1 மன்னர் அர்த்தக்சஸ்தாவின் ஆட்சிக்காலத்தில் எஸ்ராவோடு பாபிலோனியாவிலிருந்து வந்தவர்களின் குடும்பத் தலைவர்களது தலைமுறை அட்டவணை அவர்களின் மூதாதையர் மரபின்படி பின்வருமாறு:

2 பினகாசின் வழிமரபில் கெர்சோம்; இத்தாமர் வழிமரபில் தானியேல்; தாவீதின் வழிமரபில் ஆற்றூசு;

3 பாரோசு வழிமரபில் செக்கனியாவின் மகன் செக்கரியா; மற்றும் அவரோடு நூற்றைம்பது ஆண்கள்;

4 பாகாத்மோவாபு வழிமரபில் செரெகியாவின் மகன் எல்யகோவனாய்; மற்றும் அவரோடு இருநூறு ஆண்கள்;

5 சாத்து* வழிமரபில் எகசியேலின் மகன் செக்கனியா; மற்றும் அவரோடு முந்நூறு ஆண்கள்;

6 ஆதின் வழிமரபில் யோனத்தானின் மகன் எபேது; அவரோடு ஐம்பது ஆண்கள்;

7 ஏலாமி வழிமரபில் அத்தலியாவின் மகன் ஏசாயா; மற்றும் அவரோடு எழுபது ஆண்கள்;

8 செபத்தியா வழிமரபில் மிக்கேலின் மகன் செபதியா; மற்றும் அவரோடு எண்பது ஆண்கள்;

9 யோவாபு வழிமரபில் எகியேலின் மகன் ஒபதியா; மற்றும் அவரோடு இருநூற்றுப் பதினெட்டு ஆண்கள்;

10 பானி வழிமரபில் யோசிப்பியாவின் மகன் செலோமித்து; மற்றும் அவரோடு நூற்றிருபது ஆண்கள்;

11 பேபாய் வழிமரபில் பேபாயின் மகன் செக்கரியா; மற்றும் அவரோடு இருபத்தெட்டு ஆண்கள்;

12 அஸ்காது வழிமரபில் அக்காற்றானின் மகன் யோகனான்; மற்றும் அவரோடு நூற்றுப்பத்து ஆண்கள்;

13 அதோனிக்காம் வழிமரபில் பிற்காலத்தவர்களான எலிப்பலேற்று எவேல், செமாயா;

14 மற்றும் அவர்களோடு அறுபது ஆண்கள்; பிக்வாயின் வழிமரபில் உத்தாய், சக்கூர்; மற்றும் அவர்களோடு எழுபது ஆண்கள்.

15 அகவா செல்லும் ஆற்றருகில் அவர்களை நான் ஒன்று சேர்த்தேன். அங்கே மூன்று நாள்கள் தங்கியிருந்தோம். மக்களையும் குருக்களையும் பற்றிக் கேட்டறிந்தபோது, அங்கே அவர்களுள் எவரும் லேவியர் இல்லை என்று கண்டேன்.

16 ஆகையால், எலியேசர், அரியேல், செமாயா, எல்நாத்தான், யாரிபு, எல்நாத்தான், நாத்தான், செக்கரியா, மெசுல்லாம் ஆகிய தலைவர்களையும் யோயாரிபு, எல்நாத்தான் ஆகிய ஞானியரையும் என்னிடம் அழைத்தேன்.

17 அவர்களைக் கசிப்பியாவில் இருந்த மக்கள் தலைவரான இத்தோவிடம் அனுப்பி வைத்தேன். கசிப்பியாவில் இருந்த இத்தோவிடம் அவருடைய சகோதரர்களான கோவில் பணியாளர்களிடமும், ‘நம் கடவுளின் இல்லத்திற்குப் பணியாளரை அனுப்புங்கள்’ என்று சொல்லும்படி கூறினேன்.

18 எங்கள் கடவுளின் அருட்கரம் எங்களோடு இருந்ததால், இஸ்ரயேல் இனத்தவரும் லேவியருமான, மக்லியின் புதல்வருள் புத்திக்கூர்மையுடைய செரேபியாவையும், அவருடைய புதல்வர்களும் உறவினர்களுமாகப் பதினெட்டுப் பேரையும்,

19 அசபியாவையும், அவரோடு மெராரியின் புதல்வர்களில் ஒருவரான ஏசாயாவையும் அவருடைய சகோதரர்களும், அவர்களின் புதல்வர்களுமான இருபது பேரையும்,

20 மற்றும் தாவீதும் அவரின் அலுவலர்களும் லேவியர்களுக்கு உதவி செய்யப் பிரித்து வைத்திருந்த இருநூற்று இருபது கோவில் பணியாளரையும் அவர்கள் எங்களிடம் அழைத்து வந்தார்கள். இவர்கள் அனைவரும் தம் பெயர்களைப் பதிவு செய்து கொண்டனர்.

21 இதன்பின் எங்கள் கடவுள்முன் எங்களையே நாங்கள் தாழ்த்திக் கொண்டு, எங்களுக்கும் எங்கள் பிள்ளைகளுக்கும், எங்கள் எல்லா உடைமைகளுக்கும் பயணம் நலமாக அமையவேண்டுமென்று மன்றாடுமாறு, அகவா ஆற்றருகே நோன்பு ஒன்று அறிவித்தேன்.

22 ஏனெனில், வழியில் எதிரிகளிடமிருந்து எங்களைக் காப்பாற்றும்படி காலாட்படையினரையும், குதிரைப்படையினரையும் எங்களோடு அனுப்பி வைக்குமாறு மன்னனைக் கேட்க எனக்கு வெட்கமாக இருந்தது. இதற்குக் காரணம் நாங்கள் மன்னரை நோக்கி, “எங்கள் கடவுளின் அருட்கரம் அவரை நேர்மையுடன் தேடுகிற அனைவர்மீதும் இருக்கின்றது என்றும், அவரைப் புறக்கணிப்பவர்கள் அவரது வலிமைக்கும், சினத்துக்கும் ஆளாவர்கள்” என்றும் சொல்லியிருந்தோம்.

23 எனவே நாங்கள் நோன்பிருந்து, இதற்காக எங்கள் கடவுளிடம், வேண்டிக் கொண்டோம். அவரும் எங்கள் மன்றாட்டைக் கேட்டருளினார்.

24 பின்னர் குருக்களின் தலைவர்கள் பன்னிருவராகிய செரேபியா, அசபியா மற்றும் அவர்களின் உறவினர் பத்துப் பேரைப் பிரித்து, அவர்களிடம்

25 அரசரும் அவருடைய ஆலோசகர்களும் அவருடைய அலுவலர்களும் அங்கிருந்த மக்களும் எங்கள் கடவுளின் இல்லத்திற்குக் காணிக்கையாக அளித்திருந்த வெள்ளி, தங்கம், பாத்திரங்கள் யாவற்றையும் நிறுத்துக் கொடுத்தேன்.

26 அவர்களிடம் நிறுத்துக் கொடுத்தவை: இருபத்தாறு ‘டன்’* நிறைவுள்ள வெள்ளி; நாலாயிரம் கிலோகிராம் நிறைவுள்ள வெள்ளிப் பாத்திரங்கள்; ஆயிரம் பொற்காசு மதிப்புள்ள இருபது பொற் கிண்ணங்கள்;

27 பொன்போன்று மெருகேற்றப்பட்ட இரு வெண்கலப் பாத்திரங்கள்.

28 பின்பு, அவர்களைப் பார்த்து, ‘நீங்கள் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்கள்; இந்தப் பாத்திரங்களும் அர்ப்பணிப்பட்டவையே. இந்த வெள்ளியும் பொன்னும் உங்கள் மூதாதையரின் கடவுளுக்கு அளிக்கப்பட்ட தன்னார்வக் காணிக்கைகள்.

29 நீங்கள் எருசலேமிலுள்ள குருக்களின் தலைவர்கள், லேவியர், இஸ்ரயேல் குலத்தலைவர்கள் ஆகியோர் முன்னிலையில், ஆண்டவரின் இல்லக் கருவூலத்தில் ஒப்படைக்கும்வரை இவற்றைப் பாதுகாத்து வாருங்கள்’ என்று சொன்னேன்.

30 எனவே குருக்களும், வேலியரும் நிறுக்கப்பட்ட வெள்ளி, பொன்பாத்திரங்கள் ஆகியவற்றை எருசலேமிலுள்ள நம் கடவுளின் இல்லதிற்குக் கொண்டுபோகும்படி பெற்றுக் கொண்டனர்.

31 பிறகு முதல் திங்கள் பன்னிரண்டாம் நாள், அகவா ஆற்றைவிட்டு எருசலேமுக்குப் புறப்பட்டோம். எங்கள் கடவுளின் அருட்கரம் எங்களோடு இருந்ததால் போகும் வழியில் நாங்கள் எங்கள் பகைவர் கையினின்றும் திருடர் கையினின்றும் பாதுகாக்கப்பட்டோம்.

32 நாங்கள் எருசலேமை அடைந்து அங்கு மூன்று நாள்கள் தங்கினோம்.

33 நான்காம் நாள், நம் கடவுளின் இல்லத்தில் உரியாவின் மகனும் குருவுமாகிய மெரமோத்தின் கையில் வெள்ளியும் பொன்னும் பாத்திரங்களும் நிறுக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டன. அப்போது அவரோடு பினகாசின் மகன் எலயாசரும், லேவியரான ஏசுவாவின் மகன், யோசபாத்தும் பின்னூயின் மகன் நோவதியாவும் இருந்தனர்.

34 அவற்றின் எண்ணிக்கையும், எடையையும் அன்று அவர்கள் குறித்து வைத்துக் கொண்டார்கள்.

35 அப்பொழுது அடிமைத்தனத்திலிருந்து விடுதலையடைந்து, திரும்பி வந்தவர்கள், இஸ்ரயேலின் கடவுளுக்கு எரிபலிகள் செலுத்தினர்; இஸ்ரயேலின் எல்லா மக்களுக்காகவும் பன்னிரு இளங் காளைகளையும் தொண்ணூற்றாறு செம்மறிக் கிடாய்களையும், எழுபத்தேழு ஆட்டுக் குட்டிகளையும் பாவம் போக்கும் பலியான பன்னிரு வெள்ளாட்டுக் கிடாய்களையும் ஆண்டவருக்கு எரிபலியாக ஒப்புக் கொடுத்தனர்.

36 மேலும் அவர்கள் மன்னரின் ஆவண மடல்களைச் சிற்றரசர்களிடமும், யூப்பிரத்தீசின் அக்கரையில் இருந்த ஆளுநர்களிடமும் கொடுத்தனர். இவர்கள் மக்களுக்கும் கடவுளின் இல்லத்திற்கும் உறுதுணையாய் இருந்தனர்.