Ezra 3 in Tamil IRV Compare Tamil Indian Revised Version
1 இஸ்ரவேல் வம்சத்தார் பட்டணங்களிலே குடியேறி, ஏழாம் மாதமானபோது, மக்கள் ஒரேமனதுடன் எருசலேமிலே கூடினார்கள்.
2 அப்பொழுது யோசதாக்கின் மகனாகிய யெசுவாவும், அவன் சகோதரர்களாகிய ஆசாரியர்களும், செயல்தியேலின் மகனாகிய செருபாபேலும், அவனுடைய சகோதரர்களும் எழும்பி, தேவனுடைய மனிதனாகிய மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறமுறையில் சர்வாங்கதகனங்களைப் பலியிடும்படிக்கு, இஸ்ரவேலுடைய தேவனின் பலிபீடத்தைக் கட்டினார்கள்.
3 அவர்கள் அந்த தேசத்தின் மக்களுக்கு பயந்ததால், பலிபீடத்தை அதின் ஆதாரங்களின்மேல் ஸ்தாபித்து, அதின்மேல் அவர்களுடைய கர்த்தருக்கு காலை மாலை சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினார்கள்.
4 எழுதியிருக்கிறமுறையில் அவர்கள் கூடாரப்பண்டிகையை அனுசரித்து, நித்திய நியமத்தின்முறையிலும் அன்றாடகக் கணக்கு வரிசையில் ஒவ்வொரு நாளிலும் பலியிட்டார்கள்.
5 அதற்குப்பின்பு அனுதினமும், மாதப்பிறப்புகளிலும், கர்த்தருடைய அனைத்து பரிசுத்த பண்டிகைகளிலும் செலுத்தும் சர்வாங்கதகனபலியையும், கர்த்தருக்கு அவரவர் செலுத்தும் உற்சாகபலியையும் செலுத்தினார்கள்.
6 ஏழாம் மாதம் முதல் தேதியில் கர்த்தருக்கு சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தத் துவங்கினார்கள்; ஆனாலும் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் இன்னும் போடப்படவில்லை.
7 அப்பொழுது பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் தங்களுக்குப் பிறப்பித்த உத்திரவின்படியே அவர்கள் கல்தச்சர்களுக்கும் தச்சருக்கும் பணத்தையும், லீபனோனிலிருந்து கேதுருமரங்களைக் கடல்வழியாக யோபாவரை கொண்டுவரச் சீதோனியர்களுக்கும் தீரியர்களுக்கும் உணவையும் தண்ணீரையும் எண்ணெயையும் கொடுத்தார்கள்.
8 அவர்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்திற்கு வந்த இரண்டாம் வருடம் இரண்டாம் மாதத்திலே, செயல்தியேலின் மகனாகிய செருபாபேலும், யோசதாக்கின் மகனாகிய யெசுவாவும், மற்றும் அவர்களுடைய சகோதரர்களாகிய ஆசாரியர்களும் லேவியர்களும், சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கு வந்த அனைவரும், ஆரம்பம்செய்து, இருபதுவயதுமுதல் அதற்கு மேற்பட்ட லேவியர்களைக் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை நடத்தும்படி வைத்தார்கள்.
9 அப்படியே தேவனுடைய ஆலயத்தின் வேலையைச் செய்கிறவர்களை நடத்துவதற்காக யெசுவாவும் அவனுடைய மகன்களும், சகோதரர்களும், கத்மியேலும் அவனுடைய மகன்களும், யூதாவின் மகன்களும், எனாதாத்தின் மகன்களும், அவர்களுடைய சகோதரர்களாகிய லேவியர்களும் ஒருமனப்பட்டு நின்றார்கள்.
10 சிற்ப ஆசாரிகள் கர்த்தருடைய ஆலயத்திற்கு அஸ்திபாரம் போடுகிறபோது, இஸ்ரவேல் ராஜாவாகிய தாவீதுடைய கட்டளையின்படியே, கர்த்தரைத் துதிப்பதற்கு, ஆடைகளை அணிந்து, பூரிகைகளை ஊதுகிற ஆசாரியர்களையும், தாளங்களைத் தட்டுகிற ஆசாபின் மகனாகிய லேவியர்களையும் நிறுத்தினார்கள்.
11 கர்த்தர் நல்லவர், இஸ்ரவேலின்மேல் அவருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைப் புகழ்ந்து துதிக்கும்போது, மாறிமாறிப் பாடினார்கள்; கர்த்தரைத் துதிக்கும்போது, மக்கள் எல்லோரும் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்படுவதினால் மகா கெம்பீரமாக ஆர்ப்பரித்தார்கள்.
12 முந்தின ஆலயத்தைப் பார்த்திருந்த முதிர்வயதான ஆசாரியர்களிலும், லேவியர்களிலும், பிதாக்கள் வம்சங்களின் தலைவர்களிலும் அநேகர் இந்த ஆலயத்திற்குத் தங்கள் கண்களுக்கு முன்பாக அஸ்திபாரம் போடப்படுகிறதைக் கண்டபோது, மகா சத்தமிட்டு அழுதார்கள்; வேறே அநேகம்பேரோ கெம்பீர சந்தோஷமாக ஆர்ப்பரித்தார்கள்.
13 மக்கள் மகா கெம்பீரமாக ஆர்ப்பரிக்கிறதினால் அவர்களுடைய சத்தம் வெகுதூரம் கேட்கப்பட்டது; ஆனாலும் சந்தோஷ ஆரவாரத்தின் சத்தம் இன்னதென்றும், மக்களுடைய அழுகையின் சத்தம் இன்னதென்றும் பகுத்தறிய முடியாதிருந்தது.