எசேக்கியேல் 18 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது.2 “புளித்த திராட்சைப் பழங்களைப் பெற்றோர் தின்ன, பிள்ளைகளின் பல் கூசிற்றாம்” என்னும் பழமொழியை இஸ்ரயேல் நாட்டைக் குறித்து நீங்கள் வழங்குவதன் பொருள் என்ன?3 என்மேல் ஆணை! என்கிறார் தலைவராகிய ஆண்டவர். இப்பழமொழி இஸ்ரயேலில் உங்களிடையே வழங்கப்படாது.4 உயிர் அனைத்தும் எனக்கே சொந்தம். பெற்றோரின் உயிர் என்னுடையது; பிள்ளைகளின் உயிரும் என்னுடையதே. பாவம் செய்யும் உயிரே சாகும்.⒫5 ஒருவன் நேர்மையாளனாய் இருந்து நீதியையும், நேர்மையையும் கடைப்பிடித்தால்,6 மலைகளின் மேல் உண்ணாமலும், இஸ்ரயேல் வீட்டாரின் சிலைகளை நோக்கித் தன் கண்களை ஏறெடுக்காமலும், பிறன் மனைவியைக் கறைப்படுத்தாமலும், தீட்டுள்ள பெண்ணை நெருங்காமலும் இருந்தால்,7 அடுத்திருப்பவனை ஒடுக்காமலும் கொள்ளையிடாமலும் இருந்து, கடன் வாங்கியவனுக்கு அடைமானத்தைத் திருப்பிக் கொடுத்து, பசித்தவனுக்குத் தன் உணவைப் பகிர்ந்தளித்து, ஆடையின்றி இருப்பவனுக்கு ஆடை அணிவித்து இருந்தால்,8 வட்டிக்குக் கொடாமலும், கொடுத்ததற்கு அதிகமாய்ப் பெறாமலும் இருந்து, தன் கையால் அநீதி செய்யாது விலகி, மனிதரிடையே எழும் வழக்குகளுக்கு நீதியுடன் தீர்ப்பளித்தால்,9 என் நியமங்களையும் நீதி நெறிகளையும் கடைப்பிடித்து, உண்மையுள்ளவனாக நடந்துகெண்டால், அவன் நீதிமான் ஆவான்; அவன் வாழப்போவது உறுதி, என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.⒫10 ஆனால், அவனுக்குப் பிறந்த மகன் கட்டுக்கடங்காதவனாயும், இரத்தம் சிந்துபவனாகவும் முன் சொல்லியவற்றுள் ஒன்றைப் பிறருக்குச் செய்பவனாகவும் இருந்தால்,11 தந்தை இவற்றுள் எதையும் செய்யாதிருக்க — மகனோ மலைகளின்மேல் படைக்கப்பட்டதை உண்டு, பிறன் மனைவியைக் கறைப்படுத்தி,12 எளியவரையும் வறியவரையும் ஒடுக்குபவனாகவும், கொள்ளையிடுபவனாகவும், அடைமானத்தைத் திருப்பித் தராதவனாகவும், சிலைகளை வணங்குபவனாகவும், அருவருப்பானதைச் செய்பவனாகவும்,13 வட்டிக்குக் கொடுப்பவனாகவும், கொடுத்ததற்கு அதிகமாக வாங்குபவனாகவும் இருந்தால், அவன் வாழ்வானோ? அவன் வாழ மாட்டான். அருவருப்பான இவற்றையெல்லாம் அவன் செய்துள்ளதால் அவன் சாவது உறுதி. அவனது இரத்தப்பழி அவன் மேலேயே இருக்கும்.14 ஆனால், இவனுக்குப் பிறந்த மகன் தன் தந்தை செய்த பாவங்களை எல்லாம் கண்டு தெளிந்து அவ்வாறு செய்யாதிருந்தால்—15 அதாவது மலைகளின்மேல் படைக்கப்பட்டதை உண்ணாமலும், இஸ்ரயேல் வீட்டாரின் சிலைகளை வணங்காமலும், பிறன் மனைவியைக் கறைப்படுத்தாமலும்,16 ஒருவரையும் ஒடுக்காமலும், அடைமானம் பெறாமலும், கொள்ளையிடாமலும், பசித்தவருக்குத் தன் உணவை அளித்தும், ஆடையின்றி இருப்பவருக்கு ஆடை கொடுத்தும்,17 எளியவருக்குத் தீங்கிழைக்காமலும், வட்டி வாங்காமலும், கொடுத்ததற்கு அதிகமாய் வாங்காமலும், என் நீதி நெறிகளைக் கடைப்பிடித்தும், என் நியமங்களின்படி நடந்தும் இருந்தால் — அவன் தன் தந்தையின் குற்றத்திற்காகச் சாக மாட்டான்; அவன் வாழ்வது உறுதி.18 மாறாக, அவன் தந்தை பிறனைக் கொடுமைப்படுத்திக் கொள்ளையடித்துத் தன் இனத்தாரிடையே நல்லன அல்லாதவற்றைச் செய்தால், தன் குற்றத்திற்காக மடிவான்.19 ஆயினும், “தந்தையின் குற்றத்தை மகன் ஏன் சுமக்கக்கூடாது?” என்று நீங்கள் கேட்கலாம். மகன், நீதியையும் நேர்மையும் கடைப்பிடித்து, என் நியமங்களை எல்லாம் கைக்கொண்டு ஒழுகினால், அவன் வாழ்வது உறுதி.20 பாவம் செய்பவரே சாவர். பிள்ளைகள் பெற்றோரின் குற்றத்தைச் சுமக்க மாட்டார்கள். அவ்வாறே பெற்றோரும் பிள்ளைகளின் குற்றத்தைச் சுமக்க மாட்டார்கள். நீதிமானின் நீதி அவன்மீது இருக்கும். பொல்லானின் பொல்லாங்கு அவன்மீது இருக்கும்.⒫21 தீயவரோ தாம் செய்த பாவங்கள் அனைத்தையும் விட்டு மனம் மாறி, என் நியமங்கள் அனைத்தையும் கைக்கொண்டு, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால் அவர்கள் வாழ்வது உறுதி, அவர்கள் சாகார்.22 அவர்கள் இழைத்த தவறுகள் அனைத்தும் அவர்களுக்கெதிராக நினைக்கப்படமாட்டா. அவர்கள் கடைப்பிடித்த நேர்மையின் பொருட்டு அவர்கள் வாழ்வர்.23 உண்மையில், பொல்லாரின் சாவையா நான் விரும்புகிறேன்? அவர்கள் தம் வழிகளினின்று திரும்பி வாழ வேண்டும் என்பதன்றோ என் விருப்பம்? என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.24 நேரியவர் தம் நேரிய நடத்தையினின்று விலகி, தவறிழைத்து, பொல்லாரைப் போல் வெறுக்கத் தக்கவற்றை எல்லாம் செய்தால், அவர்கள் வாழ்வரோ? அவர்கள் கடைப்பிடித்த நேர்மையானதெதுவும் நினைக்கப்படமாட்டாது. அவர்கள் இழைத்த துரோகத்தின் பொருட்டும், செய்த பாவத்தின் பொருட்டும் அவர்கள் சாவர்.25 ஆயினும், ‘தலைவரின் வழி செம்மையானதாக இல்லை’ என்று நீங்கள் சொல்கிறீர்கள். இஸ்ரயேல் வீட்டாரே! கேளுங்கள். என் வழியா நேர்மையற்றது? உங்கள் வழிகளன்றோ நேர்மையற்றவை!26 நேரியவர் தம் நேரிய நடத்தையினின்று விலகி, தவறிழைத்தால், அவர்கள் தாம் இழைத்த தவற்றின் பொருட்டுச் சாவர்.27 பொல்லார் தாம் செய்த பொல்லாப்பினின்று விலகி, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால், தம் உயிரை அவர்கள் காத்துக் கொள்வர்.28 அவர்கள் உண்மையைக் கண்டுணர்ந்து, தாம் செய்த குற்றங்கள் அனைத்தினின்றும் விலகி விட்டால், அவர்கள் வாழ்வது உறுதி; அவர்கள் சாகமாட்டார்.29 ஆயினும், “தலைவரின் வழி நேர்மையானதாக இல்லை” என இஸ்ரயேல் வீட்டார் சொல்கிறார்கள். இஸ்ரயேல் வீட்டாரே! என் வழிகளா நேர்மையற்றவை? உங்கள் வழிகளன்றோ நேர்மையற்றவை!30 எனவே, இஸ்ரயேல் வீட்டாரே! ஒவ்வொரு மனிதரையும் அவருடைய வழிகளைக் கொண்டே நான் தீர்ப்பிடுவேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். மனம் மாறி உங்கள் குற்றங்கள் அனைத்தையும், விட்டு விலகுங்கள். அப்போது தீமை உங்கள் வீழ்ச்சிக்குக் காரணமாய் இராது.31 எனக்கெதிராக நீங்கள் இழைத்த குற்றங்கள் அனைத்தையும் விட்டு விடுங்கள். புதிய இதயத்தையும், புதிய மனத்தையும் பெற்றுக்கொள்ளுங்கள். இஸ்ரயேல் வீட்டாரே! நீங்கள் ஏன் சாக வேண்டும்?32 எவருடைய சாவிலும் நான் இன்பம் காண்பதில்லை, என்கிறார் தலைவராகிய ஆண்டவர். எனவே மனம் மாறி வாழ்வு பெறுங்கள்.எசேக்கியேல் 18 ERV IRV TRV