1 யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமாகிய* செதேக்கியாவுடைய ஆட்சியின் தொடக்கத்தில் ஆண்டவர் எரேமியாவுக்கு அருளிய வாக்கு இதுவே:2 “ஆண்டவர் என்னிடம் இவ்வாறு உரைத்தார்; கயிறுகளையும் நுகத்தடியையும் நீ செய்து, உனது கழுத்தில் பூட்டிக் கொள்.3 யூதாவின் அரசனான செதேக்கியாவிடம் எருசலேமுக்கு வந்துள்ள தூதர்கள் வழியாக ஏதோம் மன்னனுக்கும் மோவாபு மன்னனுக்கும் அம்மோனியரின் மன்னனுக்கும் தீர் மன்னனுக்கும் சீதோன் மன்னனுக்கும் செய்தி சொல்லி அனுப்பு.4 அவர்கள் தங்கள் தலைவர்களிடம் பின்வரும் செய்தியைச் சொல்லுமாறு கட்டளையிடு; இஸ்ரயேலின் கடவுளான படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:5 உங்கள் தலைவர்களிடம் நீங்கள் சொல்லவேண்டியது; என் மிகுந்த ஆற்றலோடும் ஓங்கிய புயத்தோடும் மண்ணுலகையும் அதில் வாழும் மனிதரையும் விலங்குகளையும் படைத்தது நானே. எனக்கு விருப்பமானவர்களிடம் அவற்றை நான் கொடுப்பேன்.6 என் ஊழியனும் பாபிலோனிய மன்னனுமான நெபுகத்னேசரின் கையில் இந்நாடுகளை எல்லாம் இப்பொழுது ஒப்புவித்திருப்பதும் நானே. அவனுக்கு அடிபணியும் பொருட்டுக் காட்டு விலங்குகளையும் அவனிடம் நான் ஒப்புவித்திருக்கிறேன்.7 அவனுடைய நாட்டுக்கென்று குறிக்கப்பட்ட காலம் வரும்வரை, மக்களினங்கள் எல்லாம் அவனுக்கும் அவனுடைய மகனுக்கும் பேரனுக்கும் பணிவிடை செய்வார்கள். பின்னர் பல்வேறு மக்களினத்தாரும் மாமன்னர்களும் அவனையே தங்கள் அடிமை ஆக்கிக்கொள்வார்கள்.8 ஆனால் பாபிலோனிய மன்னனான நெபுகத்னேசருக்கு அடிபணிந்து, அவனது நுகத்தைத் தனது கழுத்தில் ஏற்க மனமில்லாத மக்களினத்தையோ அரசையோ — அவனுடைய கையில் அவற்றை நான் ஒப்புவிக்கும்வரை — வாள், பஞ்சம், கொள்ளைநோய் ஆகியவற்றால் தண்டிப்பேன், என்கிறார் ஆண்டவர்.⒫9 நீங்களோ ‘பாபிலோனிய மன்னனுக்கு அடிபணியாதீர்கள்’ என்று உங்களுக்குச் சொல்லும் உங்கள் இறைவாக்கினர், குறிசொல்வோர், கனவுக்காரர், மந்திரவாதி, சூனியக்காரர் ஆகியோருக்குச் செவி கொடாதீர்கள்.10 ஏனெனில் அவர்கள் உங்களிடம் பொய்யை இறைவாக்காக உரைக்கிறார்கள். அதன் விளைவாக உங்கள் நாட்டினின்று நீங்கள் அப்புறப்படுத்தப்படுவீர்கள். நான் உங்களைத் துரத்தியடிப்பேன்; நீங்கள் அழிந்து போவீர்கள்.11 ஆனால், பாபிலோனிய மன்னனின் நுகத்தைத் தன் கழுத்தில் ஏற்று, அவனுக்கு அடிபணியும் எந்த இனத்தையும் அதன் சொந்த நாட்டிலேயே நான் விட்டு வைப்பேன். அந்த இனம் உழுது பயிரிட்டு அங்கேயே குடியிருக்கும், என்கிறார் ஆண்டவர்.”⒫12 யூதாவின் அரசனான செதேக்கியாவிடமும் இதே போன்று பேசினேன்: “பாபிலோனிய மன்னனின் நுகத்துக்கு உங்கள் கழுத்தை நீட்டுங்கள்; அவனுக்கும் அவனுடைய மக்களுக்கும் அடிபணியுங்கள். அப்படியானால் நீங்கள் பிழைப்பீர்கள்.13 பாபிலோனிய மன்னனுக்கு அடிபணிய மனம் இல்லாத மக்களினத்தின் மேல் அனுப்பபுவதாக ஆண்டவர் எச்சரித்துள்ள வாள், பஞ்சம், கொள்ளைநோய் ஆகியவற்றுக்கு நீரும் உம் மக்களும் ஏன் இரையாக வேண்டும்?14 எனவே ‘பாபிலோனிய மன்னனுக்கு அடிபணிய வேண்டாம்’ என உங்களுக்குச் சொல்லும் இறைவாக்கினரின் சொற்களுக்கு நீங்கள் செவிகொடாதீர்கள். ஏனெனில் உங்களிடம் அவர்கள் பொய்யை இரைவாக்காக உரைக்கிறார்கள்.15 நான் அவர்களை அனுப்பவில்லை, என்கிறார் ஆண்டவர். இருப்பினும், நான் உங்களை நாடுகடத்தும் பொருட்டும், அங்கே நீங்களும் உங்களோடு பேசும் இறைவாக்கினர்களும் அழியும் பொருட்டும், அவர்கள் இவ்வாறு என் பெயரால் பொய்யை இறைவாக்காக உரைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.”⒫16 பின்னர் குருக்களிடமும் மக்கள் எல்லாரிடமும் நான் சொன்னது; “ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; ‘இதோ! ஆண்டவரது இல்லத்தின் கலங்கள் இப்பொழுதே பாபிலோனிலிருந்து திருப்பிக் கொணரப்படும்’, என்று உங்களுக்கு அறிவிக்கும் இறைவாக்கினர்களின் சொற்களுக்கு நீங்கள் செவிகொடுக்காதீர்கள். ஏனெனில் அவர்கள் உங்களிடம் பொய்யை இறைவாக்காக உரைக்கிறார்கள்.17 எனவே அவர்களுக்குச் செவி கொடாதீர்கள். பாபிலோனிய மன்னனுக்கு அடிபணிந்தால் நீங்கள் பிழைப்பீர்கள். இந்நகர் ஏன் பாழாக வேண்டும்?18 அவர்கள் உண்மையாகவே இறைவாக்கினர்களாய் இருந்தால், ஆண்டவரின் வாக்கும் அவர்களோடு இருந்தால், ஆண்டவரின் இல்லத்திலும் யூதாவின் அரசனது அரண்மனையிலும் எருசலேமிலும் மீந்திருக்கும் கலங்களாவது பாபிலோனுக்குப் போகாதவாறு இப்பொழுதே அவர்கள் படைகளின் ஆண்டவரிடம் பரிந்து பேசட்டும்.”⒫19 ❮19-20❯பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர், யோயாக்கிமின் மகனும் யூதாவின் அரசனுமான எக்கோனியாவையும் யூதாவிலும் எருசலேமிலும் வாழ்ந்துவந்த உயர்குடி மக்கள் அனைவரையும் எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு நாடுகடத்திய பொழுது, தன்னோடு எடுத்துச் செல்லாமல் இந்நகரிலேயே விட்டுச்சென்றிருந்த தூண்கள், வெண்கலக்கடல், ஆதாரங்கள், பிற கலங்கள் முதலியவற்றைக் குறித்துப் படைகளின் ஆண்டவர் கூறுவது:20 Same as above21 ஆண்டவரின் இல்லத்திலும் யூதாவின் அரசனின் அரண்மனையிலும் எருசலேமிலும் மீந்திருக்கும் கலங்கள் பற்றி இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:22 ‘அவை யாவும் பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்படும். நான் அவற்றின்மீது எனது கவனத்தைத் திருப்பும்வரை அவை அங்கேயே இருக்கும். பின்னர் நான் அவற்றைத் திரும்பக் கொண்டுவந்து இவ்விடத்தில் வைக்கச் செய்வேன்’ என்கிறார் ஆண்டவர்.
By continuing to browse the site, you are agreeing to our use of cookies.