துதிக்கின்றனர். நீர் மிக நல்லவர் என்பதை அனைவரும் அறிவோம்.
11 தேவனே, உமது நல்ல முடிவுகளால் சீயோன் மலை மகிழ்கிறது. யூதாவின் ஊர்கள் களிகூருகின்றன.
12 சீயோனைச் சுற்றி நட. நகரைப் பார். கோபுரங்களை எண்ணிப்பார்.
13 அந்த உயர்ந்த சுவர்களைப் பார். சீயோனின் அரண்மனைகளை வியப்புடன் பார். வரும் தலைமுறைக்கு அதைப்பற்றி நீ கூறலாம்.
14 இந்த தேவன் என்றென்றும் உண்மையாகவே நமது தேவன். அவர் என்றென்றும் நம்மை வழி நடத்துவார்.
சங்கீதம் 48 ERV IRV TRV