2 நாளாகமம் 35 IRV ஒப்பிடு Tamil Indian Revised Version
1 அதற்குப்பின்பு யோசியா எருசலேமிலே கர்த்தருக்கு பஸ்காவை அனுசரித்தான்; அவர்கள் முதலாம் மாதம் பதினான்காம் தேதியிலே பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்தார்கள்.
2 அவன் ஆசாரியர்களை அவர்கள் முறைவரிசைகளில் வைத்து, அவர்களைக் கர்த்தருடைய ஆலயத்தில் ஆராதனை செய்ய ஒழுங்குபடுத்தி,
3 இஸ்ரவேலையெல்லாம் உபதேசிக்கிறவர்களும், கர்த்தருக்குப் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுமாகிய லேவியர்களை நோக்கி: பரிசுத்தப்பெட்டியை தாவீதின் மகனாகிய சாலொமோன் என்னும் இஸ்ரவேலின் ராஜா கட்டின ஆலயத்திலே வையுங்கள்; தோளின்மேல் அதை சுமக்கும் பொறுப்பு உங்களுக்குரியதல்ல; இப்போது நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கும், அவருடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கும் ஊழியம்செய்து,
4 இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீது எழுதின கட்டளைக்கும், அவன் மகனாகிய சாலொமோன் எழுதின கட்டளைக்கும் ஏற்றபடியே உங்கள் பிதாக்களின் குடும்பத்தாருக்காகக் குறிக்கப்பட்ட வரிசையிலே உங்களை ஆயத்தப்படுத்தி,
5 மக்களாகிய உங்கள் சகோதரருக்காகப் பரிசுத்த இடத்திலே முன்னோர்களுடைய வம்சப் பிரிவுகளின்படியேயும், லேவியருடைய வம்சத்தார் வகுக்கப்பட்டபடியேயும் நின்று,
6 பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்து, உங்களைப் பரிசுத்தம்செய்து, மோசேயைக்கொண்டு கர்த்தர் சொன்னபடியே உங்கள் சகோதரர்கள் செய்வதற்கு, அவர்களுக்கு அவைகளை ஆயத்தப்படுத்துங்கள் என்றான்.
7 வந்திருந்த மக்கள் எல்லோருக்கும், அவர்கள் எண்ணிக்கையின்படியே, பஸ்கா பலிக்காக முப்பதாயிரம் ஆட்டுக்குட்டிகளையும், வெள்ளாட்டுக்குட்டிகளையும், மூவாயிரம் காளைகளையும், ராஜாவாகிய யோசியா தன்னுடைய செல்வத்திலிருந்து கொடுத்தான்.
8 அவனுடைய பிரபுக்களும் மனப்பூர்வமான காணிக்கையாக மக்களுக்கும் ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் கொடுத்தார்கள்; தேவனுடைய ஆலய மேற்பார்வையாளர்களாகிய இல்க்கியாவும் சகரியாவும் யெகியேலும் ஆசாரியர்களுக்கு பஸ்கா பலிக்கென்று இரண்டாயிரத்து அறுநூறு ஆட்டுக்குட்டிகளையும், முந்நூறு காளைகளையும் கொடுத்தார்கள்.
9 கொனானியா, செமாயா, நெதனெயேல் என்னும் அவர்கள் சகோதரர்களும், அசபியா, ஏயெல், யோசபாத் என்னும் லேவியர்களின் பிரபுக்களும், லேவியர்களுக்கு பஸ்கா பலிக்கென்று ஐயாயிரம் ஆட்டுக்குட்டிகளையும் ஐந்நூறு காளைகளையும் கொடுத்தார்கள்.
10 இப்படி ஆராதனை ஆயத்தம் செய்யப்பட்டபோது, ராஜாவினுடைய கட்டளையின்படியே, ஆசாரியர்கள் தங்களுக்குரிய இடத்திலும், லேவியர்கள் தங்கள் பிரிவுகளின் வரிசையிலும் நின்று,
11 பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்தார்கள்; ஆசாரியர்கள் அவர்கள் கையிலிருந்து இரத்தத்தை வாங்கித் தெளித்தார்கள்; லேவியர்கள் தோலுரித்தார்கள்.
12 மோசேயின் புத்தகத்தில் எழுதியிருக்கிறபடி மக்கள் கர்த்தருக்குப் பலி செலுத்தும்படி, அவர்கள் தகனபலி மிருகங்களை முன்னோர்களுடைய வம்சப்பிரிவுகளின்படியே, இவர்களுக்குக் கொடுக்கத்தக்கதாக அவைகளைப் பிரித்துவைத்தார்கள்; காளைகளையும் அப்படியே செய்தார்கள்.
13 அவர்கள் பஸ்கா ஆட்டுக்குட்டியை நியாயமுறைமையின்படியே அக்கினியில் பொரித்து, பரிசுத்தமாக்கப்பட்ட மற்றவைகளைப் பானைகளிலும் கொப்பரைகளிலும் சட்டிகளிலும் சமைத்து, மக்களுக்கெல்லாம் விரைவாகப் பங்கிட்டுக் கொடுத்தார்கள்.
14 பின்பு தங்களுக்காகவும் ஆசாரியர்களுக்காகவும் ஆயத்தப்படுத்தினார்கள்; ஆரோனின் சந்ததியாராகிய ஆசாரியர்கள் சர்வாங்க தகனபலிகளையும் கொழுப்பையும் செலுத்துகிறதில், இரவு வரை வேலையாயிருந்ததால், லேவியர்கள் தங்களுக்காகவும், ஆரோனின் சந்ததியாராகிய ஆசாரியர்களுக்காகவும் ஆயத்தப்படுத்தினார்கள்.
15 தாவீதும், ஆசாபும், ஏமானும், ராஜாவின் தரிசனம் காண்கிறவனாகிய எதுத்தூனும் கற்பித்தபடியே, ஆசாபின் சந்ததியாராகிய பாடகர்கள் தங்களுடைய இடத்திலும், வாசல்காவலாளர்கள் ஒவ்வொரு வாசலிலும் நின்றார்கள்; அவர்கள் தங்கள் வேலையைவிட்டு விலகமுடியாமலிருந்தது; லேவியரான அவர்களுடைய சகோதரர்கள் அவர்களுக்காக ஆயத்தம் செய்தார்கள்.
16 அப்படியே ராஜாவாகிய யோசியாவினுடைய கட்டளைப்படி, பஸ்காவை அனுசரிக்கிறதற்கும், கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துகிறதற்கும் அடுத்த கர்த்தருடைய ஆராதனையெல்லாம் அன்றையதினம் முறைப்படி செய்யப்பட்டது.
17 அங்கே வந்திருந்த இஸ்ரவேல் மக்கள் அக்காலத்தில் பஸ்காவையும், புளிப்பில்லாத அப்பப்பண்டிகையையும் ஏழு நாட்களும் அனுசரித்தார்கள்.
18 தீர்க்கதரிசியாகிய சாமுவேலின் நாள் துவங்கி, இஸ்ரவேலிலே அதைப்போல பஸ்கா அனுசரிக்கப்படவில்லை; யோசியாவும், ஆசாரியர்களும், லேவியர்களும், யூதாஅனைத்தும், இஸ்ரவேலில் வந்திருந்தவர்களும், எருசலேமின் மக்களும் அனுசரித்த பஸ்காவைப்போல இஸ்ரவேல் ராஜாக்களில் ஒருவரும் அனுசரித்ததில்லை.
19 யோசியாவுடைய அரசாட்சியின் பதினெட்டாம் வருடத்திலே இந்த பஸ்கா அனுசரிக்கப்பட்டது.
20 யோசியா தேவாலயத்திற்குரியவைகளை ஒழுங்குபடுத்தின இந்த அனைத்து செயல்பாடுகளுக்கும்பின்பு, எகிப்தின் ராஜாவாகிய நேகோ ஐபிராத்து நதியோரமான கர்கேமிஸ் பட்டணத்தின்மேல் போர் செய்யவந்தான்; அப்பொழுது யோசியா அவனுக்கு விரோதமாக போர்செய்யப் புறப்பட்டான்.
21 அவன் இவனிடத்திற்கு பிரதிநிதிகளை அனுப்பி: யூதாவின் ராஜாவே, எனக்கும் உமக்கும் என்ன? நான் இப்போது உமக்கு விரோதமாக அல்ல, என்னோடு போர்செய்கிற ஒருவனுக்கு விரோதமாகப் போகிறேன்; நான் விரைவாக செயல்படவேண்டுமென்று தேவன் சொன்னார்; தேவன் என்னோடிருக்கிறார்; அவர் உம்மை அழிக்காமலிருக்க அவருக்கு எதிராகச் செய்வதை விட்டுவிடும் என்று சொல்லச்சொன்னான்.
22 ஆனாலும் யோசியா தன் முகத்தை அவனை விட்டுத் திருப்பாமலும், நேகோ சொன்ன தேவனுடைய வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடாமலும், அவனோடு போர்செய்ய மாறுவேடமிட்டு, மெகிதோவின் பள்ளத்தாக்கிலே போர்செய்கிறதற்கு வந்தான்.
23 வில்வீரர்கள் யோசியா ராஜாவின்மேல் அம்பு எய்தார்கள்; அப்பொழுது ராஜா தன் ஊழியக்காரர்களை நோக்கி: என்னை அப்புறம் கொண்டுபோங்கள், எனக்குக் கொடிய காயம்பட்டது என்றான்.
24 அப்பொழுது அவனுடைய வேலைக்காரர்கள் அந்த இரதத்தின்மேலிருந்த அவனை இறக்கி, அவனுக்கு இருந்த இரண்டாவது இரதத்தின்மேல் ஏற்றி அவனை எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்; அவன் மரணமடைந்து தன் பிதாக்களின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டான்; யூதாவிலும் எருசலேமிலுமுள்ள யாவரும் யோசியாவுக்காகத் துக்கங்கொண்டாடினார்கள்.
25 எரேமியா யோசியாவின்மேல் புலம்பல் பாடினான்; சகல பாடகர்களும் பாடகிகளும் இந்நாள்வரைக்கும் தங்கள் புலம்பல்களில் யோசியாவைக்குறித்துப் பாடுகிறார்கள்; அவைகள் இந்நாள்வரைக்கும் இஸ்ரவேலிலே வழக்கமாக இருக்கிறது; அவைகள் புலம்பலின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
26 யோசியாவின் மற்ற செயல்பாடுகளும், கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறதற்கு ஏற்ற அவன் செய்த நன்மைகளும்,
27 அவனுடைய ஆரம்பம்முதல் கடைசிவரையுள்ள செயல்களும், இஸ்ரவேல் யூதா ராஜாக்களின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.