Leviticus 13 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் உரைத்தது;2 “ஒருவர் உடலில் தோல்மீது தொழுநோய் போன்று, ஏதேனும் தடிப்போ, சொறி சிரங்கோ, வெண்படலமோ தோன்ற, அது தொழுநோயென ஐயமுற்றால், அவர் குருவாகிய ஆரோனிடம் அல்லது குருக்களாகிய அவர் புதல்வரில் ஒருவரிடம் கொண்டு வரப்படவேண்டும்.3 அவர் உடலில் நோயிருக்கும் இடத்தைக் குரு பார்த்து, அந்த இடத்தில் உரோமம் வெண்மையாக மாறி, நோயிருக்கும் பகுதி அவர் உடலிலுள்ள மற்றத் தோற் பகுதியை விடக் குழிந்திருந்தால், அது தொழுநோய்; அவரைப் பார்த்த குரு அவரைத் தீட்டுடையவர் என முடிவு செய்வார்.4 அவர் உடலின் மேல் வெள்ளைப்படலம் இருந்தும், அந்த இடம் மற்றப் பகுதிகளிலுள்ள தோலைவிடக் குழிவாயிராமலும், அதன் மீதுள்ள உரோமம் வெண்மை ஆகாமலும் இருந்தால், குரு அவரை ஏழு நாள் அடைத்து வைப்பார்.5 ஏழாம் நாள் அவரைப் பார்க்கும் போது நோய் பரவாமல் குறைந்திருந்தால், மீண்டும் ஏழு நாள் குரு அவரை அடைத்து வைப்பார்.6 ஏழாம் நாளில் மீண்டும் அவரை அழைத்துப் பார்வையிடுவார். நோய் பரவாமல் குறைந்திருந்தால், அவர் தூய்மையானவர் எனக் குரு தீர்ப்புச் சொல்வார், அது சொறிசிரங்கு; அவர் தம் உடைகளைத் துவைக்க வேண்டும்; அவர் தீட்டற்றவர்.7 தீட்டற்றவர் என அறிவிக்கப்பட்டவர் தம்மைக் குருவுக்குக் காட்டியபின், மறுபடியும் சொறி சிரங்கு அவர் உடலில் ஏற்பட்டால் அவர் தம்மைக் குருவிடம் காட்ட வேண்டும்.8 மீண்டும் சொறி சிரங்கு அவர் உடலில் இருப்பதைக் குரு கண்டால் அவர் தீட்டுடையவர் என அறிவிப்பார். அது தொழுநோய்.⒫9 ஒரு மனிதர் தொழுநோயாளி எனில், அவர் குருவிடம் கொண்டு வரப்படுவார்.10 தோலில் வெண்ணிறத்தடிப்பு இருந்து, அது உரோமத்தை வெண்மையாக மாற்றி, திறந்த புண்ணாயிற்று எனக்குரு கணிப்பார்.11 அது அவர் உடலில் நெடுநாளாயிருக்கும் தொழுநோய். குரு அவர் தீட்டுடையவர் என அறிவிப்பார். அவரை அடைத்து வைக்கவேண்டும். அவர் தீட்டுடையவரே.12 வெண்குட்டம் உடலில் பரவி, நோயாளியின் கால்தொடங்கித் தலைவரைக் குரு காண்கிற எல்லா இடங்களிலும் தோலில் படர்ந்திருந்தால்,13 அவரைச் சோதித்துப் பார்க்கவேண்டும். அவர் உடலில் முழுவதும் நோய் படர்ந்திருந்தால், அவர் தீட்டற்றவர் எனக் குரு அறிவிப்பார். உடல் முழுவதும் வெண்மையாகிவிட்டதால் தீட்டற்றவர்.14 ஆனால், திறந்த புண் காணப்படும் நாளில், அவர் தீட்டுள்ளவர்.15 எனவே, திறந்த புண்ணைக் கண்டால் அவர் தீட்டுள்ளவர் என அறிவிப்பார். திறந்தபுண் தீட்டுடையது; அது தொழுநோய்.16 திறந்த புண் மாறி வெண்ணிறம் அடைந்தால், அவர் குருவிடம் வருவார்.17 குரு அவரைச் சோதித்துப் பார்ப்பார். நோய்த்தழும்பு வெண்மையாகி மாறிற்றெனில், அவர் தீட்டற்றவர் எனக் குரு அறிவிப்பார்; அவர் தீட்டற்றவர்.⒫18 உடலில் கட்டி ஏற்பட்டு, அது குணமாகி,19 கட்டி இருந்த இடத்தில் வெள்ளைத்தடிப்பு, அல்லது சிவப்பு கலந்த வெண்மை மறு தோன்றினால், அதனைக் குருவுக்குக் காட்டவேண்டும்.20 குரு அதைச் சோதித்துப்பார்ப்பார். அந்த இடம் மற்றத் தோலைவிடத் தாழ்ந்து, அந்த இடத்தில் உரோமம் வெண்மையாக மாறியிருந்தால், அவர் தீட்டுள்ளவர் எனக் குரு அறிவிப்பார். அது கட்டியால் உண்டான தொழுநோய்.21 குரு அதைச் சோதித்துப் பார்க்கும் போது, அதில் வெள்ளை உரோமம் இல்லை என்றும், மற்றத் தோலை விடக் குழிந்திராமல் சற்றுக் கருமையாக மட்டும் உள்ளது என்றும் கண்டால், அவர் அவரை ஏழு நாள் அடைத்து வைப்பார்.22 தோலில் புள்ளி படரக்கண்டால், அது தொழு நோய். அவர் தீட்டு உடையவர் எனக் குரு அறிவிப்பார்.23 வெள்ளை மறு பரவாமல் அது இருந்த இடத்தில் மட்டும் இருந்தால், அது கட்டியின் தழும்பு; எனவே, அவர் தீட்டற்றவர் எனக் குரு அறிவிப்பார்.⒫24 ஒருவரது உடலில் நெருப்புப்பட்டதனால் தீக்காயம் ஏற்பட்டு, நெருப்புப்பட்ட இடத்தில் சிவப்பு அல்லது வெண்மையான மறு தோன்றினால், அவரைக் குரு சோதித்துப் பார்க்க வேண்டும்.25 அந்த மறுவில் உரோமம் வெண்மையாக மாற அந்த இடம் தோலைப் பார்க்கிலும் குழியாக இருந்தால், அது நெருப்பினால் ஏற்பட்ட தொழுநோய். அவர் தீட்டுள்ளவர் எனக் குரு அறிவிப்பார். அது தோழுநோய்தான்.26 அதைச் சோதித்துப் பார்க்கும் குரு, அந்த மறுவில் வெள்ளை உரோமம் இல்லை என்றும் மற்றத் தோலைவிடக் குழிந்திராமல் சற்றுக் கருமையாக உள்ளது என்றும் கண்டால், அவரை ஏழு நாள் தனியாக வைப்பார்.27 ஏழாம் நாளில் அவரைச் சோதித்துப் பார்த்து, தோலில் அது பரவி இருந்தால், அவர் தீட்டுள்ளவர் எனக் குரு அறிவிப்பார்; அது தொழுநோய்.28 மறு தோலில் பரவாமல், அவ்விடத்திலேயே சற்றுக் கருமையாக இருந்தால் அது நெருப்பினால் ஏற்பட்ட தடிப்பு. அவர் தீட்டற்றவர் எனக் குரு அறிவிப்பார். அது நெருப்பால் ஏற்பட்ட வடு.⒫29 ஆணுக்கோ, பெண்ணுக்கோ தலையிலோ தாடையிலோ, நோய் ஏற்பட்டால்30 குரு அந்த நோயைச் சோதித்துப் பார்க்க வேண்டும். நோயுள்ள இடம் குழிவாயும், உரோமம் பொன்னிறமாகவும் குறைவாகவும் இருந்தால் தீட்டு எனக் குரு அறிவிப்பார். அது தாடையிலோ தலையிலோ ஏற்படும் சொறி வகையான தொழுநோய் ஆகும்.31 குரு அதைச் சோதித்துப் பார்த்து அவ்விடத்தில் மற்றத் தோலைவிடக் குழிந்திராமல் கருப்பு உரோமம் இல்லை என்றால், குரு ஏழுநாள் அவரைத் தனியாக வைப்பார்.32 ஏழாம் நாளில் அவரைக் குரு சோதித்துப் பார்ப்பார். அந்தச் சொறி படராமலும், அங்கு மஞ்சள் உரோமம் இல்லாமலும், மற்றத் தோலைவிடக் குழிவு இல்லாமலும் இருந்தால்,33 அவர் சொறி இருக்கும் இடம் நீங்கலாக, மற்ற இடங்களைச் சிரைத்துக் கொள்வார். மீண்டும் குரு அவரை ஏழுநாள் தனியாக வைப்பார்.34 ஏழாம் நாளில் குரு சோதித்துப் பார்க்கும்போது, தோலில் சொறி பரவாமல், மற்றத் தோலைவிடக் குழிந்திராமல் இருந்தால் அவர் தீட்டற்றவர் என அறிவிப்பார். தம் ஆடைகளைத் துவைத்தபின், அவர் தூய்மையாவார்.35 தூய்மையானவராக அறிவிக்கப்பட்டபின் உடலில் சொறி படர்ந்தால்,36 குரு அவரைச் சோதித்துப் பார்ப்பார். தோலில் சொறி பரவி இருந்தால் உரோமம் மஞ்சள் நிறமா எனக் குரு பார்க்கத் தேவை இல்லை. அவர் தீட்டுள்ளவர்.37 சொறி குறைந்து, அந்த இடத்தில் கருப்பு உரோமம் முளைத்ததெனில் சொறி குணமாயிற்று; அவர் தீட்டற்றவராய் இருக்கிறார். அவர் தீட்டற்றவர் எனக் குரு அறிவிப்பார்.⒫38 ஓர் ஆண் அல்லது பெண்ணின் உடலில் வெள்ளைப் புள்ளிகள் காணப்பட்டால்,39 குரு சோதித்துப் பார்ப்பார். அவர்கள் மேல் தோலில் மங்கின வெண்ணிறத்தில் இருந்தால் அது தோலில் தோன்றுகிற வெள்ளைத்தேமல்; அவர் தூய்மையானவர்.⒫40 தலைமுடி உதிர்ந்து ஒருவர் மொட்டையானால், அவர் தூய்மையானவர்.41 முன்புறத் தலைமுடி உதிர்ந்து, அரை மொட்டையானால், அவரும் தூய்மையானவர்.42 மொட்டைத் தலையில் செந்நிறம் கலந்த வெண்மையான புண் உண்டானால் அது தொழுநோயின் தொடக்கம்.43 குரு அவரைச் சோதித்துப் பார்ப்பார். அவரது மொட்டைத் தலையிலோ, அரை மொட்டைத் தலையிலோ, உடலின் தோலில் தோன்றும் தொழுநோய் போன்ற செந்நிறம் கலந்த வெண்மையான தடிப்பு இருந்தால்,44 அவர் தொழுநோயாளி. அவர் தீட்டுள்ளவர். அவர் தீட்டுள்ளவர், எனக் குரு அறிவிப்பார். ஏனெனில், நோய் அவர் தலையில் உள்ளது.⒫45 தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் கிழிந்த உடை அணிந்து, தலை வாராமல் மேலுதட்டை மறைத்துக் கொண்டு, “தீட்டு, தீட்டு”, என குரலெழுப்ப வேண்டும்.46 நோயுள்ள நாளெல்லாம் அவர் தீட்டுள்ளவர். எனவே, தீட்டுள்ள அவர் பாளையத்துக்கு வெளியே தனியாகக் குடியிருப்பார்.⒫47 ஆட்டு உரோமம், அல்லது பஞ்சு நூலால் செய்யப்பட்ட உடையில்,48 அல்லது பஞ்சு நூலும் ஆட்டு உரோமமும் சேர்த்து நெய்யும் பாவில் அல்லது ஊடுநூலில், அல்லது தோலாடையில், அல்லது தோலால் செய்யப்பட்ட எதிலும், தொழுநோயின் அடையாளம் தோன்றி,49 உடையிலோ, தோலாடையிலோ, பாவிலோ, ஊடுநூலிலோ, தோல் அல்லது தோலினால் செய்யப்பட்ட எதிலாவது, நோய் பச்சை அல்லது சிவப்பு நிறமாகக் காணப்பட்டால், அது தொழுநோய். குருவுக்கு அதைக் காட்ட வேண்டும்.50 குரு அந்த நோயைச் சோதித்துப்பார்த்து, நோய் தீண்டியவற்றை ஏழுநாள் தனியாக வைத்து,51 ஏழாம் நாளில் அதைக் கவனிக்க வேண்டும். உடையிலோ, பாவிலோ, ஊடுநூலிலோ, தோலாடையிலோ, தோலால் செய்யப்பட்ட எதிலோ இருந்தால், அது வளரும் தொழுநோய். அது தீட்டானது.52 அந்த நோயுள்ள ஆட்டு உரோமத்தாலோ பஞ்சு நூலாலோ ஆன உடையையும் பாவையும், ஊடுநூலையும், தோலாடையையும், தோலால் செய்யப்பட்ட எதையும் சுட்டெரிக்க வேண்டும். ஏனெனில், அது வளரும் தொழுநோய். அது நெருப்பில் சுட்டெரிக்கப்பட வேண்டும்.53 உடையிலோ, பாவிலோ, நூலிலோ, தோலால் செய்யப்பட்ட எதிலோ அந்த நோய் பரவவில்லை எனக் குரு கண்டால்54 குரு நோய் தீண்டியதைக் கழுவச் சொல்லி, இரண்டாம் முறையும் ஏழுநாள் தனியாக வைப்பார்.55 அது கழுவப்பட்ட பின் அதைச் சோதித்தப்பார்ப்பார். நோய் தீண்டிய பகுதி நோய் பரவாதிருக்கும் நிறம் மாறாதிருந்தால், அது தீட்டானது. அது உட்புறம் இருந்தாலும் வெளிப்புறம் இருந்தாலும் அதை நீ நெருப்பில் சுட்டெரிக்க வேண்டும்.56 கழுவப்பட்டபின், நோய் குறைந்துவிட்டது எனக் குரு கண்டால், அந்தப் பகுதியை உடையிலிருந்து, தோலாடையிலிருந்து அல்லது பாவு அல்லது ஊடுநூலிலிருந்து கிழித்தெறிந்து விடவேண்டும்.57 ஆடையிலோ, பாவிலோ, ஊடுநூலிலோ, தோலால் செய்யப்பட்ட எதிலோ நோய் மீண்டும் காணப்படுமாயின் அது பரவும். எனவே, நோய் தீண்டியதை நெருப்பில் எரிக்க வேண்டும்.58 ஆடையோ, பாவோ, ஊடுநூலோ, தோலால் செய்யப்பட்ட எதுவோ கழுவியபின் அந்த நோய் நீங்கிப்போகும். இரண்டாம் முறை கழுவியபின் அது தூய்மையானது ஆகும்.59 ஆட்டு உரோம உடை, பஞ்சு நூல் உடை, பாவு, ஊடுநூல், தோலால் செய்யப்பட்ட பை ஆகியவற்றுள் எதுவும் தீட்டுடையதா தீட்டற்றதா என அறிவதற்குத் தொழுநோய் பற்றிய சட்டம் இதுவே.”