2 Chronicles 1 in Nepali TRV Compare Thiru Viviliam
1 தாவீதின் மகன் சாலமோன் தம் ஆட்சியை உறுதியாக நிலைநாட்டினார். அவருடைய கடவுளாகிய ஆண்டவர் அவரோடு இருந்து அவரை மேன்மை மிக்கவர் ஆக்கினார்.2 சாலமோன், இஸ்ரயேலர் அனைவரையும் — ஆயிரத்தவர், நூற்றுவர் தலைவர்கள், நீதிபதிகள், இஸ்ரயேலரின் தலைவர்கள், குடும்பத் தலைவர்கள் அனைவரையும் — வரவழைத்துப் பேசினார்.3 அங்கே இருந்த சபையார் அனைவரும் சாலமோனுடன், கிபயோனிலிருந்த தொழுகை மேட்டுக்குச் சென்றனர். ஏனெனில், ஆண்டவரின் அடியார் மோசே பாலை நிலத்தில் செய்த கடவுளின் சந்திப்புக் கூடாரம் அங்கே இருந்தது.4 ஆனால், இதற்குமுன் தாவீது கடவுளின் பேழையை கிரியத்து எயாரிமிலிருந்து எருசலேமுக்குக் கொண்டுவந்து, அங்கே ஏற்கெனவே தாம் அதற்கென அமைத்திருந்த கூடாரத்தில் வைத்திருந்தார்.5 இருப்பினும், கூரின் பேரரும் ஊரியின் மகனுமான பெட்சலேல் செய்த வெண்கலப் பலிபீடம் கிபயோனில் ஆண்டவரின் திருஉறைவிடத்திற்குமுன் இருந்தது. சாலமோனும் சபையாரும் அங்கே வழிபாடு நடத்தச் சென்றனர்.6 சாலமோன் சந்திப்புக்கூடாரத்திற்கு முன்பாக ஆண்டவர் திருமுன் அமைந்திருந்த வெண்கலப் பலிபீடத்திற்கு ஏறிச்சென்று, அதன்மேல் ஆயிரம் எரி பலிகள் செலுத்தினார்.⒫7 அன்றிரவு கடவுள் சாலமோனுக்குத் தோன்றி, “உனக்கு என்ன வரம் வேண்டும்; கேள்” என்று கூறினார்.8 அதற்குச் சாலமோன் கடவுளை நோக்கி, “என் தந்தை தாவீதுக்கு மாபேரன்பு காட்டினீர்; அவருக்குப் பின் நீர் என்னை அரியணையில் அமர்த்தியிருக்கிறீர்.9 கடவுளாகிய ஆண்டவரே, என் தந்தை தாவீதுக்கு நீர் அளித்த வாக்குறுதியை இப்பொழுது நிறைவேற்றுமாறு வேண்டுகிறேன்; ஏனெனில், நிலத்தின் மணல் போன்ற எண்ணற்ற மக்களுக்கு நீர் என்னை அரசனாக்கினீர்.10 எனவே, நான் இம்மக்களை நன்கு அரசாள வேண்டிய ஞானத்தையும் அறிவையும் எனக்கு அளித்தருளும்; ஏனெனில், கணக்கற்ற உம் மக்களுக்கு நீதி வழங்க யாரால் முடியும்?” என்றார்.⒫11 கடவுள், சாலமோனை நோக்கி, “செல்வத்தையோ, சொத்தையோ, புகழையோ, உன்னை வெறுப்பவர்களின் உயிரையோ, நீடிய ஆயுளையோ, நீ கேட்கவில்லை. மாறாக, அரசாளும்படி உன்னிடம் நான் ஒப்படைத்த மக்களுக்கு நீதி வழங்கத் தேவையான ஞானத்தையும் அறிவையும் நீ உள்ளார்ந்த விருப்பத்தோடு கேட்டிருக்கிறாய்.12 எனவே, நான் உனக்கு ஞானத்தையும் அறிவையும் வழங்குகிறேன். அத்துடன் உனக்கு முன் இருந்த அரசர்களோ உனக்குப் பின் வரும் அரசர்களோ பெறாத அளவுக்கு செல்வத்தையும், சொத்தையும், புகழையும் நான் உனக்குத் தருவேன்” என்றார்.13 பிறகு, சாலமோன் கிபயோனிலிருந்த தொழுகை மேட்டிலிருந்தும் சந்திப்புக் கூடாரத்திலிருந்தும் புறப்பட்டு எருசலேமுக்கு திரும்பி வந்து, தொடர்ந்து இஸ்ரயேலை ஆட்சி செய்தார்.14 சாலமோன் தேர்ப் படையையும் குதிரைப் படையையும் அமைத்தார். அவருக்கு ஆயிரத்து நானூறு தேர்கள் இருந்தன; பன்னீராயிரம் குதிரை வீரர்களும் இருந்தனர். அவர்களைத் தேர்ப்படை நகர்களிலும், அரசராகிய தம்மோடு எருசலேமிலும் நிறுத்தி வைத்தார்.15 வெள்ளியும் பொன்னும் கற்களைப்போன்றும், கேதுரு மரங்கள் சமவெளிப் பகுதிகளில் வளரும் அத்தி மரங்களைப் போன்றும் எருசலேமில் ஏராளமாகக் கிடைக்கும்படி அரசர் செய்தார்.16 சாலமோனின் குதிரைகள் எகிப்திலிருந்தும் கேவேயிலிருந்தும் வந்தவை. அரச வணிகர்கள் சிலிசியாவிலிருந்து குறிப்பிட்ட விலைக்கு வாங்கி வந்தனர்.⒫17 அவர்கள் தேர் ஒன்றிற்கு அறுநூறு செக்கேல் எனவும் எகிப்திலிருந்து விலைக்கு வாங்கினர். அவை அவர்கள் வழியாகவே இத்திய மன்னர், சிரிய மன்னர் அனைவரையும் சென்றடைந்தன.
By continuing to browse the site, you are agreeing to our use of cookies.