2 இராஜாக்கள் 20 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 அந்நாள்களில் எசேக்கியா நோயுற்றுச் சாகும் தருவாயில் இருந்தார். ஆமோட்சின் மகன் இறைவாக்கினர் எசாயா அவரிடம் வந்து, “ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீர் உமது வீட்டுக் காரியங்களை ஒழுங்குபடுத்தும்; ஏனெனில், நீர் சாவினின்று பிழைக்க மாட்டீர்” என்றார்.2 எசேக்கியா சுவர்ப் பக்கமாய் முகத்தைத் திருப்பிக் கொண்டு3 ஆண்டவரை நோக்கி, “ஆண்டவரே! நான் எப்படி உம் திருமுன் முற்றிலும் நம்பிக்கைக்குரியவனாய் நடந்து கொண்டேன் என்பதையும், உமது பார்வையில் நேர்மையானதையே செய்தேன் என்பதையும் நினைத்தருளும்” என்று வேண்டுதல் செய்து கதறி அழுதார்.4 எசாயா அரண்மனை முற்றத்தின் நடுப்பகுதியைக் கடப்பதற்குள், ஆண்டவரது வார்த்தை அவருக்கு வெளியாயிற்று:5 “நீ திரும்பிப்போய் என் மக்களின் தலைவனான எசேக்கியாவை நோக்கி, ‘உன் தந்தை தாவீதின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உன் மன்றாட்டைக் கேட்டேன். உன் கண்ணீரையும் கண்டேன். இதோ உன்னைக் குணப்படுத்துவேன். இன்றைக்கு மூன்றாம் நாள் நீ ஆண்டவராகிய எனது இல்லத்துக்குச் செல்வாய்.6 உனது ஆயுளுக்கு இன்னும் பதினைந்து ஆண்டுகள் கூட்டுவேன். மேலும், உன்னையும் இந்நகரையும் அசீரிய மன்னனின் கையினின்று விடுவிப்பேன். என் பொருட்டும் என் ஊழியன் தாவீதின் பொருட்டும் இந்நகரைப் பாதுகாப்பேன்’ என்று சொல்.”7 அப்பொழுது எசாயா, “ஓர் அத்திப் பழ அடை கொண்டு வாருங்கள்” என்றார். அவர்களும் அவ்வாறு கொண்டுவந்து அவர் குணமடையும்படி அதைக் கட்டியின்மேல் வைத்தனர்.8 எசேக்கியா எசாயாவை நோக்கி, “ஆண்டவர் எனக்கு நலம் அளிப்பார் என்பதற்கும், மூன்றாம் நாள் நான் கோவிலுக்குச் செல்வேன் என்பதற்கும் அவர் எனக்கு என்ன அடையாளம் கொடுப்பார்?” என்று கேட்டார்.9 அதற்கு எசாயா, “ஆண்டவர் தாம் தந்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்பதைக் காட்ட அவர் உமக்குக் கொடுக்கும் அடையாளமாவது: இப்பொழுது நிழல் பத்துப் பாகை முன்னோக்கிப் போகவேண்டுமா? பின்னோக்கி வர வேண்டுமா?” என்று கேட்டார்.10 அதற்கு எசேக்கியா, “நிழல் பத்துப் பாகை முன்னோக்கிப் போவது எளிது. எனவே, நிழல் பத்துப் பாகை பின்னோக்கி வர வேண்டும்” என்றார்.11 அப்பொழுது இறைவாக்கினர் எசாயா ஆண்டவரிடம் மன்றாடினார். ஆண்டவரும் ஆகாசின் நிழற்கடிகையில் பத்துப்பாகை முன்னோக்கிப் போயிருந்த நிழல் பத்துப் பாகை பின்னோக்கி வரச் செய்தார்.12 அக்காலத்தில் பாபிலோனியரின் மன்னன் பலதானின் மகன் மெரோதாக்கு, எசேக்கியா நோயுற்றிருப்பதைக் கேள்விப்பட்டு, அவனுக்கு மடலும் அன்பளிப்பும் அனுப்பி வைத்தான்.13 எசேக்கியா அவர்களை வரவேற்று,* தம் கருவூலம் அனைத்தையும் வெள்ளியையும், பொன்னையும், நறுமணப் பொருள்களையும், தைல வகைகளையும் படைக்கலக் கூடத்தையும் சேமிப்புக் கிடங்கில் காணப்பட்ட எல்லாப் பொருள்களையும் அவர்களுக்குக் காட்டினார். அதன் அரசு முழுவதிலும், தம் அரண்மனையிலும் இருந்தவற்றில் எசேக்கியா அவர்களுக்குக் காட்டாதது எதுவுமில்லை.14 இறைவாக்கினர் எசாயா அரசர் எசேக்கியாவிடம் வந்து, “அந்த ஆள்கள் என்ன சொன்னார்கள்? எங்கிருந்து வந்தார்கள்?” என்று கேட்டார். அதற்கு எசேக்கியா, “வெகுதூரத்திலிருக்கும் நாடான பாபிலோனிலிருந்து வந்தார்கள்” என்று மறுமொழி கூறினார்.15 அவர், “உம் அரண்மனையில் எதைப் பார்த்தனர்?” என்று கேட்டார். அதற்கு எசேக்கியா “என் அரண்மனையில் உள்ள அனைத்தையும் பார்த்தனர். என் சேமிப்புக் கிடங்கில் நான் அவர்களுக்குக் காட்டாதது எதுவுமில்லை” என்றார்.16 அப்பொழுது எசாயா எசேக்கியாவை நோக்கி, “ஆண்டவர் கூறுவதைக் கேளும்:17 இதோ! நாள்கள் வரும்! அப்போது உன் அரண்மனைப் பொருள்கள் அனைத்தும், உன் மூதாதையர் இன்றுவரை சேகரித்து வைத்துள்ள யாவும் ஒன்று விடாமல் பாபிலோன் நகருக்குக் கொண்டு போகப்படும்.18 மேலும், நீ பெற்றெடுத்துள்ள உன் சொந்தப் புதல்வர் சிலர் கைது செய்யப்பட்டு, பாபிலோன் மன்னனின் அரண்மனையில் அண்ணகராய் இருப்பர்” என்று சொன்னார்.19 அப்பொழுது எசேக்கியா எசாயாவை நோக்கி, ‘ஆண்டவரின் வார்த்தையாக நீர் கூறியது நல்வாக்கே!’ என்றார். ஏனெனில், அவர் தம் வாழ்நாள்களில் அமைதியும் பாதுகாப்பும் இருந்தால் போதும் என்று எண்ணிக் கொண்டிருந்தார்.20 எசேக்கியாவின் பிற செயல்களும், அவரது பேராற்றலும், அவர் குளமொன்று வெட்டிக் கால்வாய் அமைத்துத் தண்ணீரை நகருக்குள் கொண்டு வந்ததும், ‘யூதா அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப் பட்டுள்ளன அல்லவா?21 எசேக்கியா தம் மூதாதையருடன் துயில் கொண்ட பின், அவருக்குப் பதிலாக அவர் மகன் மனாசே அரசன் ஆனான்.2 இராஜாக்கள் 20 ERV IRV TRV