Isaiah 36 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 எசேக்கியா அரசனது ஆட்சியின் பதினான்காம் ஆண்டில் அசீரியாவின் மன்னன் சனகெரிபு அரண்சூழ்ந்த யூதா நகர்கள் அனைத்திற்கும் எதிராகப் படையெடுத்து வந்து அவற்றைக் கைப்பற்றினான்.2 பின்பு அசீரிய மன்னன் இலாக்கிசிலிருந்து இரப்சாக்கே என்பவனைப் பெரும்படையுடன் எருசலேமுக்கு எசேக்கியா அரசனிடம் அனுப்பி வைத்தான். அவனும் புறப்பட்டு வந்து, ‘வண்ணார் துறை’ நெடுஞ்சாலை அருகிலிருந்த மேற்குக் குளக் கால்வாய்க் கரையில் நின்றுகொண்டிருந்தான்.3 அப்பொழுது அவனிடம் யூதாவைச் சார்ந்த அரண்மனை மேற்பார்வையாளரும் இல்க்கியாவின் மகனுமான எலியாக்கிம், எழுத்தரான செபுனா, பதிவாளரும் ஆசாபின் மகனுமான யோவாகு ஆகியோர் புறப்பட்டுச் சென்றனர்.4 இரப்சாக்கே அவர்களை நோக்கி, “எசேக்கியாவிடம் நீங்கள் சொல்ல வேண்டியது: மாவேந்தர் அசீரிய மன்னர் கூறுவது இதுவே: யாரை நம்பி நீ இப்படிச் செய்கிறாய்?5 வெறும் வாய்ப்பேச்சு போர்ச் சூழலுக்கும் போர் வலிமைக்கு ஈடாகும் என்று நீ கருதுகின்றாயா? யாரை நம்பி நீ எனக்தெதிராய்க் கிளர்ச்சி செய்தாய்?⒫6 இதோ, முறிந்த நாணற்கோல் போன்ற எகிப்தின்மீது நீ நம்பிக்கை வைத்துள்ளாய்; ஒருவன் அதை ஊன்றுகோலாகக் கொண்டால், அது அவன் கைக்குள் ஊடுருவிச் சென்று காயப்படுத்தும்; எகிப்து அரசன் பார்வோனும் தன்னை நம்பிய யாவர்க்கும் இப்படியே இருப்பான்.7 அல்லது, எங்கள் கடவுளாகிய ஆண்டவர்மீது நம்பிக்கையை வைத்துள்ளோம் என்று நீங்கள் என்னிடம் சொல்வீர்களானால், அக்கடவுளின் வழிபாட்டு மேடைகளையும் பலி பீடங்களையும் இடித்தெறிந்தவன் எசேக்கியா அல்லவா? இந்த ஒரு பலி பீடத்தில் மட்டுமே நீங்கள் வழிபட வேண்டும் என்று யூதா, எருசலேம் மக்களிடம் கூறியவனும் அவனல்லவா?8 இப்பொழுது என் தலைவராகிய அசீரிய அரசனுடன் பேரம் ஒன்று செய்து கொள். நான் உனக்கு இரண்டாயிரம் குதிரைகளைத் தருவேன். ஆனால் அவற்றின்மேல் ஏறிச் செல்லும் திறனுள்ள வீரர்கள் உன்னிடம் உள்ளனரா?9 என் தலைவரின் அதிகாரிகளுள் மிகச்சிறிய தலைவன் ஒருவனைக்கூட பின்வாங்கச் செய்ய உன்னால் முடியுமா? இப்படியிருக்க, நீ தேர்ப்படைக்காகவும் குதிரை வீரர்களுக்காகவும் எகிப்தை நம்பியிருப்பதேன்?10 மேலும், ஆண்டவரின் விருப்பமின்றியா, இந்த நாட்டுக்கு எதிராக வந்து அதை அழிக்கப்போகிறேன்? ஆண்டவர் என்னிடம், ‘நீ இந்த நாட்டுக்கு எதிராகச் சென்று, அதை அழித்துவிடு’ என்று கூறியுள்ளார்” என்றான்.11 எலியாக்கிம், செபுனா, யோவாகு ஆகியோர் இரப்சாக்கேயை நோக்கி, “உம் பணியாளர்களான எங்களோடு தயைகூர்ந்து அரமேய மொழியில் பேசும்; நாங்கள் புரிந்து கொள்வோம். எங்களிடம் யூதா நாட்டு மொழியில் பேசாதீர். சுவர்மேல் இருக்கும் ஆள்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்” என்றனர்.12 அதற்கு இரப்சாக்கே, “உங்களிடம் உங்கள் தலைவனிடமும் இந்த வார்த்தைகளைக் கூறுவதற்காகவா என்னை என் தலைவர் அனுப்பி வைத்துள்ளார்? உங்களுடன் தங்கள் மலத்தைத் தின்று தங்கள் சிறு நீரைக் குடிக்கப் போகிறவர்களாகிய சுவர்மேல் அமர்ந்திருக்கின்ற இந்த ஆள்களிடம் அறிவிப்பதற்கன்றோ என்னை அனுப்பியுள்ளார்” என்றான்.13 பின்பு அவன் எழுந்து நின்று யூதா நாட்டு மொழியில் உரத்த குரலில் கத்தி, “மாவேந்தர் அசீரிய மன்னரின் வார்த்தைகளைக் கேளுங்கள்:14 அரசர் கூறுவது இதுவே: எசேக்கியா உங்களை ஏமாற்ற விடாதீர்கள். ஏனெனில், அவனால் உங்களை விடுவிக்க இயலாது.15 ‘ஆண்டவர் நம்மை விடுவிப்பது உறுதி; இந்நகர் அசீரிய மன்னன் கையில் ஒப்படைக்கப்படாது’ என்று சொல்லி ஆண்டவர் மேல் நம்பிக்கை கொள்ளுமாறு உங்களை அவன் தூண்டுவான்; அதற்கு இடம் கொடாதீர்கள்.16 எசேக்கியாவிற்குச் செவிகொடுக்காதீர்கள். ஏனெனில் அசீரிய அரசர் கூறுகிறார்; என்னுடன் சமாதானம் செய்து கொள்ளுங்கள்; என்னிடம் சரணடையுங்கள்; அப்போது உங்களில் ஒவ்வொருவனும் தன் திராட்சைத் தோட்டக் கனியையும், அத்தி மரப் பழத்தையும் உண்பான்; தன் கிணற்றிலிருந்து நீரைப் பருகுவான்.⒫17 நான் வந்து உங்கள் நாட்டைப் போன்ற நாட்டிற்கு — தானியமும் திராட்சை இரசமும் மிகுதியாகக் கிடைப்பதும், உணவுப் பொருளும் திராட்சைத் தோட்டங்களும் ஏராளமாய் உள்ளதுமான நாட்டிற்கு — உங்களைக் கூட்டிச் செல்லும்வரை இது நடக்கும்.18 ‘ஆண்டவர் நம்மை விடுவிப்பார்’ என்று சொல்லி எசேக்கியா உங்களை ஏமாற்றாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மக்களினங்களின் தெய்வங்களில் எவரேனும் அசீரியா அரசரின் கையிலிருந்து தன் நாட்டை விடுவித்ததுண்டோ?19 ஆமாத்தின் தெய்வங்களும் அர்ப்பாதின் தெய்வங்களும் எங்கே? செபர்வயிம் தெய்வங்கள் எங்கே? என் கையிலிருந்து அவர்களால் சமாரியாவை விடுவிக்க முடிந்ததா?20 அந்த நாடுகளின் தெய்வங்கள் அனைத்திலும் ஒன்றாவது என் கையிலிருந்து தன் நாட்டை விடுவித்ததுண்டா? அப்படியிருக்க, எருசலேமை என் கையிலிருந்து ஆண்டவரால் விடுவிக்க இயலுமா?”21 அவர்கள் அவனுக்கு ஒருவார்த்தையும் மறுமொழியாகச் சொல்லாது மௌனமாயிருந்தார்கள். எனெனில் ‘அவனுக்கு மறுமொழி ஒன்றும் சொல்லாதீர்கள்’ என்று அரசர் கட்டளையிட்டிருந்தார்.22 அரண்மனை மேற்பார்வையாளரும் இல்க்கியாவின் மகனுமான எலியாக்கிம், எழுத்தரான செபுனா, பதிவாளரும் ஆசாபின் மகனுமான யோவாகு ஆகியோர் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு எசேக்கியாவிடம் வந்து இரப்சாக்கே சொல்லியவற்றை அவரிடம் அறிவித்தனர்.⒫