Jeremiah 31 in Tamil ERV Compare Tamil Easy Reading Version
1 கர்த்தர், “அந்த நேரத்தில் நான் இஸ்ரவேலின் அனைத்து கோத்திரங்களுக்கும் தேவனாக இருப்பேன். அவர்கள் என்னுடைய ஜனங்களாக இருப்பார்கள்” என்றார்.
2 கர்த்தர் கூறுகிறார்: “ஜனங்களில் சிலர் பகைவரின் வாளால் கொல்லப்படவில்லை. அந்த ஜனங்கள் வனாந்தரத்திற்குத் தப்பி ஓடி, ஆறுதலடைவார்கள், இஸ்ரவேலர் இளைப்பாறுதலைத் தேடி அங்கு போவார்கள்.”
3 வெகு தொலைவில் இருந்து கர்த்தர் அவரது ஜனங்களுக்கு தோன்றுவார். கர்த்தர் கூறுகிறார்: “ஜனங்களே, நான் உங்களை நேசிக்கிறேன். எனது அன்பு என்றென்றும் நீடித்திருக்கும். ஆகையால் தான் தொடர்ந்து உங்களுக்கு அன்பு காட்டினேன்.
4 இஸ்ரவேலே, எனது மணப்பெண்ணே, நான் உன்னை மீண்டும் கட்டுவேன். நீ மீண்டும் ஒரு நாடாவாய். நீ உனது மேள வாத்தியங்களை மீண்டும் எடுத்துக்கொள்வாய். நீ மகிழ்ச்சியூட்டும் மற்ற ஜனங்களோடு சேர்ந்து மகிழ்ச்சியடைவாய்.
5 இஸ்ரவேலின் விவசாயிகளாகிய நீங்கள் மீண்டும் திராட்சைத் தோட்டங்களைப் பயிர் செய்வீர்கள். சமாரியா நகரைச் சுற்றிலும் மலைப் பகுதிகளில் திராட்சைகளைப் பயிரிடுவாய். அவ்விவசாயிகள் அத்திராட்சைத் தோட்டங்களிலிருந்து பழங்களைத் தின்று மகிழ்வார்கள்.
6 காவல்காரன் இச்செய்தியைச் சத்தமிடும் ஒரு காலம் வரும். ‘வாருங்கள், நமது தேவனாகிய கர்த்தரை தொழுதுகொள்ள சீயோனுக்குப் போகலாம்!’ எப்பிராயீம் நாட்டு மலையில் உள்ள காவல்காரன் கூட இச்செய்தியைச் சத்தமிட்டுச் சொல்வான்.”
7 கர்த்தர் கூறுகிறார்: “மகிழ்ச்சியாக இருங்கள். யாக்கோபுக்காகப் பாடுங்கள்! இஸ்ரவேலுக்காகச் சத்தமிடுங்கள். அது ஜாதிகளிலேயே மகா பெரிய ஜனம் ஆகும்! உங்கள் துதிகளைப் பாடி சத்தமிடுங்கள், ‘கர்த்தர் அவரது ஜனங்களைக் காப்பாற்றினார்! அவர் இஸ்ரவேல் நாட்டில் உயிரோடு விடப்பட்டுள்ள ஜனங்களைக் காப்பாற்றியிருக்கிறார்.’
8 நினைவுகொள்ளுங்கள். வடக்கில் உள்ள அந்த நாட்டிலிருந்து இஸ்ரவேலை நான் கொண்டு வருவேன். பூமியில் வெகு தொலை தூர இடங்களில் உள்ள இஸ்ரவேல் ஜனங்களை எல்லாம் சேர்ப்பேன். ஜனங்களில் சிலர் குருடாகவும் நொண்டியாகவும் இருப்பார்கள். பெண்களில் சிலர் கர்ப்பமாக இருப்பார்கள், குழந்தை பெறுவதற்குத் தயாராக இருப்பார்கள். ஆனால் அதிகமதிகமான ஜனங்கள் திரும்ப வருவார்கள்.
9 அந்த ஜனங்கள் அழுதுக்கொண்டே திரும்பி வருவார்கள். ஆனால் நான் அவர்களை வழிநடத்தி ஆறுதல் செய்வேன். நான் அவர்களை வழிநடத்திச் சென்று நீரோடைக்கு அழைத்துச் செல்வேன். அவர்களை நான் எளிதான பாதையில் நடத்திச் செல்வேன். எனவே, அவர்கள் இடறமாட்டார்கள். நான் அந்த வழியிலே அவர்களை வழிநடத்திச் செல்வேன். ஏனென்றால், நான் இஸ்ரவேலின் தந்தை. எப்பிராயீம் எனது முதலில் பிறந்த மகன்.
10 “நாடுகளே! கர்த்தரிடமிருந்து வரும் இந்த வார்த்தையைக் கேளுங்கள். கடல் மூலமாக தொலைதூர நாடுகளுக்கும் அச்செய்தியைக் கூறுங்கள்,ֹ ‘தேவன் இஸ்ரவேல் ஜனங்களைச் சிதறச் செய்தார். ஆனால் தேவன் அவர்களைத் திரும்பவும் ஒன்று சேர்ப்பார். அவர் தனது மந்தையை (ஜனங்களை) ஒரு மேய்ப்பனைப்போன்று கவனித்துக்கொள்வார்.’
11 கர்த்தர் யாக்கோபை மீண்டும் கொண்டு வருவார். கர்த்தர் தனது ஜனங்களை அவர்களை விட பலமானவர்களிடமிருந்து காப்பாற்றுவார்.
12 இஸ்ரவேல் ஜனங்கள் சீயோனின் உச்சிக்கு வருவார்கள். அவர்கள் மகிழ்ச்சியில் கத்துவார்கள். அவர்களது முகம் மகிழ்ச்சியால் பிரகாசிக்கும். கர்த்தர் அவர்களுக்கு அளித்த நல்லவற்றுக்காக மகிழ்வார்கள். கர்த்தர் அவர்களுக்குப் புதிய தானியம், புதிய திராட்சைரசம், ஒலிவ எண்ணெய், இளம் ஆடு, பசுக்கள் ஆகியவற்றைக் கொடுப்பார். அவர்கள் நல்ல தண்ணீர் வளமுள்ள தோட்டத்தைப்போன்று இருப்பார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் இனி என்றைக்கும் துன்புறமாட்டார்கள்.
13 பிறகு இஸ்ரவேலின் இளம் பெண்கள் மகிழ்வார்கள், நடனம் ஆடுவார்கள். அந்த ஆட்டத்தில் இளம் ஆண்களும் முதிய ஆண்களும் கலந்துக்கொள்வார்கள். நான் அவர்களது சோகத்தை மகிழ்ச்சியாக மாற்றுவேன். இஸ்ரவேல் ஜனங்களுக்கு நான் ஆறுதல் செய்வேன். நான் அவர்களது சோகத்தை மகிழ்ச்சியாக மாற்றுவேன்.
14 நான் ஆசாரியர்களுக்கு மிகுதியான உணவைக் கொடுப்பேன். நான் அவர்களுக்குக் கொடுக்கிற நல்லவற்றால் எனது ஜனங்கள் நிறைந்து திருப்தி அடைவார்கள்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
15 கர்த்தர் கூறுகிறார், “ராமாவில் ஒரு சத்தம் கேட்கும். இது மிகவும் துக்கக் கதறலாய் மிகுந்த சோகத்துடன் இருக்கும். ராகேல் தனது பிள்ளைகளுக்காக அழுதுக்கொண்டிருப்பாள். ராகேல் ஆறுதல் பெற மறுப்பாள். ஏனென்றால், அவளது பிள்ளைகள் மரித்துவிட்டனர்.”
16 ஆனால் கர்த்தர் கூறுகிறார், “அழுகையை நிறுத்துங்கள்! உங்கள் கண்களை கண்ணீரால் நிறைக்காதீர்கள்! உங்கள் வேலைக்காக நீங்கள் பரிசளிக்கப்படுவீர்கள்!” “இஸ்ரவேல் ஜனங்கள் தம் பகைவரது நாடுகளிலிருந்து திரும்ப வருவார்கள்.
17 இஸ்ரவேலே, உனக்கு நம்பிக்கை இருக்கிறது” என்று கர்த்தர் சொல்லுகிறார். “உன் பிள்ளைகள் அவர்களது சொந்த நாட்டிற்கு வருவார்கள்.
18 எப்பிராயீமின் அழுகையை நான் கேட்டிருக்கிறேன். எப்பிராயீம் இவற்றைச் சொல்கிறதை நான் கேட்டேன். ‘கர்த்தாவே! உண்மையில் நீர் என்னைத் தண்டித்துவிட்டீர். நான் எனது பாடத்தைக் கற்றுக்கொண்டேன். நான் என்றென்றும் பயிற்சி பெறாத கன்றுக்குட்டியைப் போன்று இருந்தேன். தயவுசெய்து என்னைத் தண்டிப்பதை நிறுத்தும். நான் திரும்ப உம்மிடம் வருவேன். நீர் உண்மையில் எனது தேவனாகிய கர்த்தர்தான்.
19 கர்த்தாவே, நான் உம்மை விட்டு அலைந்து திரிந்தேன். ஆனால் நான் செய்த தீயவற்றைப்பற்றி கற்றுக்கொண்டேன். எனவே நான் எனது வாழ்வையும் மனதையும் மாற்றிக்கொண்டேன். நான் இளமையாக இருந்தபோது செய்த முட்டாள்தனமான செயல்களை எண்ணி நான் அவமானமும் நிந்தையும் அடைகிறேன்’” என்றான்.
20 தேவன், “எப்பிராயீம் எனது அன்பான மகன் என்பதை நீ அறிகிறாய். நான் அந்தப் பிள்ளையை நேசிக்கிறேன். ஆம். நான் அவ்வப்போது எப்பிராயீமை குறை கண்டுப்பிடித்தேன். ஆனால், அவனை இன்னமும் நினைத்துக்கொண்டிருக்கிறேன். நான் அவனை மிகவும் நேசிக்கிறேன். நான் உண்மையில் அவனுக்கு ஆறுதல் அளிக்க விரும்புகிறேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
21 “இஸ்ரவேல் ஜனங்களே சாலை அடையாளங்களை வையுங்கள். வீட்டிற்கான வழியைக் காட்டும் அடையாளங்களை வையுங்கள். சாலையை கவனியுங்கள். நீங்கள் நடந்த வழியை நினைவுக்கொள்ளுங்கள். இஸ்ரவேலே, எனது மணமகளே, வீட்டிற்கு வா. உனது பட்டணங்களுக்குத் திரும்பி வா.
22 உன்மையில்லாத மகளே, இன்னும் எவ்வளவு காலம் நீ சுற்றித் திரிவாய்? நீ எப்பொழுது வீட்டிற்குத் திரும்ப வருவாய்?” என்று கர்த்தர் சொல்லுகிறார். “கர்த்தர் இந்நாட்டில் ஏதாவது புதியதைச் செய்யும்போது, பெண் ஆணைச் சூழ்ந்துக்கொள்வது போன்றது”
23 சர்வ வல்லமையுள்ள இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கூறுகிறதாவது: “நான் மீண்டும் யூதா ஜனங்களுக்கு நன்மை செய்வேன். சிறைக் கைதிகளாக எடுக்கப்பட்ட ஜனங்களை நான் திரும்பக் கொண்டு வருவேன். அந்த நேரத்தில், யூதா நாட்டிலும் நகரங்களிலுமுள்ள ஜனங்கள் மீண்டும் இவ்வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள். ‘கர்த்தர் உன்னையும் வீட்டையும் பரிசுத்தமான மலையையும் ஆசீர்வதிக்கட்டும்.’”
24 “யூதாவின் அனைத்து நகரங்களிலும் வாழ்கின்ற ஜனங்கள் ஒன்று சேர்ந்து சமாதானத்தோடு வாழ்வார்கள். விவசாயிகளும் தங்கள் மந்தைகளோடு சுற்றி அலைகிற மேய்ப்பர்களும் ஒன்று சேர்ந்து யூதாவில் சமாதானமாக வாழ்வார்கள்.
25 நான் பலவீனமும் சோர்வும் அடைந்த ஜனங்களுக்குவலிமையையும்ஓய்வையும்கொடுப்பேன்.”
26 இதனைக் கேட்டப் பிறகு, நான் (எரேமியா) எழுந்து சுற்றிலும் பார்த்தேன். அது ஒரு மிக இனிய உறக்கமாக இருந்தது.
27 “நாட்கள் வந்துக்கொண்டிருக்கின்றன,” என்று கர்த்தர் சொல்லுகிறார். “நான் இஸ்ரவேல் மற்றும் யூதா குடும்பம் பெருக உதவுவேன். நான் அவர்களது பிள்ளைகளும் மிருகங்களும் பெருக உதவுவேன். ஒரு செடியை நட்டு வளர்க்கின்றவனைப் போன்று நான் இருப்பேன்.
28 கடந்த காலத்தில், நான் இஸ்ரவேலையும் யூதாவையும் கண்காணித்தேன். ஆனால், நான் அவர்களை வெளியே பிடுங்கிப்போடும் காலத்துக்காகவும் பார்த்திருந்தேன். நான் அவர்களைக் கிழித்துப்போட்டேன். நான் அவர்களை அழித்தேன். நான் அவர்களுக்குப் பல தொல்லைகளைக் கொடுத்தேன். ஆனால், இப்பொழுது நான் அவர்களைக் கட்டவும் பலமாகச் செய்யவும் கவனிப்பேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
29 “ஜனங்கள் என்றைக்கும் இந்த பழமொழியைச் சொல்லமாட்டார்கள்: “‘பெற்றோர்கள் புளித்த திராட்சைகளைத் தின்றனர். ஆனால் பிள்ளைகள் புளிப்புச் சுவையைப் பெற்றனர்.’
30 இல்லை, ஒவ்வொருவனும் தனது சொந்தப் பாவத்திற்காக சாவான். புளித்த திராட்சையை உண்ணும் ஒருவன் புளிப்புச் சுவையைப் பெறுவான்.”
31 கர்த்தர், “இஸ்ரவேலின் குடும்பத்தோடும் யூதாவின் குடும்பத்தோடும் புதிய உடன்படிக்கையைச் செய்யக்கூடிய நேரம் வந்துக்கொண்டிருக்கிறது.
32 இது அவர்களது முற்பிதாக்களிடம் ஏற்படுத்திய உடன்படிக்கை போன்றதல்ல. அது, அவர்களை நான் கையில் எடுத்து எகிப்துக்கு வெளியே கொண்டு வந்தபோது செய்தது. நான் அவர்களுக்கு ஆண்டவராக இருந்தேன். ஆனால், அவர்கள் அந்த உடன்படிக்கையை உடைத்தனர்” என்றார். இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது.
33 “எதிர்காலத்தில், நான் இஸ்ரவேல் ஜனங்களிடம் இந்த உடன்படிக்கையைச் செய்வேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “நான் எனது போதனைகளை அவர்களது மனதில் வைப்பேன். நான் அவற்றை அவர்களின் இருதயத்தின் மேல் எழுதுவேன். நான் அவர்களது தேவனாக இருப்பேன். அவர்கள் எனது ஜனங்களாக இருப்பார்கள்.
34 ஜனங்கள் தமது அயலவர்க்கும் உறவினர்க்கும் கர்த்தரை அறிந்துக்கொள்ள கற்பிக்கமாட்டார்கள். ஏனென்றால், முக்கியத்துவம் குறைந்த ஜனங்களிலிருந்து முக்கியத்துவம் மிகுந்த ஜனங்கள் வரை என்னை அறிவர்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “நான் அவர்களை அவர்கள் செய்த தீயவற்றுக்காக மன்னிப்பேன். நான் அவர்களது பாவங்களை நினைவுக்கொள்ளமாட்டேன்.”
35 கர்த்தர் பகலில் சூரியனைப் பிரகாசிக்கும்படிச் செய்தார். கர்த்தர் சந்திரன் மற்றும் நட்சத்திரங்களை இரவில் பிராகாசிக்கும்படிச் செய்தார். கர்த்தர் கடலை கலக்குகிறார். அதனால் அதன் அலைகள் கரையில் மோதுகின்றன. சர்வ வல்லமையுள்ள கர்த்தர் என்பது அவரது நாமம்.
36 கர்த்தர், “இஸ்ரவேலின் சந்ததியார் ஒரு நாடாக இருப்பது ஒருபோதும் முடிவுறாது. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் மற்றும் கடலின் மேலுள்ள எனது ஆதிக்கத்தை இழந்தால் மாத்திரமே அப்படி நிகழும்” என்றார்.
37 கர்த்தர் கூறுகிறார்: “இஸ்ரவேலின் சந்ததியாரை நான் ஒருபோதும் தூக்கி எறியமாட்டேன். மேலே ஆகாயத்தை அளக்கவும், பூமியின் இரகசியங்களை புரிந்துக்கொள்ளவும் ஜனங்களால் முடியுமானால் இது நிகழும். இஸ்ரவேல் செய்த தீமையினிமித்தம் மட்டுமே நான் அவர்களைத் தள்ளுவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
38 இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது, “கர்த்தருக்காக எருசலேம் மீண்டும் கட்டப்படும் நாட்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. முழு நகரமும் அனானெயேலின் கோபுரம் முதல் மூலை வாசல்வரை மீண்டும் கட்டப்படும்.
39 அளவு நூலானது மூலை வாசலில் இருந்து நேராக காரேப் குன்றுவரைப் போய் பிறகு, கோரா எனும் இடத்துக்குத் திரும்பும்.
40 மரித்த உடல்களும் சாம்பல்களும் எறியப்பட்ட அப்பள்ளத்தாக்கு கர்த்தருக்கு பரிசுத்தமாய் இருக்கும். கீதரோன் பள்ளத்தாக்கின் பீடபூமி முதல் குதிரை வாசலின் மூலைவரை அனைத்து வழியும் கர்த்தருக்குப் பரிசுத்த இடமாகக் கருதப்படும். எருசலேம் நகரம் மீண்டும் என்றைக்கும் கீழே இழுக்கப்படவோ அழிக்கப்படவோ ஆகாது.”