1 இஸ்ரவேல் ஜனங்களின் தலைவர்கள் இப்பொழுது எருசலேம் நகரத்திற்குள் நுழைந்தனர். இஸ்ரவேலின் மற்ற ஜனங்கள் இனி நகரத்திற்குள் யார் நுழையவேண்டும் என்று முடிவெடுத்தனர். எனவே அவர்கள் சீட்டு குலுக்கிப்போட்டனர். தங்களுக்குள் பத்து பேரில் ஒருவனைப் பரிசுத்த நகரமான எருசலேமில் வாழவைத்தனர். மற்ற ஒன்பது பேர் அவர்களது சொந்தப் பட்டணங்களில் வாழ முடிந்தது.
2 சில ஜனங்கள் எருசலேமில் குடியிருக்கத் தாமாகவே முன்வந்தனர். மற்ற ஜனங்கள் அவர்களுக்கு நன்றி சொல்லி வாழ்த்தினர்.
3 எருசலேமில் குடியிருந்த தலைவர்கள் இத்தகையவர்கள். (இஸ்ரவேல் ஜனங்களில் சிலர் ஆசாரியர்கள், லேவியர்கள், ஆலயப் பணியாளர்கள், சாலொமோனின் வேலைக்காரர்களின் சந்ததியினர். இவர்கள் யூதாவின் நகரங்களில் வாழ்ந்தனர். ஒவ்வொருவரும் தங்களுக்குச் சொந்தமான வெவ்வேறு பட்டணங்களில் வாழ்ந்தனர்.
4 எருசலேம் நகரத்தில் யூதா மற்றும் பென்யமீன் குடும்பத்தினரில் மற்ற ஜனங்கள் வாழ்ந்தனர்). யூதாவின் சந்ததியினர் இவர்கள் எருசலேமிற்குள் நுழைந்தனர். உசியாவின் மகனான அத்தாயாவும், (உசியா சகரியாவின் மகன், அவன் அமரியாவின் மகன், அவன் செபதியாவின் மகன், அவன் மகலாலெயேலின் மகன், அவன் பேரேசின் சந்ததியில் ஒருவன்).
5 பாருக்கின் மகனான மாசெயாவும், (பாருக் கொல்லோசேயின் மகன், அசாயாவின் மகன் கொல்லோசே, அதாயாவின் மகன் அசாயா, யோயாரிப்புவின் மகன் அதாயா. யோயாரிப்பு சகரியாவுக்கு மகன் அவன் சீலோனின் சந்ததியில் ஒருவன்).
6 எருசலேமில் வாழ்ந்துக்கொண்டிருந்த பேரேசின் சந்ததியினர் 468 என்ற எண்ணிக்கையுடையவர்கள். அவர்கள் அனைவரும் தைரியசாலிகள்.
7 இவர்கள் எருசலேமிற்குள் நுழைந்த பென்யமீனின் சந்ததியினர்: மெசுல்லாமின் மகனான சல்லூ (மெசுல்லாம் யோயத்தின் மகன், இவன் பெதாயாவுக்கு மகன், இவன் கொலாயாவுக்கு மகன், இவன் மாசெயாவுக்கு மகன், இவன் இதியேலுக்கு மகன், இவன் எசாயாவுக்கு மகன்)
8 எசாயாவைப் பின்பற்றியவர்கள் கப்பாய், சல்லாய் ஆகியோர் அவர்கள் அனைவரும் சேர்ந்து 928 பேர்.
9 அவர்களுக்கு சிக்ரியின் மகன் யோவேல் பொறுப்பாளனாக இருந்தான். எருசலேம் பட்டணத்தின் இரண்டாவது மாவட்டத்துக்கு செனுவாவின் மகனான யூதா பொறுப்பாளனாக இருந்தான்.
10 இவர்கள் எருசலேமிற்குள் நுழைந்த ஆசாரியர்கள்: யோயாரிப், யாகின் மகன்.
11 இல்க்கியாவின் மகனான செராயா (இல்க்கியா மெசுலாமின் மகன், அவன் சாதோக்கின் மகன், அவன் மொராயோத்தின் மகன், அவன் அகிதூபின் மகன், இவன் தேவனுடைய ஆலயத்தின் மேற்பார்வையாளன்.)
12 சகோதரர்களாகிய 822 பேர் ஆலயத்தில் பணிவிடைச் செய்தனர். எரோகாமுக்கு மகனான அதாயாவும் (எரோகாம் பெல்லியாவின் மகன், அவன் அம்சியின் மகன், அவன் சகரியாவின் மகன், அவன் பஸ்கூரின் மகன், அவன் மல்கியாவின் மகன்).
13 மல்கியாவின் சகோதரர்களான 242 பேர் (இவர்கள் அவர்களது குடும்பத் தலைவர்கள்.) அசரியேலின் மகனான அமாசாயும் (அசரியேல் அகெசாயின் மகன், அவன் மெசில்லே மோத்தின் மகன், அவன் இம்மோரின் மகன்.)
14 இம்மோரின் சகோதரர்களான 128 பேர். (இவர்கள் தைரியமான வீரர்கள். இவர்களின் அதிகாரியாக அகெதோலிமின் மகனான சப்தியேல் இருந்தான்.)
15 எருசலேமிற்குள் நுழைந்த லேவியர்கள் இவர்கள்: அசூபின் மகனான செமாயா (அசூப் அஸ்ரிக்காமின் மகன், அவன் அசபியாவின் மகன், அவன் புன்னியின் மகன்.)
16 சபெதாயும் யோசபாத்தும் (இவ்விருவரும் லேவியர்களின் தலைவர்கள் தேவாலயத்தின் வெளிவேலைகளின் பொறுப்பாளர்களாக இருந்தனர்.)
17 மத்தனியா (மத்தனியா மீகாவின் மகன். அவன் சப்தியின் மகன். அவன் ஆசாபின் மகன். அவன் பாடகர்கள் குழுவுக்கு இயக்குனர். ஜெபத்தில் துதிப்பாடலை பாட ஜனங்களை வழிநடத்தினான்.) பக்பூக்கியா (பக்பூக்கியா அவனது சகோதரனுக்கு மேல் இரண்டாவது பொறுப்பாளனாக இருந்தான்.) சமுவாவின் மகனான அப்தா (சம்முவா, கலாலின் மகன் அவன் எதுத்தூனின் மகன்).
18 எனவே 284 லேவியர்கள் பரிசுத்த நகரமான எருசலேமிற்குள் நுழைந்தனர்.
19 எருசலேமிற்குள் நுழைந்த வாசல்காவலர்கள்: அக்கூப், தல்மோன் மற்றும் 172 சகோதரர்கள். நகரத்தின் வாசல்களை அவர்கள் காவல் காத்தனர்.
20 மற்ற இஸ்ரவேல் ஜனங்கள், மற்ற ஆசாரியர்கள் மற்றும் லேவியர்கள் யூதாவின் அனைத்து நகரங்களிலும் வாழ்ந்தனர். ஒவ்வொருவனும் தனது முற்பிதாவிற்குச் சொந்தமான நாட்டில் வாழ்ந்தனர்.
21 ஆலய வேலைக்காரர்கள் ஓபேல் மலையில் குடியிருந்தார்கள். அவர்களின் மேல் சீகாவும் கிஸ்பாவும் அதிகாரிகளாக இருந்தார்கள்.
22 எருசலேமில் லேவியர்களின் அதிகாரியாக ஊசி இருந்தான். ஊசி பானியின் மகனாக இருந்தான். (பான் அசபியாவின் மகனாக இருந்தான், அவன் மத்தானியாவின் மகனாக இருந்தான், அவன் மீகாவின் மகனாக இருந்தான்.) ஊசி ஆசாபின் சந்ததியான். ஆசாபின் சந்ததியினர் பாடகர்களாகவும், தேவனுடைய ஆலயத்தில் பணிப் பொறுப்பாளர்களாகவும் இருந்தனர்.
23 பாடகர்கள் அரசனின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிபவர்களாக இருந்தனர். அரசனிடமிருந்து வரும் ஆணைகள் அப்பாடகர்களுக்கு ஒவ்வொரு நாளும் என்ன செய்யவேண்டும் என்று சொல்லின.
24 அரசன் செய்ய விரும்புவதை ஜனங்களிடம் சொல்பவனின் பெயர் பெத்தகியா. (பெத்தகியா மெசெசாபெயேலின் மகன். அவன் சேராக்கின் சந்ததியில் ஒருவன். சேராக் யூதாவின் மகன்.)
25 இப்பட்டணங்களில் யூதாவின் ஜனங்கள் வாழ்ந்தனர். கீரியாத் அர்பாவிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும், தீபோனிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும், எகாப்செயேலிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும்,
26 யெசுவாவிலும், மோலாதாகிலும் பெத்பெலேதிலும்,
27 ஆத்சார்சூகாவிலும், பெயெர்செபாவிலும் அதன் கிராமங்களிலும்,
28 சிக்லாகிலும் மேகோனாகிலும் அதன் கிராமங்களிலும்
29 என்ரிம்மோனிலும், சாரேயாகிலும், யர்மூத்திலும்,
30 சானோவாகிலும், அதுல்லாமிலும் அவற்றின் கிராமங்களிலும், லாகீசிலும் அதன் நாட்டுப்புறங்களிலும், அசெக்காவிலும் அதன் கிராமங்களிலும், பெயெர்செபா தொடங்கி இன்னோமீன் பள்ளத்தாக்குவரை குடியேறினார்கள்.
31 கேபாவிலிருந்து வந்த பென்யமீன் சந்ததியினர் மிக்மாஸ், ஆயா, பெத்தேல் ஊர்களிலும் அதன் கிராமங்களிலும்,
32 ஆனதோத், நோப், அனனியா,
33 ஆத்சோர், ராமா, கித்தாயிம்,
34 ஆதீத், செபோயிம், நெபலாத்,
35 லோத், ஓனோ, என்னும் ஊர்களிலும், சிற்பிகளின் பள்ளத்தாக்கிலும் குடியிருந்தனர்.
36 லேவியரிலோ சிலப் பிரிவினர் பென்யமீனிலும் இருந்தனர்.
Nehemiah 11 ERV IRV TRV