Psalm 63 in Malayalam ERV Compare Tamil Easy Reading Version
1 தேவனே, நீரே என் தேவன். நீர் எனக்கு மீகவும் தேவையானவர். நீரற்று உலர்ந்து பாழாய்போன தேசத்தைப்போன்று என் ஆத்துமாவும் சரீரமும் உமக்காகத் தாகமாயிருக்கிறது.
2 உமது ஆலயத்தில் நான் உம்மைக் கண்டேன். நான் உமது வல்லமையையும் மகிமையையும் கண்டேன்.
3 ஜீவனைக் காட்டிலும் உமது அன்பு சிறந்தது. என் உதடுகள் உம்மைத் துதிக்கும்.
4 என் வாழ்நாளில் நான் உம்மைத் துதிப்பேன். உமது நாமத்தைக் கூறி ஜெபத்தோடு என் கைகளை உயர்த்துவேன்.
5 சுவையான உணவு வகைகளை உண்டது போல் நான் திருப்தியடைவேன். மகிழ்ச்சி நிறைந்த உதடுகளுள்ள என் வாய் உம்மைத் துதிக்கும்.
6 என் படுக்கையில் நான் உம்மை நினைவு கூருவேன். நள்ளிரவிலும் உம்மை நான் நினைவு கூருவேன்.
7 நீர் உண்மையாகவே எனக்கு உதவினீர்! நீர் என்னைப் பாதுகாத்ததால் நான் மகிழ்கிறேன்.
8 என் ஆத்துமா உம்மைப் பற்றிக்கொள்கிறது. நீர் என் கைகளைப் பிடித்துக்கொள்கிறீர்.
9 சில ஜனங்கள் என்னைக் கொல்ல முயல்கிறார்கள். ஆனால் அவர்கள் அழிக்கப்படுவார்கள். அவர்கள் தங்கள் கல்லறைக்குள்ளேபோவார்கள்.
10 அவர்கள் பட்டயத்தால் கொல்லப்படுவார்கள். அவர்கள் பிணங்களைக் காட்டு நாய்கள் தின்னும்.
11 ஆனால் அரசனோ அவரது தேவனோடு மகிழ்ச்சியாயிருப்பார். அவருக்குக் கீழ்ப்படிவதாக உறுதி தந்த ஜனங்கள் தேவனைத் துதிப்பார்கள். ஏனெனில் அவர் எல்லாப் பொய்யர்களையும் தோற்கடித்தார்.