Psalm 147 in Tamil ERV Compare Tamil Easy Reading Version
1 கர்த்தர் நல்லவர், எனவே அவரைத் துதியுங்கள். எங்கள் தேவனுக்கு துதிகளைப் பாடுங்கள். அவரைத் துதிப்பது நல்லதும் களிப்புமானது.
2 கர்த்தர் எருசலேமைக் கட்டினார். சிறைப் பிடித்துச் செல்லப்பட்ட இஸ்ரவேலரை தேவன் மீண்டும் அழைத்து வந்தார்.
3 தேவன் அவர்களின் உடைந்த இருதயங்களைக் குணமாக்கி, அவர்கள் காயங்களைக் கட்டுகிறார்.
4 தேவன் நட்சத்திரங்களின் எண்ணிக்கையை அறிகிறார். ஒவ்வொன்றின் பெயரையும் தெரிந்திருக்கிறார்.
5 நம் ஆண்டவர் மிகவும் மேன்மையானவர். அவர் மிகவும் வல்லமையுள்ளவர். அவர் அறிகிற காரியங்களுக்கு எல்லையில்லை.
6 கர்த்தர் எளியோரைத் தாங்கி உதவுகிறார். ஆனால் அவர் தீயோரை அவமானப்படுத்துகிறார்.
7 கர்த்தருக்கு நன்றி சொல்லுங்கள். கின்னரங்களால் நமது தேவனைத் துதியுங்கள்.
8 தேவன் வானத்தை மேகங்களால் நிரப்புகிறார். தேவன் பூமிக்காக மழையைப் பெய்யப்பண்ணுகிறார். தேவன் மலைகளின் மேல் புல் வளரும்படி செய்கிறார்.
9 தேவன் மிருகங்களுக்கு உணவளிக்கிறார். தேவன் பறவைக் குஞ்சுகளுக்கு உணவூட்டுகிறார்.
10 போர்க் குதிரைகளும் வல்லமையுள்ள வீரர்களும் அவரை மகிழ்ச்சிப்படுத்தமாட்டார்கள்.
11 கர்த்தரைத் தொழுதுகொள்கிற ஜனங்கள் அவரை மகிழ்ச்சியாக்குகிறார்கள். அவரது உண்மை அன்பை நம்புகிற ஜனங்களைக் கண்டு அவர் சந்தோஷமடைகிறார்.
12 எருசலேமே, கர்த்தரைத் துதி! சீயோனே, உன் தேவனைத் துதி!
13 எருசலேமே, தேவன் உன் கதவுகளை உறுதி யாக்குகிறார். தேவன் உன் நகரத்தின் ஜனங்களை ஆசீர்வதிக்கிறார்.
14 உன் நாட்டிற்கு தேவன் சமாதானத்தைக் கொண்டுவந்தார். எனவே பகைவர்கள் போரில் உன் நாட்டுத் தானியத்தைக் கவர்ந்து செல்லவில்லை. உனக்கு உணவிற்குத் தேவையான தானியம் மிகுதியாக இருக்கிறது.
15 பூமிக்கு தேவன் கட்டளையிடுகிறார். அது உடனே கீழ்ப்படிகிறது.
16 நிலம் கம்பளியைப்போன்று வெண்மையாகும்வரை தேவன் பனியை விழப்பண்ணுகிறார். உறைந்த பனி காற்றினூடே தூசியைப்போல வீசும்படி தேவன் செய்கிறார்.
17 தேவன் வானத்திலிருந்து கற்களைப்போல கல்மழையை பெய்யப் பண்ணுகிறார். அவர் அனுப்பும் குளிரைத் தாங்கிக்கொள்ள ஒருவனாலும் ஆகாது.
18 அப்போது, தேவன் மற்றொரு கட்டளையைத் தருகிறார், உடனே வெப்பமான காற்று மீண்டும் வீசுகிறது. பனி உருகுகிறது, தண்ணீர் பாய்ந்தோடத் தொடங்குகிறது.
19 தேவன் யாக்கோபிற்குத் தமது கட்டளைகளைக் கொடுத்தார். தேவன் இஸ்ரவேலுக்கு அவரது சட்டங்களைக் கொடுத்தார்.
20 தேவன் வேறெந்த தேசத்திற்கும் இதைச் செய்யவில்லை. தேவன் வேறெந்த ஜனங்களுக்கும் தனது சட்டங்களைப் போதிக்கவில்லை. கர்த்தரைத் துதியுங்கள்!