1 அப்பொழுது யோசேப்பு தன் தகப்பனுடைய முகத்தின்மேல் விழுந்து, அழுது, அவனை முத்தம்செய்தான்.

2 பின்பு, தன் தகப்பனுடைய உடலைப் பதப்படுத்தும்படி யோசேப்பு தன் வேலைக்காரர்களாகிய வைத்தியர்களுக்குக் கட்டளையிட்டான்; அப்படியே வைத்தியர்கள் இஸ்ரவேலைப் பதப்படுத்தினார்கள்.

3 பதப்படுத்த நாற்பது நாட்கள் ஆகும்; அப்படியே அந்த நாட்கள் நிறைவேறின. எகிப்தியர்கள் அவனுக்காக எழுபது நாட்கள் துக்கம்அனுசரித்தார்கள்.

4 துக்கம்அனுசரிக்கும் நாட்கள் முடிந்தபின், யோசேப்பு பார்வோனின் குடும்பத்தாரை நோக்கி: உங்கள் கண்களில் எனக்கு தயவுகிடைத்ததானால், நீங்கள் பார்வோனுடைய காது கேட்க அவருக்கு தெரிவிக்கவேண்டியது என்னவென்றால்,

5 என் தகப்பனார் என்னை நோக்கி: இதோ, நான் மரணமடையப்போகிறேன்; கானான் தேசத்திலே நான் எனக்காக வெட்டிவைத்திருக்கிற கல்லறையிலே என்னை அடக்கம் செய்யவேண்டும் என்று என்னிடத்தில் சொல்லி, உறுதிமொழி வாங்கிக்கொண்டார்; நான் அங்கே போய், என் தகப்பனை அடக்கம்செய்து வருவதற்கு அனுமதிகொடுக்க வேண்டிக்கொள்ளுகிறேன் என்று சொல்லுங்கள் என்றான்.

6 அதற்குப் பார்வோன்: உன் தகப்பன் உன்னிடத்தில் உறுதிமொழி வாங்கிக்கொண்டபடியே, நீ போய், அவரை அடக்கம்செய்து வா என்றான்.

7 அப்படியே யோசேப்பு தன் தகப்பனை அடக்கம்செய்யப் போனான். பார்வோனுடைய அரண்மனையிலிருந்த பெரியவர்களாகிய அவனுடைய அனைத்து உயர்அதிகாரிகளும் எகிப்துதேசத்திலுள்ள அனைத்து பெரியோரும்,

8 யோசேப்பின் வீட்டார் அனைவரும், அவனுடைய சகோதரர்களும், தகப்பன் வீட்டாரும் அவனோடுகூடப் போனார்கள். தங்கள் குழந்தைகளையும், தங்கள் ஆடுமாடுகளையும்மாத்திரம் கோசேன் நாட்டிலே விட்டுப் போனார்கள்.

9 இரதங்களும் குதிரைவீரரும் அவனோடு போனதினால், மக்கள்கூட்டம் மிகவும் அதிகமாயிருந்தது.

10 அவர்கள் யோர்தானுக்கு மறுகரையில் இருக்கிற ஆத்தாத்தின் போர்க்களத்திற்கு வந்தபோது, அந்த இடத்திலே பெரும் புலம்பலாகப் புலம்பினார்கள். அங்கே தன் தகப்பனுக்காக ஏழுநாட்கள் துக்கம்அனுசரித்தான்.

11 ஆத்தாத்தின் களத்திலே துக்கம்அனுசரிக்கிறதை அந்த தேசத்தின் குடிமக்களாகிய கானானியர்கள் கண்டு: இது எகிப்தியருக்குப் பெரிய துக்கம்அனுசரித்தல் என்றார்கள். அதனால் யோர்தானுக்கு அப்பால் இருக்கிற அந்த இடத்திற்கு ஆபேல்மிஸ்ராயீம் என்னும் பெயர் உண்டானது.

12 யாக்கோபின் மகன்கள், தங்களுக்குக் கட்டளையிட்டிருந்தபடியே,

13 அவனைக் கானான் தேசத்திற்குக் கொண்டுபோய், ஆபிரகாம் மம்ரேக்கு எதிரே இருக்கிற மக்பேலா என்னும் நிலத்திலே தனக்குச் சொந்தக் கல்லறைப் பூமியாக ஏத்தியனான எப்பெரோனிடத்தில் வாங்கின நிலத்திலுள்ள குகையிலே அவனை அடக்கம்செய்தார்கள்.

14 யோசேப்பு தன் தகப்பனை அடக்கம்செய்தபின்பு, அவனும் அவனுடைய சகோதரர்களும், அவனுடைய தகப்பனை அடக்கம்செய்வதற்கு அவனோடுகூடப் போனவர்கள் அனைவரும் எகிப்திற்குத் திரும்பினார்கள்.

15 தங்களுடைய தகப்பன் மரணமடைந்ததை யோசேப்பின் சகோதரர்கள் கண்டு: ஒரு வேளை யோசேப்பு நம்மைப் பகைத்து, நாம் அவனுக்குச் செய்த எல்லாப் பொல்லாங்குக்காகவும் நம்மை பழிவாங்குவான் என்று சொல்லி, யோசேப்பினிடத்தில் ஆள் அனுப்பி,

16 உம்முடைய சகோதரர்கள் உமக்குப் பொல்லாங்கு செய்திருந்தாலும், அவர்கள் செய்த துரோகத்தையும் பாதகத்தையும் நீர் தயவுசெய்து மன்னிக்கவேண்டும் என்று உம்முடைய தகப்பனார் மரணமடையுமுன்னே, உமக்குச் சொல்லும்படி கட்டளையிட்டார்.

17 ஆகையால், உம்முடைய தகப்பனாருடைய தேவனுக்கு ஊழியக்காரராகிய நாங்கள் செய்த துரோகத்தை மன்னிக்கவேண்டும் என்று அவனுக்குச் சொல்லச் சொன்னார்கள். அவர்கள் அதை யோசேப்புக்குச் சொன்னபோது, அவன் அழுதான்.

18 பின்பு, அவனுடைய சகோதரர்களும் போய், அவனுக்கு முன்பாகத் தாழவிழுந்து: இதோ, நாங்கள் உமக்கு அடிமைகள் என்றார்கள்.

19 யோசேப்பு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நான் தேவனா;

20 நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, திரளான மக்களை உயிரோடு காக்கும்படி, அதை நன்மையாக முடியச்செய்தார்.

21 ஆதலால், பயப்படாதிருங்கள்; நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பராமரிப்பேன் என்று, அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, அவர்களோடு ஆதரவாகப் பேசினான்.

22 யோசேப்பும் அவனுடைய தகப்பன் குடும்பத்தாரும் எகிப்திலே குடியிருந்தார்கள். யோசேப்பு நூற்றுப்பத்து வருடங்கள் உயிரோடிருந்தான்.

23 யோசேப்பு எப்பிராயீமுக்குப் பிறந்த மூன்றாம் தலைமுறைப் பிள்ளைகளையும் கண்டான்; மனாசேயின் மகனாகிய மாகீரின் பிள்ளைகளும் யோசேப்பின் மடியில் வளர்க்கப்பட்டார்கள்.

24 யோசேப்பு தன் சகோதரர்களை நோக்கி: நான் மரணமடையப்போகிறேன்; ஆனாலும் தேவன் உங்களை நிச்சயமாகச் சந்தித்து, நீங்கள் இந்த தேசத்தைவிட்டு, தாம் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக் கொடுத்திருக்கிற தேசத்திற்குப் போகச்செய்வார் என்று சொன்னதுமல்லாமல்;

25 தேவன் உங்களைச் சந்திக்கும்போது, என் எலும்புகளை இந்த இடத்திலிருந்து கொண்டுபோவீர்களாக என்றும் சொல்லி; யோசேப்பு இஸ்ரவேல் வம்சத்தாரிடத்தில் உறுதிமொழி வாங்கிக்கொண்டான்.

26 யோசேப்பு நூற்றுப்பத்து வயதுள்ளவனாக இறந்தான். அவனுடைய உடலைப் பதப்படுத்தி, எகிப்து தேசத்தில் அவனை ஒரு பெட்டியிலே வைத்துவைத்தார்கள்.