Malachi 2 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 “இப்பொழுது, குருக்களே! உங்களுக்கு நான் தரும் கட்டளை இதுவே: என் பெயருக்கு மாட்சி அளிக்கவேண்டும் என்பதை உங்கள் இதயத்தில் பதித்துக் கொள்ளுங்கள்.2 எனக்கு நீங்கள் செவிகொடுக்காவிடில் உங்கள்மேல் சாபத்தை அனுப்புவேன். உங்களுக்குரிய நல்லாசிகளைச் சாபமாக மாற்றுவேன். ஆம், இக்கட்டளைக்கு உங்கள் இதயத்தில் இடமளிக்காததால் ஏற்கனவே அவற்றைச் சாபமாக மாற்றிவிட்டேன்” என்று படைகளின் ஆண்டவர் சொல்கிறார்.3 “இதோ உங்களை முன்னிட்டு நான் உங்கள் வழிமரபைக் கண்டிப்பேன். திருநாள் பலிவிலங்குகளின் சாணத்தை உங்கள் முகத்திலேயே வீசியடிப்பேன். அதோடு உங்களையும் தூக்கியெறிவேன்.⒫4 அப்பொழுது லேவியோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கை நிலைத்திருக்கவே அக்கட்டளையை உங்களுக்குத் தந்தேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்” என்று சொல்கிறார் படைகளின் ஆண்டவர்.5 “நான் அவனோடு செய்துகொண்ட உடன்படிக்கை, வாழ்வும் அமைதியும் தரும் உடன்படிக்கை. எனக்கு அவன் அஞ்சி நடக்கவே அவற்றை அவனுக்கு அளித்தேன். அவனும் எனக்கு அஞ்சி நடந்தான். என் பெயருக்கு நடுங்கினான்.6 மெய்ப்போதனை அவன் வாயிலிருந்து வெளிப்பட்டது. தீமை அவன் உதடுகளில் காணப்படவில்லை; அவன் என் திருமுன் அமைதியோடும் நேர்மையோடும் நடந்து கொண்டான்.7 நெறிகேட்டிலிருந்து பலரைத் திருப்பிக்கொணர்ந்தான். ஒரு குருவின் உதடுகள் மெய்யறிவைக் காக்க வேண்டும். அவனது நாவினின்று திருச்சட்டத்தைக் கேட்க மக்கள் அவனை நாடவேண்டும். ஏனெனில் படைகளின் ஆண்டவருடைய தூதன் அவன்.8 நீங்களோ நெறி தவறி நடந்தீர்கள். உங்கள் போதனையால் பலரை இடறி விழச்செய்தீர்கள். லேவியோடு நான் செய்த உடன்படிக்கையைப் பாழாக்கிவிட்டீர்கள்.” என்று சொல்கிறார் படைகளின் ஆண்டவர்.9 “ஆதலால் நானும் உங்களை மக்கள் அனைவர் முன்னிலையிலும் இழிவுக்கும் தாழ்வுக்கும் ஆளாக்குவேன்; ஏனெனில், நீங்கள் என் வழிகளைப் பின்பற்றி ஒழுகவில்லை; உங்கள் போதனையில் ஓரவஞ்சனை காட்டினீர்கள்.”10 நம் அனைவர்க்கும் தந்தை ஒருவரன்றோ? நம்மைப் படைத்தவர் ஒரே கடவுளன்றோ? பின்னர் ஏன் நாம் ஒருவருக்கொருவர் நம்பிக்கைத் துரோகம் செய்கின்றோம்? நம் மூதாதையரின் உடன்படிக்கையை ஏன் களங்கப்படுத்துகிறோம்?11 யூதா நம்பிக்கைத் துரோகம் செய்தான்; இஸ்ரயேலிலும் எருசலேமிலும் அருவருப்பானவை நடந்தேறின. ஏனெனில், ஆண்டவர் விரும்பிய தூயகத்தைத் தீட்டுப்படுத்திவிட்டு, யூதா வேற்றுத் தெய்வத்தின் மகளை மணந்துகொண்டான்.12 இதைச் செய்பவன் எவனாயிருந்தாலும் அவனுக்காகச் சான்று பகர்பவனோ, மறுமொழி கூறுபவனோ, படைகளின் ஆண்டவருக்குக் காணிக்கை கொண்டு வருபவனோ இல்லாதபடி, யாக்கோபின் கூடாரத்திலிருந்தும் ஆண்டவர் அழித்து விடுவாராக.⒫13 நீங்கள் செய்யும் இன்னொன்றும் உண்டு. ஆண்டவரது பலிபீடத்தைக் கண்ணீரால் நிரப்புகிறீர்கள். உங்கள் காணிக்கையை ஆண்டவர் கண்ணோக்காததாலும் அதை விருப்புடன் ஏற்றுக்கொள்ளாததாலும் நீங்கள் ஆண்டவரது பலிபீடத்தை அழுகையாலும் பெருமூச்சுகளாலும் நிரப்புகிறீர்கள்.14 “இதற்குக் காரணம் யாது?” என்று வினவுகிறீர்கள். காரணம் இதுவே: உனக்கும் உன் மனைவிக்கும் உன் இளமையில் நிகழ்ந்த திருமணத்திற்கு ஆண்டவர் சாட்சியாய் இருந்தார். அப்படியிருக்க, உன் துணைவியும் உடன்படிக்கையால் உன் மனைவியுமான அவளுக்கு நீ நம்பிக்கைத் துரோகம் செய்தாயே.15 உங்களை ஒன்றாக இணைத்தவர் அவரே, வாழ்வின் ஆவியும் அவரே. அவர் நாடுவது தம் மக்களாக வாழும் குழுந்தைகளை அன்றோ? ஆதலால், எவனும் தான் இளமையில் மணந்த மனைவிக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யாதிருப்பதில் கவனமாய் இருப்பானாக.16 ஏனெனில், “மணமுறிவை நான் வெறுக்கிறேன்” என்கிறார் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர். “மணமுறிவு செய்கிறவன் வன்முறையை மேலாடை கொண்டு மறைக்கிறான்” என்கிறார் படைகளின் ஆண்டவர். ஆகையால் எச்சரிக்கையாயிருங்கள்; நம்பிக்கைத் துரோகம் செய்யாதீர்கள்.17 உங்கள் பேச்சுகளினால் ஆண்டவரைச் சோர்வடையச் செய்யாதீர்கள். “எவ்வகையில் அவரை நாங்கள் சோர்வடையச் செய்தோம்?” என்று வினவுகிறீர்கள். “தீச்செயல் புரிவோர் அனைவரும் ஆண்டவர் கண்ணோக்கில் நல்லவரே; அவரும் அவர்கள் மட்டில் பூரிப்படைகிறார்” என்று சொல்கின்றீர்கள் அல்லது “நீதியின் கடவுள் எங்கே?” என்று கேட்கிறீர்கள்.