1 Timothy 5 in Gujarati TRV Compare Thiru Viviliam
1 முதியோரிடம் கடுமையாய் இராதே. அவர்களைத் தந்தையராக மதித்து ஊக்குவி. இளைஞர்களைத் தம்பிகளாகவும்,2 வயது முதிர்ந்த பெண்களை அன்னையராகவும், இளம் பெண்களைத் தூய்மை நிறைந்த மனத்தோடு தங்கையராகவும் கருதி அறிவுரை கூறு.⒫3 கைம்பெண்களுக்கு மதிப்புக்கொடு. ஆதரவற்ற கைம்பெண்களையே இங்குக் குறிப்பிடுகிறேன்.4 பிள்ளைகளோ பேரப்பிள்ளைகளோ உடைய கைம்பெண்கள் தாங்கள் கொண்டுள்ள இறைப்பற்றிற்கு ஏற்ப முதலில் தங்கள் சொந்தக் குடும்பத்தினரைப் பேணவும் பெற்றோருக்கு நன்றிக்கடன் ஆற்றவும் கற்றுக் கொள்ளட்டும். இதுவே கடவுளின் முன்னிலையில் ஏற்புடையது.5 ஆதரவின்றித் தனியாய் விடப்பட்ட கைம்பெண் கடவுள் மேல் கொண்ட எதிர்நோக்குடன் அல்லும் பகலும் மன்றாட்டிலும் இறைவேண்டலிலும் நிலைத்திருப்பாராக.6 சிற்றின்பத்தில் உழல்பவர்கள் நடைப் பிணங்களே.7 கைம்பெண்கள் யாதொரு குறைச்சொல்லுக்கும் ஆளாகாதவாறு வாழ இவற்றை அவர்களுக்குக் கட்டளையிடு.8 தம் உறவினரை, சிறப்பாகத் தம் வீட்டாரை ஆதரியாதோர் விசுவாசத்தை மறுதலிப்பவராவர். அவர்கள் விசுவாசமற்றோரைவிடத் தாழ்ந்தோராவர்.⒫9 அறுபது வயதுக்குக் குறையாத ஒருவரே கைம்பெண்ணாகப் பதிவு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். அவர் ஒரு கணவரைக் கொண்டவராய் இருந்திருக்க வேண்டும்.*10 அவர் பிள்ளைகளை வளர்த்தல், விருந்தோம்பல், இறைமக்களின் காலடிகளைக் கழுவுதல், இன்னலுற்றோருக்கு உதவி செய்தல் போன்ற அனைத்து நற்செயல்களில் ஈடுபட்டு அவற்றால் நற்சான்று பெற்றவராக இருக்க வேண்டும்.⒫11 இளம் கைம்பெண்களைப் பதிவு செய்யாதே. ஏனெனில், கிறிஸ்துவிடமிருந்து தங்களைப் பிரிக்கக்கூடிய தீய நாட்டம் எழும்போது அவர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புவார்கள்;12 தாங்கள் முதலில் கொடுத்த வாக்கை மீறினால் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாவார்கள்;13 அதோடு வீடுவீடாய்ச் சுற்றித் திரிந்து சோம்பேறிகளாக இருக்கக் கற்றுக் கொள்வார்கள். சோம்பேறிகளாக இருப்பது மட்டுமின்றி, தகாதவற்றைப் பேசி வம்பளக்கிறவர்களாகவும், பிறர் அலுவல்களில் தலையிடுகிறவர்களாகவும் இருப்பார்கள்.14 எனவே, இளம் கைம்பெண்கள் மீண்டும் திருமணம் செய்துகொண்டு, பிள்ளைகளைப் பெற்று, வீட்டுத் தலைவிகளாய் இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்; அப்போது எதிரி பழி தூற்ற எந்த வாய்ப்பும் இராது.15 ஏனென்றால், இவர்களுள் சிலர் ஏற்கெனவெ நெறிதவறிச் சாத்தானுக்குப் பின் சென்றுவிட்டார்கள்.16 நம்பிக்கை கொண்ட பெண் ஒருவரிடம் கைம்பெண்கள் இருந்தால், அவரே அவர்களுக்கு உதவி செய்யட்டும். திருச்சபையின்மீது அச்சுமையைச் சுமத்தக் கூடாது. ஏனென்றால், அப்போதுதான் உண்மையிலேயே ஆதரவற்ற கைம்பெண்களுக்குத் திருச்சபை உதவி செய்ய முடியும்.⒫17 சபைகளை நன்முறையில் நடத்தும் மூப்பர்கள், சிறப்பாக இறைவார்த்தையை அறிவிப்பதிலும் கற்பிப்பதிலும் ஈடுபட்டு உழைப்பவர்கள் இருமடங்கு ஊதியத்திற்கு* உரியவர்களாகக் கருதப்படவேண்டும்.18 ஏனென்றால், ⁽“போர் அடிக்கும் மாட்டின்␢ வாயைக் கட்டாதே”⁾ என்றும், ⁽“வேலையாளர் தம் கூலிக்கு␢ உரிமை உடையவரே”⁾ என்றும் மறைநூல் கூறுகிறது.19 ஒரு மூப்பருக்கு எதிரான குற்றச்சாட்டை, இரண்டு அல்லது மூன்று சாட்சியங்கள் இல்லாமல் ஏற்றுக்கொள்ளாதே.20 பாவம் செய்கிறவர்களை அனைவர் முன்னிலையிலும் கடிந்துகொள். அப்பொழுது மற்றவர்களும் அச்சம் கொள்வர்.21 கடவுளின் முன்னிலையிலும் கிறிஸ்து இயேசுவின் முன்னிலையிலும் தேர்ந்துகொள்ளப்பட்ட வான தூதர்களின் முன்னிலையிலும் உனக்கு நான் முன்னெச்சரிக்கையாகக் கூறுவது: நான் சொன்னவற்றைக் கடைப்பிடித்து வா. முன்கூட்டியே முடிவெடுக்காதே. நடுநிலை தவறாதே.22 அவசரப்பட்டு யார் மேலும் கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தாதே. பிறருடைய பாவங்களில் பங்கு கொள்ளாதே. உன்னைத் தூய்மையுள்ளவனாகக் காத்துக்கொள்.⒫23 தண்ணீர் மட்டும் குடிப்பதை நிறுத்திவிட்டு, உன் வயிற்றின் நலனுக்காகவும், உனக்கு அடிக்கடி ஏற்படும் உடல்நலக் குறைவின்பொருட்டும் சிறிதளவு திராட்சை மதுவும் பயன்படுத்து.⒫24 சிலருடைய பாவங்கள் வெளிப்படையானவை. அவர்களுடைய பாவங்கள் தீர்ப்புக்காக அவர்களுக்கு முன்னே சென்று சேர்கின்றன. வேறு சிலருடைய பாவங்களோ அவர்களுக்குப் பின்னே வந்து சேர்கின்றன.25 அவ்வாறே நற்செயல்களும் வெளிப்படையானவையே. வெளிப்படையாக இல்லாதவையும் என்றுமே மறைந்திருக்க முடியாது.
By continuing to browse the site, you are agreeing to our use of cookies.