உபாகமம் 6 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 உங்களுக்குக் கற்றுக்கொடுக்குமாறும், நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளப்போகும் நாட்டில் கடைப்பிடிக்குமாறும், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் கட்டளையிட்ட கட்டளைகளும், நியமங்களும், முறைமைகளும் இவைகளே.2 நீங்களும் உங்கள் பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும், உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லா நியமங்களையும் கட்டளைகளையும் உங்கள் வாழ் நாளெல்லாம் கடைப்பிடிப்பீர்களாக! இதனால், நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்.3 இஸ்ரயேலே, அவற்றிற்குச் செவிகொடு! அவற்றைச் செயல்படுத்த முனைந்திடு! அதனால், உன் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு வாக்களித்தபடி, பாலும் தேனும் நிறைந்துவழியும் நாட்டில் நீ நலம் பல பெற்று மேன்மேலும் பெருகுவாய்.4 இஸ்ரயேலே, செவிகொடு! நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர்.5 உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக!6 இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இவ்வார்த்தைகள் உன் உள்ளத்தில் இருக்கட்டும்.7 நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின்போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.8 உன் கையில் அடையாளமாக அவற்றைக் கட்டிக்கொள். உன் கண்களுக்கிடையே அடையாளப்பட்டமாக அவை இருக்கட்டும்.9 உன் வீட்டின் கதவு நிலைகளிலும் நுழை வாயில்களிலும் அவற்றை எழுது.10 மேலும், ஆபிரகாம், ஈசாக்கு யாக்கோபு எனும் உன் மூதாதையருக்குக் கொடுப்பதாக ஆணையிட்டுக் கூறிய நாட்டுக்குள் உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைப் புகச் செய்யும்போதும், நீ கட்டி எழுப்பாத, பரந்த வசதியான நகர்களையும்,11 நீ நிரப்பாத எல்லாச் செல்வங்களால் நிறைந்த வீடுகளையும், நீ வெட்டாத பாறைக் கிணறுகளையும், நீ நடாத திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவத் தோப்புகளையும் அவர் உனக்குக் கொடுக்கும் போதும், நீ உண்டு நிறைவுகொள்ளும் போதும்,12 அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியே கூட்டிவந்த ஆண்டவரை மறந்துவிடாதபடி கவனமாய் இரு.13 உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நட! அவருக்குப் பணிந்து அவர் பெயராலே ஆணையிடு!14 உங்களைச் சுற்றிலுமுள்ள மக்களின் தெய்வங்களாகிய வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்ற வேண்டாம். ஏனெனில், உங்களிடையே உள்ள உங்கள் கடவுளாகிய ஆண்டவர் வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத கடவுள்.15 இல்லையெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் சினம் உங்கள்மேல் மூண்டு, உலகினின்றே உங்களை அழித்து விடலாம்.⒫16 மாசாவில் நீங்கள் சோதித்தது போல, உங்கள் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்.17 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கற்றுக்கொடுத்த கட்டளைகளையும், நியமங்களையும், முறைமைகளையும் நிறைவேற்றுவதில் கருத்தாய் இருங்கள்.18 ஆண்டவருக்கு முன்னால் நேரியதையும் நல்லதையுமே செய்யுங்கள். அப்பொழுது, எல்லாம் உங்களுக்கு நலமாகும். உங்கள் மூதாதையருக்கு ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நல்ல நாட்டில் நீங்கள் புகுந்து அதை உடைமையாக்கிக் கொள்வீர்கள்.19 மேலும், ஆண்டவர் உரைத்தபடி உங்கள் பகைவர் அனைவரையும் உங்கள் முன்பாகவே அழித்தொழிப்பார்.20 வருங்காலத்தில், உன் பிள்ளை உன்னை நோக்கி, ‘நம் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கட்டளையிட்ட கட்டளைகள், நியமங்கள், முறைமைகள் ஆகியவற்றின் உட்பொருள் என்ன?’ என்று கேட்கும் போது,21 நீ உன் பிள்ளைக்கு இவ்வாறு சொல்: ‘நாங்கள் எகிப்தில் பார்வோனுக்கு அடிமைகளாய் இருந்தோம். ஆனால், ஆண்டவர் தம் வலிய கரத்தால் எங்களை எகிப்திலிருந்து வெளியேறச் செய்தார்.22 எங்கள் கண்கள் காண எகிப்து நாட்டின் மீதும், பார்வோன் மீதும், ஆண்டவர் மாபெரும் அடையாளங்களையும் அச்சுறுத்தும் அருஞ்செயல்களையும் செய்தார்.23 நம் மூதாதையருக்குக் கொடுப்பதாக அவர் ஆணையிட்டுச் சொன்ன நாட்டுக்கு எங்களை அழைத்து வந்தார்; அதை நமக்குக் கொடுக்கும்படி எங்களை அங்கிருந்து வெளியே கொணர்ந்தார்.24 நமக்கு இன்று இருப்பதுபோல் என்றும் நலமாகும்பொருட்டும், நமது வாழ்வை அவர் பாதுகாக்கும் பொருட்டும், நம் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும்படி இந்த எல்லாக் கட்டளைகளையும் நிறைவேற்ற நம் ஆண்டவர் நமக்குக் கட்டளையிட்டார்.25 நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கட்டளையிட்டது போல அவரது திருமுன் இந்த எல்லாக் கட்டளைகளையும் நிறைவேற்ற முனைந்தால் அதுவே நேரிய வாழ்வாகும்.’உபாகமம் 6 ERV IRV TRV