1 Chronicles 21 in Nepali TRV Compare Thiru Viviliam
1 சாத்தான் இஸ்ரயேலுக்கு எதிராக எழும்பி, இஸ்ரயேலரைக் கணக்கிடுமாறு தாவீதைத் தூண்டினான்.2 தாவீது யோவாபையும், மற்றப் படைத்தலைவர்களையும் நோக்கி, “நீங்கள் போய் பெயேர்செபா தொடங்கி தாண்வரை வாழும் இஸ்ரயேல் மக்கள் தொகையைக் கணக்கிட்டு என்னிடம் கொண்டுவாருங்கள். நான் அதை அறியவேண்டும்” என்றார்.⒫3 யோவாபு பதிலுரையாக, “ஆண்டவர் தன் மக்களை இப்போது இருப்பதினும் நூறு மடங்கு மிகுதியாய்ப் பெருகச் செய்வாராக! என் தலைவராகிய அரசரே, அவர்கள் யாவரும் என் தலைவரின் பணியாளர் அன்றோ! என் தலைவர் இதை ஏன் நாட வேண்டும்? இஸ்ரயேலின் மீது பழி விழக் காரணமாக வேண்டும்?” என்றார்.4 இறுதியில், அரசரின் கட்டளை யோவாபைப் பணிய வைத்தது. எனவே, யோவாபு புறப்பட்டுப்போய் இஸ்ரயேல் நாடெங்கும் சென்று எருசலேமுக்குத் திரும்பி வந்தார்.5 போருக்குத் தகுந்த ஆள்களின் தொகையை யோவாபு தாவீதிடம் அறிவித்தார். வாளேந்தும் வீரர் இஸ்ரயேலில் பதினோர் இலட்சம் பேரும், யூதாவில் நான்கு இலட்சத்து எழுபதினாயிரம் பேரும் இருந்தனர்.6 எனினும், அரசரின் ஆணையை வேண்டாவெறுப்பாய் நிறைவேற்றினபடியால் லேவி, பென்யமின் குலத்தாரை யோவாபு கணக்கிடவில்லை.⒫7 இக்கணக்கெடுப்பு கடவுளின் பார்வையில் தீயதெனப்பட்டதால், அவர் இஸ்ரயேலைத் தண்டித்தார்.8 தாவீது கடவுளிடம், “நான் இந்தச் செயலைச் செய்தபடியால் பெரும் பாவம் செய்தேன். உம் அடியேனை மன்னியும், மதியீனமாய்ச் செயல்பட்டேன்” என்று சொன்னார்.⒫9 அப்போது தாவீதுக்குக் காட்சியாளராய் இருந்த காத்து கூறியதாவது;10 “நீ தாவீதிடம் சென்று, ‘ஆண்டவர் கூறுவது இதுவே; நான் மூன்று காரியங்களை உனக்குமுன் வைக்கிறேன்; அவற்றுள் ஒன்றை நீ தெரிந்து கொள்; அவ்வாறே உனக்குச் செய்வேன்’ என்று சொல்” என்றார்.⒫11 காத்து தாவீதிடம் சென்று “ஆண்டவர் கூறுவது இதுவே; ‘நீயே தேர்ந்துகொள்;12 மூன்று ஆண்டுப்பஞ்சமா? உன் எதிரிகளின் வாளுக்கு அஞ்சி மூன்று மாதம் அவர்கள்முன் ஓடுவதா? இஸ்ரயேல் நாடெங்கும் சாவுண்டாகும்படி ஆண்டவரின் தூதர் மூன்று நாள்கள் நாட்டில் வருவிக்கும் ஆண்டவரின் வாளான கொள்ளை நோயா?’ இப்போது, என்னை அனுப்பியவருக்குப் பதிலளிக்குமாறு உம் முடிவைக் கூறும்” என்றார்.⒫13 தாவீது காத்தை நோக்கி, “நான் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளேன்; ஆண்டவர் கையில் நான் சரண் அடைவதே மேல்! ஏனெனில், அவர் மிகவும் இரக்கம் உள்ளவர். மனிதர் கையில் நான் அகப்படக்கூடாது” என்றார்.⒫14 எனவே ஆண்டவர் இஸ்ரயேலின் மேல் கொள்ளை நோயை அனுப்பினார். அதனால் இஸ்ரயேலருள் எழுபதினாயிரம் பேர் மாண்டனர்.15 பின்னர், எருசலேமை அழிக்கக் கடவுள் ஒரு தூதரை அனுப்பினார். எனினும், அவர் அவ்வாறு அழிக்கும்போது ஆண்டவர் அந்தத் தீங்கைப் பார்த்து மனம் வருந்தி, அழித்துக் கொண்டிருந்த தூதரைப் பார்த்து, “போதும் உடனே நிறுத்து!” என்று கட்டளையிட்டார். அந்நேரம் ஆண்டவரின் தூதர் எபூசியனான ஒர்னானின் களத்தருகில் நின்று கொண்டிருந்தார்.⒫16 தாவீது தம் கண்களை உயர்த்தியபோது, ஆண்டவரின் தூதர் மண்ணுலகுக்கும் விண்ணுலகுக்கும் நடுவே, தன் கையில் உருவிய வாள் பிடித்து, அதை எருசலேம்மீது நீட்டியிருக்கக் கண்டார். அப்போது தாவீதும் பெரியோர்களும் சாக்கு உடை உடுத்தி முகம் குப்புற விழுந்தனர்.17 தாவீது கடவுளை நோக்கி, “மக்களைக் கணக்கிடச் சொன்னவன் நானல்லவா? நானே குற்றவாளி; நானே தீமை செய்தேன்; இந்த ஆடுகள் என்ன செய்தன? என் கடவுளாகிய ஆண்டவரே! உமது கை என்மேலும் என் தந்தையின் வீட்டாரின் மேலும் இருக்கட்டும், கொள்ளை நோய் மக்களிடமிருந்து விலகட்டும்” என்று வேண்டினார்.⒫18 ஆண்டவரின் தூதர் காத்தை நோக்கி, “எபூசியனான ஒர்னாவின் களத்திற்குச் சென்று ஆண்டவருக்கு ஒரு பலி பீடம் எழுப்புமாறு தாவீதுக்குச் சொல்" என்றார்.19 ஆண்டவர் பெயரால் காத்து கூறிய வாக்கின்படி தாவீது சென்றார்.20 அந்நேரத்தில் ஒர்னான் கோதுமை போரடித்துக் கொண்டிருந்தார். அவர் திரும்பியபோது தூதரைக் கண்டார். அவரோடிருந்த அவருடைய நான்கு புதல்வர்களும் ஒளிந்து கொண்டனர்.21 தாவீது தன்னிடம் வருவதை ஒர்னான் தலைநிமிர்ந்து பார்த்து, போரடிக்கும் களத்தை விட்டு வெளியேறி, முகம்குப்புறத்தரையில் விழுந்து அவரை வணங்கினார்.22 தாவீது ஒர்னானை நோக்கி, “உமது போரடிக்கும் களம் இருக்கும் இடத்தை எனக்குக் கொடும். கொள்ளை நோய் மக்களைவிட்டு நீங்கும்படி அவ்விடத்தில் ஆண்டவருக்கு நான் ஒரு பலிபீடத்தைக் கட்டவேண்டும்; அதன் முழு விலையையும் உமக்குத் தருவேன்” என்றார்.⒫23 ஒர்னான் தாவீதை நோக்கி, “என் தலைவராகிய அரசர் அதை எடுத்துக்கொண்டு தாம் விரும்பும் வண்ணம் செய்வாராக! இதோ! எரிபலிக்காக மாடுகளும் விறகுக்காகப் போரடிக்கும் கருவிகளும் படையலுக்காகக் கோதுமையும் இருக்கின்றன. அனைத்தையும் நான் தருகிறேன்” என்றார்.⒫24 அரசர் தாவீது ஒர்னானை நோக்கி, “அப்படியல்ல, நான் அதை முழு விலைக்கு வாங்குவேன். உமக்கு உரியதை ஆண்டவருக்காக எடுத்துக்கொள்ளமாட்டேன். எனக்கு எந்தச் செலவுமின்றி எரிபலி செலுத்தவும் மாட்டேன்” என்றார்.25 அவ்வாறே தாவீது அறுநூறு பொற்காசுகளை* ஒர்னானுக்குக் கொடுத்து அந்த இடத்தை வாங்கினார்.26 தாவீது அங்கு ஒரு பலிபீடத்தை ஆண்டவருக்குக் கட்டி எலிபலிகளையும், நல்லுறவுப் பலிகளையும் செலுத்தி, ஆண்டவரிடம் வேண்டுதல் செய்தார். அவர் பலிபீடத்தின் மேலிருந்த பலியின்மேல் வானின்று இறங்கிய நெருப்பின்மூலம் ஆண்டவர் பதிலளித்தார்.⒫27 தூதரிடம் அவருடைய வாளை மறுபடியும் அதன் உறையில் வைக்குமாறு ஆண்டவர் கட்டளையிட்டார்.28 அப்பொழுது தாவீது எபூசியரான ஒர்னானின் களத்தில் ஆண்டவர் தமக்குப் பதிலளித்ததைக் கண்டு அங்கேயே பலி செலுத்தினார்.29 மோசே பாலைநிலத்தில் எழுப்பிய ஆண்டவரின் திருக்கூடாரமும், எரிபலிபீடமும் அந்நாள்களில் கிபயோனின் தொழுகை மேட்டில் இருந்தன.30 தாவீது ஆண்டவரின் தூதரது வாளுக்கு அஞ்சியபடியால், கடவுள் அருளும் வாக்கைப் பெற அவர் அங்குச் செல்ல இயலவில்லை.
By continuing to browse the site, you are agreeing to our use of cookies.