Philippians 1 in Tamil ERV Compare Tamil Easy Reading Version
1 இயேசு கிறிஸ்துவின் ஊழியர்களாகிய பவுலும் தீமோத்தேயுவும் பிலிப்பி நகரத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள் வாழ்கிற தேவனுடைய பரிசுத்த மக்களுக்கும் உங்கள் கண்காணிப்பாளர்களுக்கும், விசேஷ உதவியாளர்களுக்கும், உங்கள் மூப்பர்களுக்கும் சிறப்பு உதவியாளர்களுக்கும் எழுதுவது.
2 நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் கிருபையும், சமாதானமும் உங்களுக்கு உண்டாவதாக.
3 எப்போதும் உங்களை நினைத்துக்கொண்டு நான் தேவனுக்கு நன்றி சொல்கிறேன்.
4 உங்கள் அனைவருக்காக எப்போதும் மகிழ்ச்சியோடு நான் பிரார்த்தனை செய்கிறேன்.
5 மக்களிடம் நான் நற்செய்தியைக் கூறும்போது அதற்கு உதவி செய்த உங்கள் அனைவருக்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். நீங்கள் சுவிசேஷத்தை நம்பிய நாள் முதல் நீங்கள் நற்கிரியைகளில் பங்கேற்று எனக்கு உதவியுள்ளீர்கள்.
6 உங்களில் தேவன் நற்செயல்களைச் செய்யத் தொடங்கினார். அவர் இதை உங்களில் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார். இயேசு கிறிஸ்து மீண்டும் வரும்போது தேவன் தன் வேலையை உங்கள் மூலம் செய்து முடிப்பார். அதைப் பற்றி நான் உறுதியாய் இருக்கிறேன்.
7 உங்கள் அனைவரையும் குறித்து இவ்வாறு நான் நினைப்பது சரியென்று எண்ணுகிறேன். இதில் நான் உறுதியாகவும் உள்ளேன். ஏனென்றால் உங்களை என் இதயத்தில் வைத்திருக்கிறேன். நான் உங்களை மிக நெருக்கமாக உணர்கிறேன். எனெனில் நீங்கள் அனைவரும் என்னோடு தேவனுடைய கிருபையைப் பகிர்ந்துகொள்கிறீர்கள். நான் சிறையில் இருக்கிறபோதும், நற்செய்திக்காக உத்தரவு சொல்லி அதைத் திடப்படுத்தி வருகிறதிலும், நீங்கள் தேவனுடைய கிருபையை என்னோடு பங்கிட்டுக்கொள்கிறீர்கள்.
8 உங்களைப் பார்க்க நான் மிகவும் விரும்புகிறேன் என்று தேவனுக்குத் தெரியும். கிறிஸ்து இயேசுவின் அன்புடன் உங்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன்.
9 உங்களுக்காக என்னுடைய பிரார்த்தனை இதுவே: உங்கள் அன்பு மேலும் மேலும் வளர்வதாக. உங்களுக்கு அறிவும், அன்போடு கூட புரிந்துகொள்ளுதலும் உண்டாவதாக.
10 பிறகு நன்மைக்கும் தீமைக்கும் உள்ள வேறுபாட்டை உங்களால் கண்டுகொண்டு, நன்மையை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொள்ளவும் கிறிஸ்து வரும்போது நீங்கள் தூய்மையடையவும், தவறு இல்லாதவர்களாக இருக்கவும்,
11 இயேசு கிறிஸ்துவின் உதவியுடன், அவர் மூலம் நீங்கள் பல நற்செயல்களைச் செய்து தேவனுக்கு மகிமையையும் பாராட்டுகளையும் சேர்க்க வேண்டும்.
12 சகோதர சகோதரிகளே! எனக்கு ஏற்பட்ட அந்தத் துன்பங்கள் எல்லாம் நற்செய்தியைப் பரப்புகிற பணிக்கே உதவியது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.
13 சிறைக்குள் நான் ஏன் இருக்கிறேன் என்பது தெளிவாகிறது. ஏனென்றால் நான் கிறிஸ்துவின் நம்பிக்கையாளன். காவலர்களுக்கும் மற்ற மக்களுக்கும் இது தெரியும்.
14 இன்னும் நான் சிறைப்பட்டிருக்கிறேன். அது நன்மைக்குத்தான் என்று பல விசுவாசிகள் இப்போது எண்ணுகின்றனர். எனவே கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அச்சமில்லாமல் பரப்புவதில் மேலும் தைரியம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
15 கிறிஸ்துவைப் பற்றிச் சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள், என்றாலும் அவர்கள் பொறாமையும், கசப்புணர்வும் கொண்டவர்களாக உள்ளார்கள். இன்னும் சிலர் உதவி செய்யும் விருப்பத்தோடு கிறிஸ்துவைப் பற்றி பிரச்சாரம் செய்கிறார்கள்.
16 இவர்கள், அன்பினால் கிறிஸ்துவைப்பற்றி பிரச்சாரம் செய்கின்றனர். தேவன் எனக்கு இந்தப் பணியை நற்செய்தியைப் பாதுகாப்பதற்காகத் தந்துள்ளார் என்பதை இவர்கள் அறிவர்.
17 மற்றவர்களோ தன்னலம் காரணமாக கிறிஸ்துவைப் பற்றி பிரச்சாரம் செய்கின்றனர். அவர்களின் பிரச்சார நோக்கம் தவறானது. சிறைக்குள் எனக்குத் தொல்லைகளை உருவாக்க அவர்கள் விரும்புகின்றனர்.
18 அவர்கள் எனக்குத் தொல்லை கொடுத்தால் அதைப் பற்றி நான் கவலைப்படப் போவதில்லை. மக்களிடம் அவர்கள் இயேசுவைப் பற்றிக் கூறுகிறார்கள் என்பதுதான் முக்கியமான விஷயம். நானும் இயேசுவைப் பற்றி அவர்கள் மக்களிடம் சொல்ல வேண்டும் என்றே விரும்புகிறேன். அவர்கள் அதைச் சரியான நோக்கத்தோடு செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் தவறான நோக்கத்தோடு போலியாகப் பிரச்சாரம் செய்தாலும் கூட நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால் அவர்கள் கிறிஸ்துவைப் பற்றிப் பேசுகிறார்கள். இதனால் தொடர்ந்து நான் மகிழ்ச்சியடைவேன்.
19 எனக்காக நீங்கள் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறீர்கள். இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த ஆவியானவர் எனக்கு உதவுகிறார். ஆகையால் இந்தத் துன்பங்கள் எனக்கு விடுதலையைத் தரும் என்று எனக்குத் தெரியும்.
20 எதிலும் நான் கிறிஸ்துவிடம் தவறமாட்டேன். இதுவே நான் விரும்புவதும், நம்புவதும் கூட. இந்த உலகத்தில் என் வாழ்வில் நான் இயேசுவின் உயர்வைக் காட்ட வேண்டும். அதனை வெளிப்படுத்தும் தைரியத்தை எப்போதும் போல இப்போதும் பெறுவேன் என்று நான் நம்புகிறேன். நான் வாழ்ந்தாலும் சரி, மரித்தாலும் சரி, இதைச் செய்ய விரும்புகிறேன்.
21 கிறிஸ்துவை என் வாழ்வின் ஜீவனாக நம்புகிறேன். இதனால் நான் இறந்து போனாலும் எனக்கு லாபம்தான்.
22 இந்த சரீரத்தில் நான் தொடர்ந்து வாழ்ந்தால் கர்த்தருக்குத் தொண்டு செய்ய என்னால் முடியும். ஆனால் வாழ்வு, சாவு என்பவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பது? எனக்குத் தெரியவில்லை.
23 வாழ்வு, சாவு இரண்டிலொன்றைத் தேர்ந்தெடுப்பது கடினமானது. இந்த வாழ்க்கையை விட்டுவிட்டு நான் கிறிஸ்துவோடு வாழ விரும்புகிறேன். அது சிறந்தது.
24 ஆனால் நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு மிக அவசியம்.
25 உங்களுக்கு நான் தேவையானவன் என்பதை அறிவேன். அதனால் உங்களோடு இருக்க நான் விரும்புகிறேன். உங்கள் நம்பிக்கையில் நீங்கள் மகிழ்ச்சியுடன் வளரவும் நான் உதவுவேன்.
26 மீண்டும் உங்களோடு நான் இருக்கும்போது நீங்கள் கிறிஸ்துவாகிய இயேசுவுக்குள் மிகவும் மகிழ்ச்சியாய் இருப்பீர்கள்.
27 நற்செய்திக்குப் பொருந்துகிற வாழ்வை வாழ்வது பற்றி உறுதி செய்துகொள்ளுங்கள். பிறகு உங்களைப் பார்வையிட நான் வந்தாலோஅல்லது உங்களை விட்டு நான் தூரம் போனாலோ உங்களைப் பற்றி நான் நல்ல செய்திகளையே கேள்விப்படுவேன். நற்செய்தியிலிருந்து வரும் நம்பிக்கைக்காக நீங்கள் தொடர்ந்து பலத்தோடு பொது நோக்கத்துக்காக ஒன்று சேர்ந்து குழுவாகப் பணியாற்றுகிறீர்கள் என்று நான் கேள்விப்படுவேன்.
28 உங்களுக்கு எதிரான மக்களைப் பற்றி நீங்கள் அச்சப்பட வேண்டாம். உங்கள் பகைவர்கள் இழப்புக்குள்ளாவர். நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள். இச்சான்றுகள் தேவனிடமிருந்து வந்தன.
29 ஏனென்றால் கிறிஸ்துவினிடத்தில் நம்பிக்கை செலுத்துவதற்கு மாத்திரமல்ல, அவர் நிமித்தமாகப் பாடுபடுவதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது.
30 நான் உங்களோடு இருந்தபோது நற்செய்திக்கு எதிராக இருந்த மக்களுடன் நான் எதிர்கொள்ள நேர்ந்த போராட்டங்களை நீங்கள் பார்த்தீர்கள். இப்போது நான் எதிர்கொண்டுவரும் போராட்டங்களைப் பற்றியும் நீங்கள் கேள்விப்படுகிறீர்கள். நீங்களும் இது போன்ற போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டும்.