1 ⁽அதற்கு நாமாயனான சோப்பார்␢ கூறின பதில்:⁾

2 ⁽என்னுள் இருக்கும் துடிப்பின் பொருட்டு,␢ என் எண்ணங்கள்␢ பதில் சொல்ல வைக்கின்றன.⁾

3 ⁽என்னை வெட்கமடையச் செய்யும்␢ குத்தல்மொழி கேட்டேன்;␢ நான் புரிந்து கொண்டதிலிருந்து␢ விடை அளிக்க␢ மனம் என்னை உந்துகிறது.⁾

4 ⁽மாந்தர் மண்ணில் தோன்றியதிலிருந்து,␢ தொன்றுதொட்டு நடக்குமிது␢ உமக்குத் தெரியாதா?⁾

5 ⁽கொடியவரின் மகிழ்ச்சி நொடிப் பொழுதே!␢ கடவுளுக்கு அஞ்சாதவரின் களிப்பு␢ கணப்பொழுதே!⁾

6 ⁽அவர்களின் பெருமை␢ விசும்பு மட்டும் உயர்ந்தாலும்,␢ அவர்களின் தலை␢ முகிலை முட்டுமளவு இருந்தாலும்,⁾

7 ⁽அவர்கள் தங்களின் சொந்த மலம் போன்று␢ என்றைக்கும் ஒழிந்திடுவர்;␢ அவர்களைக் கண்டவர்,␢ எங்கே அவர்கள்? என்பர்.⁾

8 ⁽கனவுபோல் கலைந்திடுவர்; காணப்படார்;␢ இரவு நேரக் காட்சிபோல் மறைந்திடுவர்.⁾

9 ⁽பார்த்த கண் இனி அவர்களைப் பார்க்காது;␢ வாழ்ந்த இடம், அவர்களை என்றும் காணாது.⁾

10 ⁽ஏழைகளின் தயவை␢ அவர்களின் குழந்தைகள் நாடுவர்;␢ அவர்களின் கைகளே␢ அவர்களின் செல்வத்தைத் திரும்ப அளிக்கும்.⁾

11 ⁽எலும்புகளை நிரப்பிய␢ அவர்களின் இளமைத் துடிப்பு,␢ மண்ணில் அவர்களோடு மறைந்துவிடும்.⁾

12 ⁽தீங்கு அவர்களின் வாயில்␢ இனிப்பாய் இருப்பினும், நாவின் அடியில்␢ அதை அவர்கள் மறைத்து வைப்பினும்,⁾

13 ⁽இழந்து போகாமல்␢ அதை அவர்கள் இருத்தி வைத்தாலும்,␢ அண்ணத்தின் நடுவே␢ அதை அடைத்து வைத்தாலும்,⁾

14 ⁽வயிற்றிலே அவர்களின் உணவு␢ மாற்றமடைந்து, அவர்களுக்கு␢ விரியன் பாம்பின் நஞ்சாகிவிடுமே;⁾

15 ⁽செல்வத்தை விழுங்கினர்;␢ அதை அவர்களே கக்குவர்;␢ இறைவன் அவர்களின் வயிற்றிலிருந்து␢ அதை வெளியேற்றுவார்.⁾

16 ⁽விரியன் பாம்பின் நஞ்சை␢ அவர்கள் உறிஞ்சுவர்;␢ கட்டு விரியனின் நாக்கு␢ அவர்களைக் கொன்றுபோடும்.⁾

17 ⁽ஓலிவ எண்ணெய்க் கால்வாய்களிலும்␢ , தேன், வெண்ணெய் ஆறுகளிலும்␢ அவர்கள் இன்பம் காணார்.⁾

18 ⁽தங்களின் உழைப்பின் பயனை␢ அவர்கள் திரும்ப அளிப்பர்;␢ அதை அவர்கள் உண்ணமாட்டார்;␢ வணிகத்தின் வருவாயில் இன்புறார்.⁾

19 ⁽ஏனெனில், அவர்கள் ஏழைகளை ஒடுக்கி,␢ இல்லாதவராக்கினர்;␢ தாங்கள் கட்டாத வீட்டை␢ அவர்கள் அபகரித்துக் கொண்டனர்.⁾

20 ⁽அவர்களின் ஆசைக்கோர் அளவேயில்லை;␢ ஆதலால், அவர்கள் இச்சித்த செல்வத்தில்␢ மிச்சத்தைக் காணார்.⁾

21 ⁽அவர்கள் தின்றபின்␢ எஞ்சியது எதுவும் இல்லை; எனவே␢ அவர்களது செழுமை நின்று நிலைக்காது.⁾

22 ⁽நிறைந்த செல்வத்திடை␢ அவர்களுக்கு நெருக்கடி ஏற்படும்;␢ அவலத்தின் பளுவெல்லாம்␢ அவர்கள்மேல் விழும்.⁾

23 ⁽அவர்கள் வயிறு புடைக்க உண்ணும்போது,␢ இறைவன் தம் கோபக்கனலை␢ அவர்கள்மேல் கொட்டுவார்; அதையே␢ அவர்களுக்கு உணவாகப் பொழிவார்.⁾

24 ⁽அவர்கள் இரும்பு ஆயுதத்திற்கு␢ அஞ்சி ஓடுவர்; ஆனால், வெண்கல வில்␢ அவர்களை வீழ்த்திடுமே!⁾

25 ⁽அவர்கள் அதைப் பின்புறமாக இழுப்பர்;␢ மின்னும் அம்புமுனை பிச்சியிலிருந்து வெளிவரும்;␢ அச்சம் அவர்கள் மேல் விழும்.⁾

26 ⁽காரிருள் அவர்களது கருவூலத்திற்குக்␢ காத்திருக்கும்; மூட்டாத தீ␢ அதனைச் சுட்டெரிக்கும்; அவர்களின்␢ கூடாரத்தில் எஞ்சியதை விழுங்கும்.⁾

27 ⁽விண்ணகம் அவர்களின் பழியை␢ வெளியாக்கும்; மண்ணகம் அவர்களை␢ மறுத்திட எழுந்து நிற்கும்.⁾

28 ⁽அவர்களது இல்லத்தின் செல்வம்␢ சூறையாடப்படும்; இறைவனின்␢ வெஞ்சின நாளில் அது அடித்துப்போகப்படும்.⁾

29 ⁽இதுவே பொல்லார்க்குக்␢ கடவுள் அளிக்கும் பங்கு; அவர்களுக்கு␢ இறைவன் குறிக்கும் உரிமைச் சொத்து.⁾

Job 20 ERV IRV TRV