சங்கீதம் 109 ERV ஒப்பிடு Tamil Easy Reading Version
1 தேவனே, என் ஜெபத்திற்கு உமது காதுகளை மூடிக்கொள்ளாதேயும்.
2 தீயோர் என்னைப்பற்றிப் பொய்களைக் கூறுகிறார்கள். உண்மையற்ற காரியங்களை அவர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
3 என்னைப்பற்றி ஜனங்கள் வெறுப்படையும் காரியங்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எந்தக் காரணமுமின்றி அவர்கள் என்னைத் தாக்குகிறார்கள்.
4 நான் அவர்களை நேசித்தேன், அவர்களோ என்னைப் பகைக்கிறார்கள். எனவே இப்போது, தேவனே, உம்மை நோக்கி ஜெபம் செய்கிறேன்.
5 நான் அந்த ஜனங்களுக்கு நன்மையான காரியங்களைச் செய்தேன். ஆனால் அவர்களோ எனக்குத் தீய காரியங்களைச் செய்கிறார்கள். நான் அவர்களை நேசித்தேன். ஆனால் அவர்களோ, என்னைப் பகைத்தார்கள்.
6 அவன் செய்த தீயக் காரியங்களுக்காக எனது பகைவனைத் தண்டியும். அவன் தவறானவனென்று நிரூபிக்கும் ஒருவனைக் கண்டுபிடியும்.
7 என் பகைவன் தவறு செய்ததையும், அவனே குற்றவாளி என்பதையும் நீதிபதி முடிவு செய்யட்டும். என் பகைவன் கூறுபவை யாவும் அவனுக்கே மேலும் தீமையைத் தேடித்தரட்டும்.
8 என் பகைவன் உடனே மடியட்டும். அவன் பதவியை மற்றொருவன் பெறட்டும்.
9 என் பகைவனின் குழந்தைகள், அநாதைகளாகி, அவன் மனைவி விதவையாகட்டும்.
10 அவர்கள் தங்கள் வீட்டை இழந்து பிச்சைக்காரர்களாகட்டும்.
11 என் பகைவனிடம் கடன்பட்டிருக்கிற ஜனங்கள் அவனுக்குச் சொந்தமான பொருட்களை எடுத்துக்கொள்ளட்டும். அவன் உழைத்த எல்லாப் பொருட்களையும் எவராவது எடுத்துக்கொள்ளட்டும்.
12 என் பகைவனுக்கு ஒருவனும் இரக்கம் காட்டமாட்டான் என நான் நம்புகிறேன். ஒருவனும் அவனது குழந்தைகளுக்குக் கிருபை காட்டமாட்டான் எனவும் நான் நம்புகிறேன்.
13 என் பகைவனை முற்றிலும் அழியும். அடுத்த தலைமுறையினர் அவன் பெயரை எல்லாவற்றிலிருந்தும் அகற்றிப்போடட்டும்.
14 என் பகைவனின் தந்தையின் பாவங்களை கர்த்தர் நினைவில்கொள்வார் என்று நான் நம்புகிறேன். அவனது தாயின் பாவங்கள் என்றும் நீக்கப்படுவதில்லை என நான் நம்புகிறேன்.
15 கர்த்தர் அப்பாவங்களை என்றென்றும் நினைவு கூருவார் என நான் நம்புகிறேன். ஜனங்கள் என் பகைவனை முற்றிலும் மறந்துப்போகும்படி அவர் ஜனங்களை வற்புறுத்துவார் என நான் நம்புகிறேன்.
16 ஏனெனில் அத்தீய மனிதன் ஒருபோதும் நன்மை செய்ததில்லை. அவன் ஒருபோதும் எவரையும் நேசித்ததில்லை. அவன் ஏழைகள், திக்கற்றோர் ஆகியோரின் வாழ்க்கை கடினமாகும்படி செய்தான்.
17 பிறருக்குத் தீயவை நிகழ வேண்டுமெனக் கேட்பதில் அத்தீயவன் ஆர்வமுடையவனாக இருந்தான். எனவே அத்தீமைகள் அவனுக்கு நேரிடட்டும். அத்தீய மனிதன் ஒருபோதும் ஜனங்களுக்கு நல்லவை நிகழ வேண்டுமெனக் கேட்டதில்லை.
18 சாபங்கள் அவன் ஆடைகளாகட்டும். சாபங்கள் அவன் பருகும் தண்ணீராகட்டும். சாபங்கள் அவன் சரீரத்தின் மீது எண்ணெயாகட்டும்.
19 சாபங்கள் அத்தீயோனைச் சுற்றியிருக்கும் ஆடைகளாகட்டும். சாபங்கள் அவன் இடுப்பைச் சுற்றியிருக்கும் கச்சையாகட்டும்.
20 என் பகைவனுக்கு அக்காரியங்கள் அனைத்தையும் கர்த்தர் செய்வார் என நான் நம்புகிறேன். என்னைக் கொல்ல முயன்றுக்கொண்டிருக்கிற எல்லா ஜனங்களுக்கும் கர்த்தர் அவற்றைச் செய்வார் என நான் நம்புகிறேன்.
21 கர்த்தாவே, நீரே என் ஆண்டவர். எனவே உமது நாமத்துக்குப் பெருமைதரும் வழியில் என்னைக் கவனியும். உமக்கு மிகுதியான அன்பு உண்டு எனவே என்னைக் காப்பாற்றும்.
22 நான் ஏழையும் திக்கற்றவனுமான மனிதன். நான் உண்மையிலேயே கவலையடைகிறேன். என் இருதயம் நொறுங்கிப்போகிறது.
23 என் வாழ்க்கை பகலின் முடிவை அறிவிக்கும் நீண்ட நிழலைப்போன்றது என நான் உணர்கிறேன். சிலர் தள்ளிவிடும் பூச்சியைப்போல் உணருகிறேன்.
24 நான் பசியாயிருப்பதால் என் முழங்கால்கள் சோர்ந்துள்ளன. நான் எடை குறைந்து மெலிந்து போகிறேன்.
25 தீய ஜனங்கள் என்னை அவமானப்படுத்துகிறார்கள். அவர்கள் என்னைப் பார்த்துத் தலையைக் குலுக்கிக்கொள்கிறார்கள்.
26 என் தேவனாகிய கர்த்தாவே, எனக்கு உதவும்! உமது உண்மையான அன்பை வெளிப்படுத்தி, என்னைக் காப்பாற்றும்!
27 நீர் எனக்கு உதவினீரென்று அப்போது அந்த ஜனங்கள் அறிவார்கள். உமது வல்லமை எனக்கு உதவிற்று என்பதையும் அவர்கள் அப்போது அறிவார்கள்.
28 அத்தீயோர் என்னைச் சபித்தனர். ஆனாலும் கர்த்தாவே, நீர் என்னை ஆசீர்வதிக்க முடியும். அவர்கள் என்னைத் தாக்கினார்கள், அவர்களைத் தோற்கடியும். அப்போது உமது ஊழியனாகிய நான் சந்தோஷமடைவேன்.
29 என் பகைவர்களை வெட்கப்படுத்தும்! அவர்கள் தங்கள் வெட்கத்தை ஒரு மேலாடையைப் போல் அணிந்துகொள்ளட்டும்.
30 நான் கர்த்தருக்கு நன்றிக் கூறுகிறேன். பலர் முன்னிலையில் நான் அவரைத் துதிப்பேன்.
31 ஏனெனில் கர்த்தர் திக்கற்றோருக்கு சார்பாக இருக்கிறார். அவர்களை மரணத்திற்கென்று குற்றம்சாட்ட முயல்வோரிடமிருந்து தேவன் அவர்களைக் காப்பாற்றுகிறார்.