தானியேல் 3 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 நெபுகத்னேசர் அரசன் அறுபது முழ உயருமும் ஆறு முழ அகலமுமான பொற்சிலை ஒன்றைச் செய்வித்து, அதைப் பாபிலோன் நாட்டிலிருந்த ‘தூரா’ என்னும் சமவெளியில் நிறுத்தி வைத்தான்.2 பின்பு நெபுகத்னேசர் அரசன் தான் நிறுவிய சிலையின் அர்ப்பணிப்புக்கு சிற்றரசர்களும் அதிகாரிகளும் ஆளுநரும் அறிவுரை கூறுவோரும் நிதிப்பொறுப்பாளரும் நீதிபதிகளும் மணியக்காரரும் மற்றெல்லா அலுவலரும் ஒன்றாய்க் கூடி வரவேண்டுமென்று ஆணையிட்டான்.3 அவ்வாறே சிற்றரசர்களும் அதிகாரிகளும் ஆளுநரும் அறிவுரை கூறுவோரும் நிதிப்பொறுப்பாளரும் நீதிபதிகளும் மணியக்காரரும் மாநிலங்களின் மற்றெல்லா அலுவலரும் நெபுகத்னேசர் அரசன் நிறுவிய சிலையின் அர்ப்பணிப்புக்கு ஒன்றாய்க் கூடி வந்து சேர்ந்தனர்; அவர்கள் நெபுகத்னேசர் நிறுவிய சிலை முன் வந்து நின்றனர்.4 கட்டியக்காரன் ஒருவன் உரத்த குரலில், “இதனால் மக்கள் அனைவர்க்கும், எல்லா இனத்தவர்க்கும், மொழியினருக்கும் அறிவிக்கப்படுவது யாதெனில்:5 எக்காளம், நாதசுரம், யாழ், கின்னரம், வீணை, பைக்குழல் முதலிய எல்லா வகை இசைக் கருவிகளும் ஒலிக்கத் தொடங்கிய அந்த நொடியில், நீங்கள் தாழவீழ்ந்து நெபுகத்னேசர் அரசன் நிறுவிய பொற்சிலையைப் பணிந்து தொழவேண்டும்.6 எவராகிலும் தாழ வீழ்ந்து பணிந்து தொழவில்லையெனில், அவர்கள் அந்நேரமே தீச்சூளையில் தூக்கிப்போடப்படுவார்கள்” என்று கூறி முரசறைந்தான்.7 ஆகையால், எக்காளம், நாதசுரம், யாழ், கின்னரம், வீணை, பைக்குழல் முதலிய எல்லா வகை இசைக் கருவிகளும் ஒலிக்கத் தொடங்கியவுடன், எல்லா மக்களும் தாழவீழ்ந்து நெபுகத்னேசர் அரசன் நிறுவிய பொற்சிலையைப் பணிந்து தொழுதார்கள்.⒫8 அப்பொழுது கல்தேயர் சிலர் தாமே முன்வந்து யூதர்கள் மேல் குற்றம் சாட்டலாயினர்.9 அவர்கள் நெபுகத்னேசர் அரசனிடம் சொன்னது: “அரசரே! நீர் நீடூழி வாழ்க!10 அரசரே! எக்காளம், நாதசுரம், யாழ், கின்னரம், வீணை, பைக்குழல் முதலிய எல்லா வகை இசைக் கருவிகளும் ஒலிக்கக் கேட்கும் எந்த மனிதனும் உடனே தாழவீழ்ந்து பொற்சிலையைப் பணியவேண்டும் என்று, நீர் கட்டளை பிறப்பித்தீர் அல்லவா?11 எவராகிலும் தாழவீழ்ந்து பணியாமல் போனால் அவர்கள் எரிகிற தீச்சூளையில் போடப்படுவார்கள் என்றும் நீர் ஆணை விடுத்தீர் அல்லவா?12 அரசரே! பாபிலோன் நாட்டின் புறப்பகுதிகளுக்குப் பொறுப்பாளர்களாக சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ என்னும் யூதர்களை நீர் நியமித்தீர் அல்லவா? அந்தப் பேர்வழிகள் உமது கட்டளையை மதிக்கவில்லை; உம் தெய்வங்களை வணங்கவில்லை; நீர் நிறுவின பொற் சிலையைப் பணிந்து தொழவும் இல்லை.”⒫13 உடனே நெபுகத்னேசர் கடுஞ்சினமுற்று, சாத்ராக்கையும், மேசாக்கையும், ஆபேத்நெகோவையும் பிடித்து வரும்படி கட்டளையிட்டான். அவ்வாறே அரசன் முன்னிலைக்கு அவர்களைப் பிடித்துக்கொண்டு வந்தனர்.14 நெபுகத்னேசர் அவர்களை நோக்கி, “சாத்ராக்கு! மேசாக்கு! ஆபேத்நெகோ! நீங்கள் மூவரும் என் தெய்வங்களை வணங்கவில்லை என்பதும், நான் நிறுவிய பொற்சிலையைப் பணிந்து தொழவில்லை என்பதும் உண்மைதானா?15 இப்பொழுதாவது எக்காளம், நாதசுரம், யாழ், கின்னரம், வீணை, பைக்குழல் முதலிய எல்லாவகை இசைக் கருவிகளும் ஒலிக்கக் கேட்டவுடன், நீங்கள் தாழவீழ்ந்து நான் செய்துவைத்துள்ள சிலையைப் பணிந்து தொழத் தயாராயிருக்கிறீர்களா? தொழாவிட்டால் அந்த நொடியிலேயே எரிகிற தீச்சூளையில் தூக்கிப் போடப்படுவீர்கள். உங்களை என் கைகளிலிருந்து தப்புவிக்கக்கூடிய தெய்வம் ஒன்று உண்டோ?” என்றான்.⒫16 சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ என்பவர்கள் நெபுகத்னேசர் அரசனை நோக்கிப் பதில்மொழியாக, “இதைக் குறித்து நாங்கள் உமக்கு மறுமொழி கூறத் தேவையில்லை.17 அப்படியே எது நிகழ்ந்தாலும், நாங்கள் வழிபடுகின்ற எங்கள் கடவுள், எரிகின்ற தீச்சூளையினின்று எங்களை மீட்க வல்லவர்.18 அவரே எங்களை உம் கையினின்றும் விடுவிப்பார். அப்படியே அவருக்கு மனமில்லாமல் போனாலும், அரசரே! நாங்கள் உம்முடைய தெய்வங்களை வழிபடமாட்டோம்; நீர் நிறுவிய பொற்சிலையையும் நாங்கள் தொழப்போவதில்லை. இது உமக்குத் தெரிந்திருக்கட்டும்” என்றார்கள்.19 இதைக் கேட்ட நெபுகத்னேசர் அரசன் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோர்மீது வெகுண்டெழ, அவனது முகம் சினத்தால் சிவந்தது. வழக்கத்தைவிட ஏழு மடங்கு மிகுதியாகத் தீச்சூளையைச் சூடாக்கும்படி அரசன் கட்டளையிட்டான்.20 பின்னர் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோரைக் கட்டி, எரியும் தீச்சூளைக்குள் தூக்கிப் போடுமாறு தன் படைவீரர்களுள் வலியவர் சிலருக்குக் கட்டளையிட்டான்.21 அவ்வாறே அந்த வீரர்கள் அவர்களை மேற்போர்வையோடும் உள்ளாடையோடும் தலைப்பாகையோடும் மற்ற ஆடைகளோடும் சேர்த்துக்கட்டி, எரியும் தீச்சூளைக்குள் தூக்கிப் போட்டார்கள்.22 அரசனது கட்டளை மிகக் கண்டிப்பானதாக இருந்ததாலும் தீச்சூளை செந்தணலாய் இருந்ததாலும் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோரைத் தீச்சூளையில் போடுவதற்குத் தூக்கிச் சென்றவர்களையே அத்தீப்பிழம்பு கூட்டெரித்துக் கொன்றது.23 சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகிய மூவரும் கட்டுண்டவர்களாய் எரிகிற தீச்சூளையினுள் வீழ்ந்தார்கள்.24 * அப்பொழுது நெபுகத்னேசர் அரசன் வியப்புற்று விரைந்தெழுந்து தன் அமைச்சரை நோக்கி, “மூன்று பேரைத்தானே கட்டி நெருப்பினுள் எறிந்தோம்!” என்றான். “ஆம் அரசரே” என்று அவர்கள் விடையளித்தனர்.25 அதற்கு அவன், “கட்டவிழ்க்கப்பட்டவர்களாய் நெருப்பின் நடுவில் நான்கு பேர் உலவுகிறதை நான் காண்கிறேன்! அவர்களுக்கோ ஒரு தீங்கும் நேரவில்லையே! மேலும் நான்காவது ஆள் தெய்வ மகன் ஒருவன் போல் தோன்றுகிறானே!” என்றான்.26 உடனே நெபுகத்னேசர் எரிகிற தீச்சூளையின் வாயிலருகில் வந்து நின்று, “உன்னதக் கடவுளின் ஊழியர்களாகிய சாத்ராக்கு! மேசாக்கு, ஆபேத்நெகோ வெளியே வாருங்கள்” என்றான் அவ்வாறே சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோர் நெருப்பைவிட்டு வெளியே வந்தனர்.27 சிற்றரசர்களும் அதிகாரிகளும் ஆளுநரும் அரசனுக்கு அறிவுரை கூறுவோரும் கூடிவந்து, அந்த மனிதர்களின் உடலில் தீப்பட்ட அடையாளமே இல்லாமலும் அவர்களது தலைமுடி கருகாமலும் அவர்களுடைய ஆடைகள் தீப்பற்றாமலும் நெருப்பின் புகை நாற்றம் அவர்களிடம் வீசாமலும் இருப்பதைக் கண்டார்கள்.28 அப்பொழுது நெபுகத்னேசர், “சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோரின் கடவுள் புகழப்படுவாராக! தங்கள் கடவுளைத் தவிர வேறெந்த தெய்வத்தையும் பணிந்து தொழ மறுத்து, அரசனது கட்டளையையும் பொருட்படுத்தாமல், அவர்மேல் நம்பிக்கை வைத்துத் தங்கள் உடலைக் கையளித்த அவருடைய ஊழியர்களை அவர் தம் தூதரை அனுப்பி மீட்டருளினார்.29 ஆதலால் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோரின் கடவுளுக்கு எதிராகப் பழிச்சொல் கூறும் எந்த இனத்தவனும் எந்த நாட்டவனும் எந்த மொழியினனும் கண்டந்துண்டமாக வெட்டப்படுவான்; அவனுடைய வீடும் தரைமட்டமாக்கப்படும்; இதுவே என் ஆணை! ஏனெனில், இவ்வண்ணமாய் மீட்கின்ற ஆற்றல் படைத்த கடவுள் வேறெவரும் இல்லை” என்றான்.30 பிறகு அரசன் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோர்க்குப் பாபிலோனின் மாநிலங்களில் பெரும் பதவி அளித்துச் சிறப்புச் செய்தான்.தானியேல் 3 ERV IRV TRV