1 கர்த்தர் என் கன்மலை. கர்த்தரைப் போற்றுங்கள். கர்த்தர் என்னைப் போருக்குப் பழக்கப்படுத்துகிறார். கர்த்தர் என்னை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.
2 கர்த்தர் என்னை நேசித்து என்னைப் பாதுக்காக்கிறார். மலைகளின் உயரத்தில் கர்த்தரே என் பாதுகாப்பிடம். கர்த்தர் என்னை விடுவிக்கிறார். கர்த்தர் எனது கேடகம். நான் அவரை நம்புகிறேன். நான் என் ஜனங்களை ஆள்வதற்குக் கர்த்தர் உதவுகிறார்.
3 கர்த்தாவே, நீர் ஏன் ஜனங்களை முக்கியமானவர்களாகக் கருதுகிறீர்? நீர் ஏன் அவர்களைக் கண்ணோக்கிக்கொண்டு இருக்கிறீர்?
4 ஊதும் காற்றைப்போன்று ஒருவனின் வாழ்க்கை உள்ளது. மறையும் நிழலைப் போன்றது மனித வாழ்க்கை.
5 கர்த்தாவே, வானங்களைக் கிழித்துக் கீழே வாரும். மலைகளைத் தொடும், அவற்றிலிருந்து புகை எழும்பும்.
6 கர்த்தாவே, மின்னலை அனுப்பி என் பகைவர்களை ஓடிவிடச் செய்யும். உமது “அம்புகளைச்” செலுத்தி அவர்கள் ஓடிப்போகச் செய்யும்.
7 கர்த்தாவே, பரலோகத்திலிருந்து இறங்கி வந்து என்னைக் காப்பாற்றும்! பகைவர்களின் கடலில் நான் அமிழ்ந்துபோக விடாதேயும். இந்த அந்நியர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
8 இப்பகைவர்கள் பொய்யர்கள். அவர்கள் உண்மையில்லாதவற்றைக் கூறுகிறார்கள்.
9 கர்த்தாவே, நீர் செய்யும் அற்புதமான காரியங்களைப்பற்றி நான் ஒரு புதிய பாடலைப் பாடுவேன். நான் உம்மைத் துதிப்பேன். பத்து நரம்பு வீணையை நான் மீட்டுவேன்.
10 அரசர்கள் போர்களில் வெற்றி காண, கர்த்தர் உதவுகிறார். பகைவர்களின் வாள்களிலிருந்து கர்த்தர் அவரது ஊழியனாகிய தாவீதைக் காப்பாற்றினார்.
11 இந்த அந்நியர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும். இப்பகைவர்கள் பொய்யர்கள். அவர்கள் உண்மையில்லாதவற்றைக் கூறுகிறார்கள்.
12 நம் இளமகன்கள் பலத்த மரங்களைப் போன்றவர்கள். நம் இளமகள்கள் அரண்மனையின் அழகிய அலங்கார ஒப்பனைகளைப் போன்றிருக்கிறார்கள்.
13 நம் களஞ்சியங்கள் பலவகை தானியங்களால் நிரம்பியிருக்கின்றன. நம் வயல்களில் ஆயிரமாயிரம் ஆடுகள் உள்ளன.
14 நம் வீரர்கள் பாதுகாப்பாயிருக்கிறார்கள். எந்தப் பகைவனும் உள்ளே நுழைய முயலவில்லை. நாங்கள் போருக்குச் செல்லவில்லை. ஜனங்கள் நம் தெருக்களில் கூக்குரல் எழுப்பவில்லை.
15 இத்தகைய காலங்களில் ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். கர்த்தர் அவர்கள் தேவனாக இருக்கும்போது ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
சங்கீதம் 144 ERV IRV TRV