எரேமியா 24 IRV ஒப்பிடு Tamil Indian Revised Version
1 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யோயாக்கீமின் மகனாகிய எகொனியா என்கிற யூதாவின் ராஜாவையும், யூதாவின் பிரபுக்களையும், எருசலேமிலுள்ள தச்சரையும், கொல்லரையும், சிறைப்பிடித்து, பாபிலோனுக்குக் கொண்டுபோனபின்பு, இதோ, கர்த்தருடைய ஆலயத்தின் முன் வைக்கப்பட்டிருந்த அத்திப்பழங்களுள்ள இரண்டு கூடைகளைக் கர்த்தர் எனக்குக் காண்பித்தார்.
2 ஒரு கூடையில் முதல் அறுவடையின் அத்திப்பழங்களுக்குச் சமானமான மிகவும் நல்ல அத்திப்பழங்களும், மற்ற கூடையில் சாப்பிடமுடியாத மிகவும் கெட்ட அத்திப்பழங்களும் இருந்தது.
3 கர்த்தர் என்னை நோக்கி: எரேமியாவே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்றார்; அதற்கு நான்: அத்திப்பழங்களைக் காண்கிறேன்; நல்லவைகளான அத்திப்பழங்கள் மிகவும் நல்லவைகளும், கெட்டவைகளோ சாப்பிடமுடியாத மிகவும் கெட்டவைகளுமாயிருக்கிறது என்றேன்.
4 அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
5 நான் இவ்விடத்திலிருந்து, கல்தேயர் தேசத்திற்குச் சிறைப்பட்டுப் போகவிட்ட யூதரை நான் இந்த நல்ல அத்திப்பழங்களுக்கு ஒப்பிட்டு, அவர்களுக்கு நன்மையுண்டாக அவர்களை அங்கீகரிப்பேன்.
6 அவர்களுக்கு நன்மையுண்டாக நான் என் கண்களை அவர்கள்மேல் வைத்து, அவர்களை இந்த தேசத்திற்குத் திரும்பிவரச்செய்து, அவர்களைக்கட்டுவேன், அவர்களை இடிக்கமாட்டேன், அவர்களை நாட்டுவேன், அவர்களைப் பிடுங்கமாட்டேன்.
7 நான் கர்த்தர் என்று அறியும் இருதயத்தை அவர்களுக்குக் கொடுப்பேன்; அவர்கள் என் மக்களாக இருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்; அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்திற்குத் திரும்புவார்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.
8 சாப்பிடமுடியாத கெட்ட அத்திப்பழங்களைத் தள்ளிவிடுவதுபோல, நான் சிதேக்கியா என்கிற யூதாவின் ராஜாவையும் அவனுடைய பிரபுக்களையும், இந்த தேசத்தில் மீதியான எருசலேமின் மக்களையும், எகிப்து தேசத்தில் குடியிருக்கிறவர்களையும் தள்ளிவிட்டு,
9 அவர்களுக்குத் தீமையுண்டாக அவர்களை பூமியிலுள்ள எல்லா தேசங்களிலும் அலைந்து திரிகிறவர்களாகவும், நான் அவர்களைத் துரத்திவிட்ட எல்லா இடங்களிலும் நிந்தையாகவும், பழமொழியாகவும், பழிச் சொல்லாகவும், சாபமாகவும் வைத்து,
10 அவர்களுக்கும் அவர்கள் பிதாக்களுக்கும் நான் கொடுத்த தேசத்தில் அவர்கள் இராதபடிக்கு அழியும்வரை, அவர்களுக்குள்ளே பட்டயத்தையும், பஞ்சத்தையும், கொள்ளை நோயையும் அனுப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.