மீகா 6 ERV ஒப்பிடு Tamil Easy Reading Version
1 இப்பொழுது கர்த்தர் என்ன சொல்கிறார் எனக் கேளுங்கள். உனது வழக்கை மலைகளுக்கு முன் சொல். அம்மலைகள் உங்களது வழக்கைக் கேட்க்கட்டும்.
2 கர்த்தர் தமது ஜனங்களுக்கு எதிராக முறையிடுகிறார். மலைகளே, கர்த்தருடைய முறையீட்டைக் கேளுங்கள் பூமியின் அஸ்திபாரங்களே, கர்த்தர் சொல்கிறதைக் கேளுங்கள். இஸ்ரவேல் தவறானது என்று அவர் நிரூபிப்பார்.
3 கர்த்தர் கூறுகிறார், “என் ஜனங்களே, நான் செய்தவற்றைச் சொல்லுங்கள். நான் உங்களுக்கு எதிராக ஏதாவது செய்தேனா? நான் உங்களது வாழ்வைக் கடினமானதாக்கினேனா?
4 நான் செய்தவற்றை உங்களிடம் சொல்லுவேன். நான் உங்களிடம் மோசே, ஆரோன், மீரியாம் ஆகியோரை அனுப்பினேன். நான் உங்களை எகிப்து தேசத்திலிருந்து கொண்டு வந்தேன், நான் உங்களை அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை செய்தேன்.
5 என் ஜனங்களே, மோவாபின் அரசனான பாலாக்கினுடைய தீயத் திட்டங்களை நினைத்துப் பாருங்கள். பேயோரின் மகனான பிலேயம் பாலாக்கிடம் சொன்னவற்றை நினைத்துப்பாருங்கள். அகாசியாவிலிருந்து கில்கால்வரை நடந்தவற்றை நினைத்துப் பாருங்கள். அவற்றை நினைத்துப் பாருங்கள். கர்த்தர் சரியானவர் என்று அறிவீர்கள்.”
6 நான் கர்த்தரை சந்திக்க வரும்போது என்ன கொண்டு வரவேண்டும். நான் தேவனைப் பணியும்போது என்ன செய்ய வேண்டும். நான் கர்த்தருக்கு, தகன பலியும் ஓராண்டு நிறைந்தக் கன்றுக்குட்டியையும் கொண்டு வரவேண்டுமா?
7 கர்த்தர் 1,000 ஆட்டுக்குட்டிகளாலும் 10,000 ஆறுகளில் ஓடும் எண்ணெயாலும் திருப்தி அடைவாரா? நான் எனது முதல் குழந்தையை என் பாவங்களுக்குப் பரிகாரமாகத் தரட்டுமா? என் சரீரத்திலிருந்து வந்த குழந்தையை நான் பாவத்துக்குப் பரிகாரமாகத் தரட்டுமா?
8 மனிதனே, நன்மை எதுவென்று கர்த்தர் உன்னிடம் சொல்லியிருக்கிறார். கர்த்தர் உன்னிடமிருந்து இதைத்தான் விரும்புகிறார். மற்றவர்களிடம் நியாயமாய் இரு. கருணையோடும் நம்பிக்கையோடும் நேசி. உனது தேவனோடு தாழ்மையாய் இரு. நீ அவரை பொக்கிஷத்தினால் கவர முயலாதே.
9 கர்த்தருடைய சத்தம் நகரத்தை நோக்கிக் கூப்பிடுகிறது. “ஞானவான் கர்த்தருடைய நாமத்தை உயர்த்துகிறான். எனவே தண்டனையின் தடியைக் கவனியுங்கள். தண்டனையின் தடியைப் பிடிப்பவரையும் கவனியுங்கள்.
10 தீயவர்கள் தாம் திருடிய சொத்துக்களை இன்னும் மறைத்துவைப்பார்களா? தீயவர்கள் வியாபாரத்தில் மிகச் சிறியக் கூடைகளை வைத்து இன்னும் ஜனங்களை ஏமாற்றுவார்களா? ஆம் இந்த செயல்கலெல்லாம் இன்னும் நடக்கிறது.
11 இன்னும் தமது எடைக்கற்களாலும் அளவு கோல்களாலும் ஜனங்களை ஏமாற்றுகிறவர்களை, நான் மன்னிப்பேனா? கள்ளத் தராசும், கள்ளப் படிக் கற்களுள்ள பையும் வைத்து தவறாக அளக்கிறவர்களை நான் மன்னிப்பேனா? இல்லை.
12 செல்வந்தர்கள் நகரத்தில் இன்னும் கொடுமை செய்கிறார்கள். அந்நகர ஜனங்கள் இன்னும் பொய்ச் சொல்கிறார்கள். ஆமாம், அந்த ஜனங்கள் தம் பொய்களைச் சொல்கின்றனர்.
13 எனவே நான் உன்னைத் தண்டிக்கத் தொடங்கினேன். நான் உன்னுடைய பாவங்களினிமித்தம் உன்னை அழிப்பேன்.
14 நீ உண்பாய், ஆனால் உன் வயிறு நிறையாது. நீ இன்னும் பசியாகவும் வெறுமையாகவும் இருப்பாய். நீ பாதுகாப்புக்காக ஜனங்களை அழைத்துவர முயற்சி செய்வாய். யாரைப் பாதுகாத்தாயோ, அவர்களையும் நான் பட்டயத்துக்கு ஒப்புக்கொடுப்பேன்.
15 விதைகளை விதைப்பாய், ஆனால் உணவை அறுவடை செய்யமாட்டாய். நீ உனது ஒலிவ மரங்களிலிருந்து எண்ணெய் எடுக்க அவற்றை பிழிவாய். ஆனால் எண்ணெய் பெறமாட்டாய். நீ திராட்சைப் பழங்களை பிழிவாய். ஆனால் போதுமான திராட்சைரசம் குடிக்கக் கிடைக்காது.
16 ஏனென்றால் நீ ஓம்ரியின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவாய். நீ ஆகாப் குடும்பம் செய்தத் தீயவற்றைச் செய்வாய். நீ அவர்களின் உபதேசங்களைப் பின்பற்றுவாய். எனவே நான் உன்னை அழியும்படி விடுவேன். ஜனங்கள் உனது அழிந்த நகரங்களைக் காணும்போது பரிகசித்து ஆச்சரியப்படுவார்கள். அந்நிய நாட்டு ஜனங்களின் நிந்தையை நீங்கள் சுமப்பீர்கள்.”