1 யாக்கோபு தன் தகப்பன் தங்கியிருந்த கானான் தேசத்திலே குடியிருந்தான்.

2 யாக்கோபுடைய சந்ததியின் வரலாறு: யோசேப்பு பதினேழு வயதிலே தன் சகோதரர்களுடனே ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்; அந்த இளைஞன் பில்காள் சில்பாள் என்னும் தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளின் மகன்களோடு இருந்து, அவர்களுடைய துன்மார்க்கத்தைத் தன் தகப்பனுக்குச் சொல்லிவருவான்.

3 இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்பு தனக்குப் பிறந்ததினால், இஸ்ரவேல் தன் மகன்கள் எல்லோரையும்விட அவனை அதிகமாக நேசித்து, அவனுக்குப் பலவர்ண அங்கியைச் செய்வித்தான்.

4 அவனுடைய சகோதரர்கள் எல்லோரையும்விட அவனைத் தங்கள் தகப்பன் அதிகமாக நேசிக்கிறதை அவனுடைய சகோதரர்கள் கண்டபோது, அவனோடு ஆதரவாகப் பேசாமல் அவனைப் பகைத்தார்கள்.

5 யோசேப்பு ஒரு கனவு கண்டு, அதைத் தன் சகோதரர்களுக்குத் தெரிவித்தான்; அதனால் அவனை இன்னும் அதிகமாகப் பகைத்தார்கள்.

6 அவன் அவர்களை நோக்கி: நான் கண்ட கனவைக் கேளுங்கள்:

7 நாம் வயலில் அறுத்த அரிகளைக் கட்டிக்கொண்டிருந்தோம்; அப்பொழுது என்னுடைய அரிக்கட்டு நிமிர்ந்திருந்தது; உங்களுடைய அரிக்கட்டுகள் என் அரிக்கட்டைச் சுற்றி வணங்கி நின்றது என்றான்.

8 அப்பொழுது அவனுடைய சகோதரர்கள் அவனைப் பார்த்து: நீ எங்கள்மேல் ஆளுகை செய்வாயோ? நீ எங்களை ஆளப்போகிறாயோ? என்று சொல்லி, அவனை அவனுடைய கனவுகளினாலும், அவனுடைய வார்த்தைகளினாலும் இன்னும் அதிகமாகப் பகைத்தார்கள்.

9 அவன் வேறொரு கனவு கண்டு, தன் சகோதரர்களை நோக்கி: நான் இன்னும் ஒரு கனவைக் கண்டேன்; சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்கினது என்றான்.

10 இதை அவன் தன்னுடைய தகப்பனுக்கும், சகோதரர்களுக்கும் சொன்னபோது, அவனுடைய தகப்பன் அவனைப் பார்த்து: நீ கண்ட இந்தக் கனவு என்ன? நானும் உன்னுடைய தாயாரும், சகோதரர்களும் தரைவரைக்கும் குனிந்து உன்னை வணங்கவருவோமோ என்று அவனைக் கடிந்துகொண்டான்.

11 அவனுடைய சகோதரர்கள் அவன்மேல் பொறாமைகொண்டார்கள்; அவனுடைய தகப்பனோ அவன் சொன்னதை மனதிலே வைத்துக்கொண்டான்.

12 பின்பு, அவனுடைய சகோதரர்கள் சீகேமிலே தங்கள் தகப்பனுடைய ஆடுகளை மேய்க்கப் போனார்கள்.

13 அப்பொழுது இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: உன் சகோதரர்கள் சீகேமிலே ஆடுகளை மேய்க்கிறார்கள் அல்லவா? உன்னை அவர்களிடத்திற்கு அனுப்பப் போகிறேன், வா என்றான். அவன்: இதோ, போகிறேன் என்றான்.

14 அப்பொழுது அவன்: நீ போய், உன் சகோதரர்கள் எப்படி இருக்கிறார்கள் என்றும், ஆடுகள் எப்படி இருக்கிறது என்றும் பார்த்து, எனக்கு மறுசெய்தி கொண்டுவா என்று அவனுக்குச் சொல்லி, எபிரோன் பள்ளத்தாக்கிலே இருந்து அவனை அனுப்பினான்; அந்தப்படியே அவன் சீகேமுக்குப் போனான்.

15 அப்பொழுது ஒரு மனிதன் அவன் வெளியிலே அலைந்து திரிவதைக் கண்டு, என்ன தேடுகிறாய்? என்று அவனைக் கேட்டான்.

16 அதற்கு அவன்: என் சகோதரர்களைத் தேடுகிறேன், அவர்கள் எங்கே ஆடு மேய்க்கிறார்கள், சொல்லும் என்றான்.

17 அந்த மனிதன்: அவர்கள் இந்த இடத்திலிருந்து போய்விட்டார்கள், தோத்தானுக்குப் போவோம் என்று அவர்கள் சொல்வதைக்கேட்டேன் என்றான்; அப்பொழுது யோசேப்பு தன் சகோதரர்களைத் தொடர்ந்துபோய், அவர்களைத் தோத்தானிலே கண்டுபிடித்தான்.

18 அவன் தூரத்தில் வருவதை அவர்கள் கண்டு, அவன் தங்களுக்கு அருகில் வருவதற்குமுன்னே, அவனைக் கொலைசெய்யும்படி சதியோசனைசெய்து,

19 ஒருவரை ஒருவர் நோக்கி: இதோ, கனவுகாண்கிறவன் வருகிறான்,

20 நாம் அவனைக் கொன்று, இந்தக் குழிகள் ஒன்றிலே அவனைப் போட்டு, ஒரு கொடியமிருகம் அவனைக் கொன்றது என்று சொல்லுவோம் வாருங்கள்; அவனுடைய கனவுகள் எப்படி நிறைவேறுமென்று பார்ப்போம் என்றார்கள்.

21 ரூபன் அதைக்கேட்டு, அவனை அவர்களுடைய கைக்குத் தப்புவித்து, அவனை அவனுடைய தகப்பனிடத்திற்குத் திரும்பவும் கொண்டுபோக மனதுள்ளவனாகி,

22 அவர்களை நோக்கி: அவனைக் கொல்லவேண்டாம், நீங்கள் இரத்தம் சிந்தக்கூடாது; நீங்கள் அவன்மேல் கைகளை வைக்காமல், அவனை வனாந்திரத்திலுள்ள இந்தக் குழியிலே போட்டுவிடுங்கள் என்று சொல்லி, இந்த விதமாக ரூபன் அவனை அவர்களிடமிருந்து தப்புவித்தான்.

23 யோசேப்பு தன் சகோதரர்களிடத்தில் சேர்ந்தபோது யோசேப்பு அணிந்துகொண்டிருந்த பலவர்ண அங்கியை அவர்கள் கழற்றி,

24 அவனைத் தூக்கி, அந்தக் குழியிலே போட்டார்கள்; அது தண்ணீரில்லாத வெறுங்குழியாயிருந்தது.

25 பின்பு, அவர்கள் சாப்பிடுவதற்காக உட்கார்ந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது, இதோ, கீலேயாத்திலிருந்து வருகிற இஸ்மவேலருடைய கூட்டத்தைக் கண்டார்கள்; அவர்கள் எகிப்திற்குக் கொண்டுபோகும்படி கந்தவர்க்கங்களையும் பிசின்தைலத்தையும் வெள்ளைப்போளத்தையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றிக்கொண்டுவந்தார்கள்.

26 அப்பொழுது யூதா தன் சகோதரர்களை நோக்கி: நாம் நம்முடைய சகோதரனைக் கொன்று, அவனுடைய இரத்தத்தை மறைப்பதினால் லாபம் என்ன?

27 அவனை இந்த இஸ்மவேலருக்கு விற்றுப்போடுவோம் வாருங்கள்; நமது கை அவன்மேல் படாமலிருப்பதாக; அவன் நம்முடைய சகோதரனும் நம்முடைய சரீரமாக இருக்கிறானே என்றான். அவனுடைய சகோதரர்கள் அவன் சொல்லுக்கு சம்மதித்தார்கள்.

28 அந்த வியாபாரிகளான மீதியானியர் கடந்துபோகிறபோது, அவர்கள் யோசேப்பை அந்தக் குழியிலிருந்து தூக்கியெடுத்து, அவனை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள். அவர்கள் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டுபோனார்கள்.

29 பின்பு, ரூபன் அந்தக் குழியினிடத்திற்குத் திரும்பிப்போனபோது, யோசேப்பு குழியில் இல்லையென்று கண்டு, தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு,

30 தன் சகோதரரிடத்திற்குத் திரும்பி வந்து: இளைஞன் இல்லையே, ஐயோ! நான் எங்கே போவேன் என்றான்.

31 அவர்கள் யோசேப்பின் அங்கியை எடுத்து, ஒரு வெள்ளாட்டுக்கடாவை அடித்து, அந்த அங்கியை இரத்தத்திலே நனைத்து,

32 அதைத் தங்கள் தகப்பனிடத்திற்கு அனுப்பி: இதை நாங்கள் கண்டெடுத்தோம், இது உம்முடைய மகனின் அங்கியோ, அல்லவோ, பாரும் என்று சொல்லச்சொன்னார்கள்.

33 யாக்கோபு அதைக் கண்டு, இது என் மகனுடைய அங்கிதான், ஒரு கொடியமிருகம் அவனைக் கொன்றுபோட்டது, யோசேப்பு கிழிக்கப்பட்டுப் போனான் என்று புலம்பி,

34 தன் ஆடைகளைக் கிழித்து, தன் இடுப்பில் சணல் ஆடையைக் கட்டிக்கொண்டு, அநேகநாட்கள் தன் மகனுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான்.

35 அவனுடைய மகன்கள், மகள்கள் எல்லோரும் அவனுக்கு ஆறுதல் சொல்ல வந்து நின்றார்கள்; ஆனாலும் அவன் ஆறுதலுக்கு இடம்கொடாமல், நான் துக்கத்தோடு என் மகனிடத்திற்கு பாதாளத்தில் இறங்குவேன் என்றான். இந்த விதமாக அவனுடைய தகப்பன் அவனுக்காக அழுதுகொண்டிருந்தான்.

36 அந்த மீதியானியர்கள் யோசேப்பை எகிப்திலே பார்வோனின் அதிகாரியும் மெய்க்காப்பாளர்களுக்கு தலைவனுமாகிய போத்திபார் என்பவனிடத்தில் விற்றார்கள்.

Genesis 37 ERV IRV TRV