1 அன்பார்ந்தவர்களே, இப்பொழுது நான் உங்களுக்கு எழுதுவது இரண்டாம் திருமுகம். இத்திருமுகங்கள் வழியாக ஒருசிலவற்றை நினைவுறுத்தி, உங்கள் நேர்மையான மனத்தைத் தூண்டி எழுப்புகிறேன்.2 தூய இறைவாக்கினர்கள் முன்னுரைத்த வாக்குகளையும் ஆண்டவரும் மீட்பருமானவர் உங்கள் திருத்தூதர் மூலமாகத் தந்த கட்டளையையும் நீங்கள் நினைவில் கொள்ளுங்கள்.3 நீங்கள் முதலாவது தெரிந்துகொள்ளவேண்டியது இதுவே: இறுதிக் காலத்தில் ஏளனம் செய்வோர் சிலர் தோன்றித் தங்கள் சொந்த தீய நாட்டங்களுக்கேற்ப வாழ்ந்து உங்களை எள்ளிநகையாடுவர்.4 அவர்கள், “அவரது வருகையைப்பற்றிய வாக்குறுதி என்னவாயிற்று? நம் தந்தையரும் இறந்து போயினர்; ஆயினும் படைப்பின் தொடக்கத்தில் இருந்ததுபோல எல்லாம் அப்படியே இருக்கிறதே” என்று சொல்லுவார்கள்.5 பழங்காலத்திலிருந்தே கடவுளுடைய வார்த்தையால் விண்ணுலகும் மண்ணுலகும் தோன்றின. மண்ணுலகம் நீரிலிருந்தும் நீராலும் நிலைபெற்றிருந்தது என்பதை இவர்கள் வேண்டுமென்றே மறந்து விடுகிறார்கள்.6 அந்த நீராலே, வெள்ளப்பெருக்கினால் அப்போதிருந்த உலகம் அழிவுற்றது.7 இப்போதுள்ள விண்ணுலகும் மண்ணுலகும் அதே வார்த்தையினாலே தீக்கிரையாவதற்கென ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இறைப்பற்றில்லாதோர் அழிவுற வேண்டிய தீர்ப்பு நாள் வரையிலும் அவை விட்டு வைக்கப்பட்டுள்ளன.⒫8 அன்பார்ந்தவர்களே, நீங்கள் ஒன்றை மறந்துவிடவேண்டாம். ஆண்டவரின் பார்வையில் ஒருநாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆயிரம் ஆண்டுகள் ஒருநாள் போலவும் இருக்கின்றன.9 ஆண்டவர் தம் வாக்குறுதியை நிறைவேற்றக் காலந்தாழ்த்துவதாகச் சிலர் கருதுகின்றனர். ஆனால், அவர் அவ்வாறு காலந்தாழ்த்துவதில்லை. மாறாக, உங்களுக்காகப் பொறுமையோடிருக்கிறார். யாரும் அழிந்து போகாமல், எல்லாரும் மனம் மாறவேண்டுமென விரும்புகிறார்.⒫10 ஆனால் ஆண்டவருடைய நாள் திருடனைப்போல வரும். வானங்கள் பெருமுழக்கத்துடன் மறைந்தொழியும்; பஞ்சபூதங்கள் வெந்திருகிப் போகும். மண்ணுலகமும் அதன் செயல்களும் தீக்கிரையாகும்.11 இவை யாவும் அழிந்துபோகுமாதலால் நீங்கள் தூய, இறைப்பற்றுள்ள நடத்தையில் மிகவும் சிறந்து விளங்க வேண்டும்!12 கடவுளின் நாளை எதிர்பார்த்து அவர் வருகையை விரைவுபடுத்த வேண்டும். அந்நாளில் வானங்கள் எரிந்தழிந்து பஞ்சபூதங்கள் வெந்துருகிப் போகும்.13 அவர் வாக்களித்தபடியே நீதி குடிகொண்டிருக்கும் புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் வரும் என நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.⒫14 ஆகவே, அன்பார்ந்தவர்களே, இவற்றை எதிர்பார்த்திருக்கும் உங்களை அவர் மாசுமறுவற்றவர்களாய், நல்லுறவு கொண்டவர்களாய்க் காணும் வகையில் முழுமுயற்சி செய்யுங்கள்.15 நம் ஆண்டவரின் பொறுமையை மீட்பு எனக் கருதுங்கள். நம் அன்பார்ந்த சகோதரர் பவுலும் தமக்கு அருளப்பட்ட ஞானத்தின்படி இவ்வாறுதான் உங்களுக்கு எழுதியுள்ளார்.16 தம்முடை திருமுகங்களில் இவை பற்றிப் பேசும் போதெல்லாம் இவ்வாறே அவர் சொல்லுகிறார். அவருடைய திருமுகங்களில் புரிந்துகொள்வதற்குக் கடினமானவை சில உண்டு. கல்வி அறிவில்லாதவர்களும் உறுதியற்றவர்களும் மறைநூலின் மற்றப் பகுதிகளுக்குப் பொருள் திரித்துக் கூறுவதுபோல் இவற்றுக்கும் கூறுகின்றனர்; அதனால் தங்களுக்கே அழிவை வருவித்துக் கொள்கின்றனர்.⒫17 அன்பார்ந்தவர்களே, நீங்கள் இவற்றையெல்லாம் ஏற்கெனவே அறிந்திருக்கிறீர்கள். கட்டுப்பாடற்றவர்களின் தவறான வழிகளால் கவர்ந்திழுக்கப்பட்டு, உங்கள் உறுதி நிலையினின்று விழுந்துவிடாதபடி கவனமாயிருங்கள்.18 நம் ஆண்டவரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவின் அருளிலும் அறிவிலும் வளர்ச்சி அடையுங்கள். அவருக்கே இன்றும் என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.
By continuing to browse the site, you are agreeing to our use of cookies.