எரேமியா 36 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிம் ஆட்சியேற்ற நான்காம் ஆண்டில் ஆண்டவரிடமிருந்து எரேமியாவுக்கு அருளப்பட்ட வாக்கு;2 நீ ஏட்டுச் சுருள் ஒன்றை எடுத்துக்கொள். நான் உன்னோடு பேசத் தொடங்கின நாள் முதல், அதாவது யோசியாவின் நாள்கள் தொடங்கி இந்நாள்வரை, இஸ்ரயேலைக் குறித்தும், யூதாவைக் குறித்தும், மற்ற எல்லா நாடுகளைக் குறித்தும் நான் உனக்கு உரைத்துள்ள சொற்கள் எல்லாவற்றையும் அச்சுருளில் எழுது.3 யூதா வீட்டாருக்கு நான் அளிக்க எண்ணியுள்ள எல்லாத் தண்டனைகள் பற்றியும் அவர்கள் அனைவரும் கேள்வியுற நேர்ந்தால், அவரவர் தம் தீய வழிகளை விட்டுத் திரும்பக்கூடும். அப்பொழுது அவர்கள் குற்றங்களையும் பாவங்களையும் நான் மன்னிப்பேன்.⒫4 ஆகவே நேரியாவின் மகன் பாரூக்கை எரேமியா தம்மிடம் அழைத்தார். ஆண்டவர் தமக்கு உரைத்திருந்த சொற்களை எரேமியா சொல்லச் சொல்ல பாரூக்கு அவற்றை எல்லாம் ஏட்டுச் சுருளில் எழுதிவைத்தார்.5 பின்னர் எரேமியா பாரூக்குக்குக் கொடுத்த கட்டளை; நான் அடைபட்டிருக்கிறேன். ஆண்டவர் இல்லத்திற்குச் செல்ல என்னால் இயலாது.6 ஆதலால் நீ அங்குப் போ. நோன்பு நாளன்று அங்குக் குழுமியிருக்கும் மக்களின் செவிகளில் விழும்படி, நான் சொல்லச் சொல்ல நீ எழுதி வைத்த ஆண்டவரின் சொற்களை ஏட்டுச்சுருளினின்று படித்துக்காட்டு. தம் நகர்களிலிருந்து அங்குவரும் யூதா மக்கள் அனைவரும் கேட்கும் படியும் நீ அதை வாசித்துக்காட்டு.7 ஒருவேளை அவர்கள் ஆண்டவர் திருமுன் விழுந்து மன்றாடவும், அவரவர் தம் தீய வழிகளை விட்டுத் திரும்பவும் இயலும். ஏனெனில் ஆண்டவர் கடும் சினமுற்று, சீற்றம் கொண்டு, இம்மக்களுக்குத் தீங்கு வருவிப்பதாக அறிவித்துள்ளார்.8 இறைவாக்கினர் எரேமியா கட்டளையிட்டிருந்தவாறே நேரியாவின் மகன் பாரூக்கு ஆண்டவர் இல்லத்தில் ஏட்டுச்சுருளினின்று ஆண்டவருடைய சொற்களைப் படித்துக் காட்டினார்.⒫9 யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிம் ஆட்சியேற்ற ஐந்தாம் ஆண்டு ஒன்பதாம் மாதத்தில் எருசலேம் மக்கள் எல்லாரும், யூதாவின் நகர்களினின்று எருசலேமுக்கு வந்திருந்த மக்கள் அனைவரும் ஆண்டவர் திருமுன் நோன்பு இருந்தனர்.10 அப்பொழுது செயலரான சாப்பானின் மகன் கெமரியாவின் அறையில், அதவாது ஆண்டவர் இல்லத்தின் புதுவாயிலை ஒட்டிய மேல்முற்றத்து அறையில் இருந்தவாறு, மக்கள் எல்லாரும் கேட்கும்படி எரேமியாவின் சொற்களை ஏட்டுச் சுருளினின்று பாரூக்கு படித்துக்காட்டினார்.⒫11 ஏட்டுச் சுருளினின்று படிக்கப் பெற்ற ஆண்டவரின் சொற்கள் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த சாப்பானின் பேரனும் கெமரியா மகனுமான மிக்காயா,12 உடனே அரண்மனைக்கு இறங்கிச் சென்று, செயலரின் அறைக்குள் நுழைந்தார். அங்கே செயலராகிய எலிசாமா, செமாயாவின் மகன் தெலாயா, அக்போரின் மகன் எல்னாத்தான், சாப்பானின் மகன் கெமரியா, அனனியாவின் மகன் செதேக்கியா ஆகியோர் உள்படத் தலைவர்கள் அனைவரும் அமர்ந்திருந்தார்கள்.13 மக்கள் கேட்கும்படி ஏட்டுச் சுருளினின்று பாரூக்கு படித்துக்காட்டியிருந்த சொற்கள் எல்லாவற்றையும் மிக்காயா தலைவர்களிடம் எடுத்துரைத்தார்.14 பின்னர் தலைவர்கள் அனைவரும் சேர்ந்து, கூசியின் கொள்ளுப்பேரனும் செலேமியாவின் பேரனும் நெத்தனியாவின் மகனுமான எகுதியைப் பாரூக்கிடம் அனுப்பிவைத்தார்கள். “மக்கள் செவிகளில் விழும்படி நீ படித்துக் காட்டிய ஏட்டுச்சுருளை உன் கையில் எடுத்துக்கொண்டு வா”, என அவருக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நேரியாவின் மகன் பாரூக்கு ஏட்டுச்சுருளைத் தம் கையில் எடுத்துக்கொண்டு அவர்களிடம் வந்தார்.15 அப்பொழுது அவர்கள் அவரிடம், “நீ இங்கே அமர்ந்து, நாங்கள் கேட்கும்படி அதைப் படி” என்றார்கள். அவரும் அவர்கள் காதில் விழும்படி அதைப் படித்தார்.16 எல்லாச் சொற்களையும் அவர்கள் கேட்டுத் திகிலுற்று, ஒருவர் ஒருவரை நோக்கினர். பின் பாரூக்கைப் பார்த்து, “இவற்றை எல்லாம் நாங்கள் கண்டிப்பாக அரசரிடம் தெரிவிக்க வேண்டும்” என்றார்கள்.17 தொடர்ந்து, “இச்சொற்கள் எல்லாவற்றையும் நீ எவ்வாறு எழுதினாய்? அவன் சொல்ல நீ எழுதினாயா? சொல்” என்று அவர்கள் பாரூக்கை வினவினார்கள்.18 அதற்குப் பாரூக்கு, “எரேமியா சொல்லச் சொல்ல, இவற்றை எல்லாம் நான் மை கொண்டு ஏட்டுச்சுருளில் எழுதினேன்” என்று மறுமொழி கூறினார்.19 அப்பொழுது தலைவர்கள் பாரூக்கை நோக்கி, “நீயும் எரேமியாவும் ஓடி ஒளிந்து கொள்ளுங்கள். நீங்கள் இருக்கும் இடம் யாருக்கும் தெரியாதிருக்கட்டும்” என்றார்கள்.⒫20 செயலர் எலிசாமாவின் அறையிலேயே ஏட்டுச்சுருளை வைத்துவிட்டுத் தலைவர்கள் அரண்மனை முற்றத்திற்குள் சென்று, நடந்த எல்லாவற்றையும் அரசனுக்குத் தெரிவித்தார்கள்.21 அரசனோ ஏட்டுச்சுருளை எடுத்துவருமாறு எகுதியை அனுப்பிவைத்தான். செயலர் எலிசாமாவின் அறையினின்று எகுதி அதை எடுத்துவந்து, அரசனும் அவனைச் சூழ்ந்து நின்ற தலைவர்கள் அனைவரும் கேட்கப் படித்தான்.22 அது ஆண்டின் ஒன்பதாம் மாதம், அரசன் தன் குளிர்கால மாளிகையில் அமர்ந்திருந்தான். அவன்முன் கனல் தட்டில் நெருப்பு எரிந்துகொண்டிருந்தது.23 எகுதி மூன்று அல்லது நான்கு பத்திகளைப் படித்ததும், அரசன் கத்தியால் அப்பகுதியை அறுத்து கனல்தட்டில் இருந்த நெருப்பில் போட்டான். இவ்வாறு ஏட்டுச்சுருள் முழுவதும் எரிந்து சாம்பலாகும் வரை அவன் செய்து கொண்டிருந்தான்.24 அரசனோ இச்சொற்களை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அவனுடைய பணியாளர்களோ அஞ்சவில்லை; தங்கள் ஆடைகளைக் கிழித்துக்கொள்ளவுமில்லை.25 அரசன் ஏட்டுச்சுருளை எரிக்காதவாறு அவனை எல்னாத்தான், தெலாயா, கெமரியா ஆகியோர் வேண்டியும், அவன் அதைப் பொருட்படுத்தவில்லை.26 மாறாக எழுத்தர் பாரூக்கையும் இறைவாக்கினர் எரேமியாவையும் பிடித்து வருமாறு அரசனின் மகன் எரகுமவேல், அஸ்ரியேலின் மகன் செராயா, அப்தவேலின் மகன் செலேமியா ஆகியோருக்கு அரசன் கட்டளையிட்டான். ஆண்டவரோ அவர்களை மறைத்துவைத்திருந்தார்.⒫27 எரேமியா சொல்ல, பாரூக்கு எழுதியிருந்த சொற்கள் அடங்கிய ஏட்டுச்சுருளை அரசன் எரித்த பின்னர் ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது:28 நீ மற்றுமோர் ஏட்டுச்சுருளை எடுத்துக்கொள்; யூதா அரசன் யோயாக்கிம் முன்பு எரித்த ஏட்டுச்சுருளில் அடங்கியிருந்த எல்லாச் சொற்களையும் இதில் எழுதிவை.29 பின்னர் யூதா அசரனான யோயாக்கிமைக் குறித்து நீ சொல்லவேண்டியது: ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: “பாபிலோனிய மன்னன் திண்ணமாய் வந்து, இந்நாட்டை அழித்துவிடுவான்; மனிதரையும் விலங்குகளையும் வெட்டி வீழ்த்துவான் என்று நீ ஏன் எழுதினாய்?” என்று கூறி அன்றோ நீ அந்த ஏட்டுச் சுருளை எரித்தாய்.30 எனவே யூதாவின் அரசன் யோயாக்கிமைக் குறித்து ஆண்டவர் கூறுவது இதுவே; அவன் வழிமரபினருள் எவனும் தாவீதின் அரியணையில் அமரமாட்டான். அவனது பிணம் வெளியில் எறியப்பட்டு, பகலின் வெயிலிலும் இரவின் குளிரிலும் கிடக்கும்.31 அரசனையும் அவன் வழிமரபினர், பணியாளர் ஆகியோரையும் அவர்களின் குற்றங்கள் பொருட்டுத் தண்டிப்பேன். நான் எச்சரித்திருந்தும் அவர்கள் பொருட்படுத்தியிராத தீங்குகளை அவர்கள் மேலும் எருசலேம் குடிகள்மேலும் யூதா மக்கள்மேலும் வரச் செய்வேன்.⒫32 பின்னர் எரேமியா மற்றுமோர் ஏட்டுச்சுருளை எடுத்து, நேரியாவின் மகனும் எழுத்தருமான பாரூக்கிடம் கொடுத்தார். யூதாவின் அரசன் யோயாக்கிம் எரித்த ஏட்டுச்சுருளில் காணப்பட்ட எல்லாச் சொற்களையும் எரேமியா சொல்லச் சொல்லப் பாரூக்கு மீண்டும் அவற்றை ஏட்டுச்சுருளில் எழுதினார். அவை போன்ற வேறு பலசொற்களும் அவற்றோடு சேர்க்கப்பெற்றன.