2 சாமுவேல் 20 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 அப்போது, பென்யமின் குலத்தைச் சார்ந்த, பிக்ரியின் மகன் சேபா என்ற இழிமகன் அங்கு இருந்தான். அவன் எக்காளம் ஊதி, “எங்களுக்குத் தாவீதிடம் பங்குஇல்லை; ஈசாயின் மகனிடம் மரபுரிமையும் இல்லை; இஸ்ரயேலரே! ஒவ்வொருவரும் உங்கள் கூடாரங்களுக்குச் செல்லுங்கள்” என்றான்.2 இஸ்ரயேலர் அனைவரும் தாவீதைப் பின்பற்றுவதை விட்டுவிட்டுப் பிக்ரியின் மகன் சேபாவின் பின் சென்றனர்.ஆனால், யூதாவினரோ யோர்தான் முதல் எருசலேம் வரை, தங்கள் அரசரைச் சார்ந்திருந்தனர்.3 தாவீது எருசலேமிலுள்ள தம் வீட்டுக்கு வந்தார். தம் வீட்டைப் பாதுகாக்க தாம் விட்டுவந்த பத்து வைப்பாட்டியரையும் அழைத்து, பாதுகாப்புள்ள ஒரு வீட்டில் அவர்களை வைத்துத் தேவையானவற்றைக் கொடுத்து வந்தார். ஆனால், அவர்களோடு உறவு கொள்ளவில்லை. அவர்கள் இறக்கும் வரை காவலில் வைக்கப்பட்டுக் கைம்பெண்களைப்போல் வாழ்ந்தனர்.⒫4 பிறகு, அரசர் அமாசாவை நோக்கி, “மூன்று நாள்களுக்குள் யூதாவினரை என்னிடம் வரச்சொல்; அப்போது நீயும் இங்கே இரு” என்றார்.5 அமாசா யூதா மக்களை அழைக்கச் சென்றான். ஆனால், தனக்குக் குறித்த காலத்தை மீறிக் காலம் தாழ்த்தினான்.6 தாவீது அபிசாயை நோக்கி, “பிக்ரியின் மகன் சேபா அப்சலோமைவிட மிகுதியாக நமக்குத் தீங்கிழைப்பான். உன் தலைவரின் பணியாளரை அழைத்துக் கொண்டு, அவனைத் துரத்திச் செல்லுங்கள். இல்லையேல் அரண்சூழ் நகர்களைக் கண்டு நம் கண்ணிலிருந்து தப்பிவிடுவான்” என்று சொன்னார்.7 யோவாபின் ஆள்களும், கெரேத்தியர், பெலேத்தியரும், வலிமைமிகு வீரர்கள் அனைவரும் அபிசாயின் தலைமையில் சென்றனர். அவர்கள் எருசலேமிலிருந்து புறப்பட்டுப் பிக்ரியின் மகன் சேபாவைப் பின்தொடர்ந்தனர்.8 அவர்கள் கிபயோனிலுள்ள பெருங்கல் அருகே வந்தனர். அமாசா அவர்கள் முன்பாக வந்தான். யோவாபு தாம் உடுத்தியிருந்த போருடைமீது ஒரு கச்சை கட்டியிருந்தார். அதிலே உறையோடு கூடிய ஒரு குறுவாள் செருகப்பட்டிருந்தது. அவர் முன்னால் சென்றபோது அது கீழே வீழ்ந்தது.9 யோவாபு அமாசாவை நோக்கி, “சகோதரனே, நலமா?’ என்று கேட்டு அவனை முத்தமிடுவதற்காக வலக்கையால் அவனது தாடியைப் பற்றினார்.10 யோவாபின் இடக் கையிலிருந்த குறுவாளைப் பற்றி அமாசா எச்சரிக்கையாக இல்லை. யோவாபு அதை அவன் வயிற்றில் குத்த, அவனது குடல் தரையில் சரிந்தது. மீண்டும் குத்துவதற்கு அவசியமில்லாமல் அமாசா இறந்தான். அதன்பின் யோவாபும் அவருடைய சகோதரன் அபிசாயும் பிக்ரியின் மகன் சேபாவைப் பின் தொடர்ந்தனர்.⒫11 யோவாபின் ஆள்களுள் ஒருவன் அவர் அருகே நின்று கொண்டு, “யோவாபை விரும்புகிறவர்களும், தாவீதின் பக்கமுள்ளவர்களும், யோவாபின் பின்செல்லட்டும்” என்றான்.12 சாலை நடுவே அமாசா தன் இரத்தத்தில் மூழ்கிக் கிடக்கவே, வீரர்கள் அனைவரும் அங்கேயே நின்றுவிட்டதை அவன் கண்டான். அமாசாவின் அருகே வந்தவர்கள் அனைவரும் நின்றுவிட்டதைக் கண்டு, அவனைச் சாலையிலிருந்து வயலுக்கு இழுத்து ஒரு துணியால் மூடினான்.13 அமாசா சாலையிலிருந்து விலக்கப்பட்டதும் அனைவரும் யோவாபின் பின்சென்று, பிக்ரியின் மகன் சேபாவைப் பின்தொடர்ந்தனர்.⒫14 சேபா அனைத்து இஸ்ரயேல் குலங்களின் நிலப்பகுதி வழியாக பெத்மாக்காவின் ஆபேல் வரை சென்றான். பெரியோர் அனைவரும் ஒன்று திரண்டு அவன் பின்சென்றனர்.15 யோவாபும் அவர் படையினரும் பெத்மாக்காவின் ஆபேலில் முற்றுகையிட்டு சேபாவை வளைத்தனர். நகருக்கு எதிராக முற்றுகைக் கோட்டை எழுப்பினர். அது மதிலுக்கு அருகில் இருந்தது. அதனின்று யோவாபோடு இருந்த வீரர்கள் அனைவரும் அம்மதிலைத் தகர்த்துக் கொண்டிருந்தனர்.16 அப்போது அறிவுக்கூர்மையுள்ள ஒரு பெண் நகரிலிருந்து குரல்கொடுத்து, “கேளுங்கள்; கேளுங்கள். தயைகூர்ந்து யோவாபை இங்கே வரச் சொல்லுங்கள். நான் அவரிடம் பேச வேண்டும்”என்றாள்.17 அவரும் அவளருகே வந்தார். அப்பெண் அவரை நோக்கி, “யோவாபு நீர்தாமா?” என்றாள். “நானேதான்” என்றார் யோவாபு. “உம் அடியவளின் வார்த்தைகளைக் கேளும்” என்றாள் அப்பெண். “கேட்கிறேன்” என்றார் யோவாபு.18 அவள் தொடர்ந்து கூறியது: “முற்காலத்தில் அடிக்கடி சொல்வார்கள். ‘ஆபேலுக்குச் சென்று ஆலோசனை கேட்பார்களாக!’. அதன் படியே பிரச்சனைகள் தீர்க்கப்படும்.19 இஸ்ரயேலில் நாங்கள் அமைதியும் நாணயமும் உடையவர்கள். இஸ்ரயேலின் தாயென விளங்கும் இந்நகரை நீர் அழிக்கத் தேடுவதேன்? ஆண்டவரின் உரிமைச் சொத்தை நீர் விழுங்குவானேன்?” என்று அப்பெண் கேட்டாள்.20 அதற்கு யோவாபு, “இல்லை, விழுங்க வேண்டும் அல்லது அழிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு அறவே இல்லை.21 காரியம் அதுவல்ல. எப்ராயிம் மலைப்பகுதியைச் சார்ந்த, பிக்ரியின் மகன் சேபா என்பவன் அரசர் தாவீதுக்கு எதிராகக் கையோங்கியுள்ளான். அவனை மட்டும் தாருங்கள். நான் நகரிலிருந்து விலகிச் செல்வேன்” என்று பதில் கூறினார். அப்பொழுது அப்பெண், “இதோ! அவன் தலை மதிலுக்கு அப்பால் உம்மிடம் தூக்கி எறியப்படும்” என்றாள்.22 மக்கள் அனைவரையும் அவள் அணுகி அறிவார்ந்த ஆலோசனை கூறினாள். அவர்களும் பிக்ரியின் மகன் சேபாவின் தலையை வெட்டி யோவாபிடம் எறிந்தார்கள். யோவாபு எக்காளம் ஊத. அவர்கள் நகரை விட்டு நீங்கித் தம் வீடுகளுக்குச் சென்றனர். யோவாபு எருசலேமுக்குத் திரும்பி அரசரிடம் சென்றார்.23 யோவாபு அனைத்து இஸ்ரயேலின் படைத்தலைவராகவும், பெனாயாவின் மகன் யோயாதா கெரேத்தியர், பெலேத்தியரின் தலைவனாகவும் இருந்தனர்.24 அதோராம் கொத்தடிமைகளுக்குப் பொறுப்பாளனாகவும், அகிலுதின் மகன் யோசபாத்து பதிலாளனாகவும் இருக்க,25 சேவா செயலராகவும், சாதோக்கும் அபியத்தாரும் குருக்களாகவும் பணியாற்றினர்.26 யாயிரைச் சார்ந்த ஈராவும் தாவீதின் குருக்களில் ஒருவனாக இருந்தான்.2 சாமுவேல் 20 ERV IRV TRV