நீதிமொழிகள் 16 ERV ஒப்பிடு Tamil Easy Reading Version
1 ஜனங்கள் திட்டமிடுகின்றனர். ஆனால் காரியங்களை நிறைவேறச் செய்பவரோ கர்த்தர்.
2 ஒருவன் தான் செய்வதெல்லாம் சரி என்று நினைத்துக் கொண்டிருக்கின்றான். ஆனால் கர்த்தர் செயல்களின் காரணங்களை நியாயம் தீர்க்கின்றார்.
3 நீ செய்கிற அனைத்து செயல்களுக்கும் கர்த்தரிடம் உதவிக்கு அணுகினால் நீ வெற்றி அடைவாய்.
4 ஒவ்வொரு காரியத்திற்க்கும் கர்த்தரிடம் ஒரு திட்டம் உள்ளது. கர்த்தருடைய திட்டத்தில் தீயவர்கள் அழிக்கப்படுகிறார்கள்.
5 மற்றவர்களைவிடத் தான் சிறந்தவன் என்று நினைப்பவர்களைக் கர்த்தர் வெறுக்கிறார். இவ்வாறு பெருமைகொள்கின்றவர்களை எல்லாம் கண்டிப்பாகக் கர்த்தர் தண்டிப்பார்.
6 உண்மையான அன்பும் நேர்மையும் உன்னைப் பரிசுத்தமாக்கும். கர்த்தரை மதித்து தீயவற்றிலிருந்து விலகியிரு.
7 ஒருவன் நல்ல வாழ்க்கை வாழ்ந்து, கர்த்தருக்குப் பிரியமானவற்றைச் செய்தால், அவனது பகைவன்கூட அவனுடன் சமாதானமாக வாழ்வான்.
8 ஒருவன் பிறரை ஏமாற்றி அதிகப் பொருள் சம்பாதிப்பதைவிட நல்ல வழியில் கொஞ்சம் பொருள் சம்பாதிப்பது நல்லது.
9 ஒருவன் தான் விரும்புகிறபடியெல்லாம் செய்வதற்குத் திட்டமிடலாம். ஆனால் எது நடக்க வேண்டுமென முடிவு செய்பவர் கர்த்தரே.
10 அரசன் பேசும்போது, அவனது வார்த்தைகள் சட்டமாகும். அவனது முடிவுகள் எப்பொழுதும் சரியாக இருக்கவேண்டும்.
11 எல்லா அளவுக் கருவிகளும் சரியாக இருக்க வேண்டும் என்றும், அனைத்து வியாபார ஒப்பந்தங்களும் நேர்மையாக இருக்கவேண்டும் என்றும் கர்த்தர் விரும்புகின்றார்.
12 தீமை செய்பவர்களை அரசர்கள் வெறுக்கின்றனர். நன்மை அவனது அரசாங்கத்தை வலுவுள்ளதாக்கும்.
13 அரசர்கள் உண்மையைக் கேட்க விரும்புகின்றனர். ஜனங்கள் பொய் சொல்லாமல் இருப்பதை அரசர்கள் விரும்புகின்றனர்.
14 அரசனுக்குக் கோபம் வந்தால் அவன் ஒருவனைக் கொல்லலாம். அறிவுள்ளவர்கள் அரசனை எப்பொழுதும் மகிழ்ச்சி உடையவர்களாகச் செய்வார்கள்.
15 அரசன் மகிழ்ச்சியாக இருக்கும்போது, அனைவரின் வாழ்வும் நன்றாக இருக்கும். உன் காரியங்களால் அரசன் மகிழ்ச்சிகொண்டானெனில், அது மேகத்தில் இருந்து வசந்தகால மழை பொழிவதற்கு ஒப்பாகும்.
16 தங்கத்தைவிட அறிவு மதிப்புமிக்கது. புரிந்துகொள்ளுதல் வெள்ளியைவிட மதிப்புடையது.
17 நல்லவர்கள் தம் வாழ்வைத் தீமையில் இருந்து விலக்கி வைப்பார்கள். தன் வாழ்வில் கவனமாக இருக்கிற ஒருவன், தன் ஆத்துமாவைக் காப்பாற்றிக்கொள்கிறான்.
18 ஒருவன் கர்வம் கொண்டவனாக இருந்தால் அவன் அழிவின் ஆபத்தில் இருக்கிறான். மற்றவர்களைவிடத் தான் சிறந்தவன் என்று நினைப்பவன் தோல்வியின் ஆபத்தில் இருக்கிறான்.
19 மற்றவர்களைவிடத் தம்மைச் சிறந்தவர்களாக நினைப்பவர்களோடு செல்வத்தைப் பங்கிட்டு வாழ்வதைவிட பணிவாகவும், ஏழை ஜனங்களோடும் சேர்ந்து வாழ்வது சிறந்ததாகும்.
20 ஜனங்களின் போதனைகளைக் கவனமாகக் கேட்பவன் பயன் அடைவான். கர்த்தர் மேல் நம்பிக்கை வைப்பவன் ஆசீர்வதிக்கப்படுகிறான்.
21 ஒருவன் அறிவுள்ளவனாக இருப்பதை ஜனங்கள் அறிந்துகொள்வார்கள். வார்த்தைகளைத் தேர்ந் தெடுத்து கவனமாகப் பேசுபவன் நிரூபிக்கும் ஆற்றல் உடையவனாக இருக்கமுடியும்.
22 அறிவானது ஜனங்களுக்கு உண்மையான வாழ்க்கையைத் தரும். ஆனால் அறிவற்றவர்களோ மேலும் முட்டாள் ஆவதையே விரும்புவார்கள்.
23 அறிவுள்ளவர்கள் எப்பொழுதும் பேசுவதற்கு முன்பு சிந்திப்பார்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகள் நல்லவையாகவும் உயர்வானவையாகவும் இருக்கும்.
24 கருணைமிக்க வார்த்தைகள் தேனைப் போன்றவை. அவை ஏற்றுக்கொள்ள எளிமையானவை, உடல் நலத்திற்கும் நல்லது.
25 ஜனங்களுக்குச் சில வழிகள் சரியானதாக தோன்றும். அவ்வழிகள் மரணத்துக்கே அழைத்துச் செல்லும்.
26 உழைப்பாளியின் பசிதான் அவனைத் தொடர்ந்து உழைக்க வைக்கிறது. உண்ணும் பொருட்டு வேலை செய்யும் தூண்டுதலைப் பசியே கொடுக்கிறது.
27 பயனற்றவன் கெட்ட செயல்களைச் செய்யவே திட்டமிடுவான். அவனது அறிவுரை நெருப்பைப்போன்று அழிக்கும்.
28 தொல்லையை உருவாக்குகிறவன் எப்பொழுதும் பிரச்சனைகளை உண்டுபண்ணுகிறான். பொய்ச் செய்திகளைப் பரப்புகிறவன் நெருங்கிய நண்பர்களுக்குள் துன்பத்தை ஏற்படுத்துவான்.
29 தொல்லையை உருவாக்குகிறவன் பல தொல்லைகளுக்குக் காரணமாகிறான். தனது நண்பர்களுக்கு நன்மை தராத வழிகளில் அவர்களை அழைத்துச் செல்கிறான்.
30 அவன் தன் கண்களால் ஜாடை செய்து சிலவற்றை அழிக்கத் திட்டமிடுகிறான். தனது பக்கத்து வீட்டுக்காரனைத் துன்புறுத்த சிரித்துக்கொண்டே திட்டமிடுகிறான்.
31 நல் வாழ்க்கை வாழ்பவர்களின் நரை முடியானது கிரீடத்தைப் போன்று உயர்வானது.
32 வலிமைமிக்க வீரனாக இருப்பதைவிட ஒருவன் பொறுமை மிக்கவனாக இருப்பது நல்லது. ஒரு நகரத்தை அடக்கி ஆள்வதைவிட உன் கோபத்தை அடக்குவது நல்லது.
33 ஜனங்கள் குலுக்கல் சீட்டு மூலம் முடி வெடுக்கின்றனர். ஆனால் அனைத்து முடிவுகளும் தேவனிடமிருந்தே வருகின்றன.