1 கர்த்தருடைய வல்லமை என்மேல் வந்தது. கர்த்தருடைய ஆவி என்னை நகரத்திலிருந்து தூக்கி ஒரு பள்ளத்தாக்கின் நடுவிலே கொண்டு போய்விட்டது. அப்பள்ளத்தாக்கு மரித்துப்போன மனிதர்களின் எலும்புகளால் நிறைந்திருந்தது.
2 பள்ளத்தாக்கின் வெட்ட வெளியில் அந்த எலும்புகள் மிகுதியாகக் கிடந்தன. என்னை அந்த எலும்புகள் நடுவே நடக்குமாறு கர்த்தர் செய்தார். நான் அவ்வெலும்புகள் மிகவும் காய்ந்து கிடந்ததைக் கண்டேன்.
3 பிறகு எனது கர்த்தராகிய ஆண்டவர் என்னிடம் கேட்டார்: “மனுபுத்திரனே, இந்த எலும்புகளுக்கு உயிர்வருமா?” நான் சொன்னேன், “எனது கர்த்தராகிய ஆண்டவரே, உமக்கு மட்டுமே இந்தக் கேள்விக்குப் பதில் தெரியும்.”
4 எனது கர்த்தராகிய ஆண்டவர் என்னிடம் சொன்னார்: “அவ்வெலும்புகளிடம் எனக்காகப் பேசு. அவ்வெலும்புகளிடம் சொல், ‘காய்ந்த எலும்புகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கவனியுங்கள்!
5 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றை உங்களுக்குக் கூறுகிறார். உங்களுக்குள் உயிர்மூச்சு வரும்படிச் செய்வேன். நீங்கள் உயிர் பெறுவீர்கள்!
6 நான் உங்களில் தசைநார்களையும், தசைகளையும் வைப்பேன். நான் உங்களை தோலால் மூடுவேன். பின்னர், நான் உங்களுக்குள் மூச்சுக் காற்றை வைப்பேன். நீங்கள் திரும்ப உயிர் பெறுவீர்கள்! பிறகு, நானே கர்த்தராகிய ஆண்டவர் என்பதை அறிவீர்கள்.’”
7 எனவே, நான் கர்த்தருக்காக எலும்புகளிடம் அவர் சொன்னது போல் பேசினேன். நான் இன்னும் பேசிக்கொண்டிருந்தபோது, உரத்த சத்தம் கேட்டது, எலும்புகள் அசைந்து ஒன்றோடு ஒன்று சேர்ந்துக்கொண்டன.
8 அங்கே என் கண் முன்னால் எலும்புகளின் மேல் தசைநார்களும், தசைகளும் சேர்ந்தன. அவற்றைத் தோல் மூடிக்கொண்டது. ஆனால் உடல்கள் அசையவில்லை. அவற்றில் மூச்சுக் காற்று இல்லை.
9 பிறகு எனது கர்த்தராகிய ஆண்டவர் என்னிடம் கூறினார்: “எனக்காகக் காற்றிடம் பேசு. மனுபுத்திரனே, எனக்காகக் காற்றிடம் பேசு. கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார் என்று காற்றிடம் சொல்: ‘காற்றே, எல்லா திசைகளிலுமிருந்து வா, மரித்த உடல்களுக்குள் மூச்சுக் காற்றை ஊது! அவர்கள் மீண்டும் உயிர்பெறட்டும்!’”
10 எனவே நான் கர்த்தருக்காகக் காற்றிடம் அவர் சொன்னதுபோன்று பேசினேன். மரித்த உடல்களுக்குள் ஆவி புகுந்தது. அவர்கள் உயிர்பெற்று எழுந்து நின்றார்கள். அவர்கள் எண்ணிக்கையில் மிகமிக அதிகமான பெருஞ்சேனையைப் போன்று நின்றார்கள்!
11 பிறகு, எனது கர்த்தராகிய ஆண்டவர் என்னிடம் கூறினார்: “மனுபுத்திரனே, இவ்வெலும்புகள் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருமே, இஸ்ரவேல் ஜனங்கள் சொல்கிறார்கள்: ‘எங்கள் எலும்புகள் காய்ந்துவிட்டன. எங்கள் நம்பிக்கை போய்விட்டது. நாங்கள் முழுமையாக அழிக்கப்பட்டிருக்கிறோம்!’
12 எனவே, எனக்காக அவர்களிடம் பேசு, கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார் என்று சொல்: ‘என் ஜனங்களே, நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை வெளியே கொண்டு வருவேன்! பின்னர் உங்களை நான் இஸ்ரவேல் நிலத்திற்குக் கொண்டு வருவேன்.
13 என் ஜனங்களே, நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை வெளியே கொண்டு வருவேன். பிறகு, நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
14 நான் உங்களில் எனது ஆவியை வைப்பேன். நீங்கள் மீண்டும் உயிர் பெறுவீர்கள். பின்னர் நான் உங்களை உங்களது சொந்த நாட்டிற்கு வழிநடத்திச்செல்வேன். பிறகு, நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். நான் இவற்றைச் சொன்னேன் என்பதையும் இவை நடக்கும்படிச் செய்வேன் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.’” கர்த்தர் அவற்றைச் சொன்னார்.
15 கர்த்தருடைய வார்த்தை மீண்டும் என்னிடம் வந்தது. அவர் சொன்னார்:
16 “மனுபுத்திரனே, ஒரு கோலை எடுத்து இதனை எழுதிவை: ‘இந்த கோல் யூதாவுக்கும் அதன் நண்பர்களான இஸ்ரவேல் ஜனங்களுக்கும் உரியது’ பின்னர் இன்னொரு கோலை எடுத்து இதனை எழுதிவை. ‘இந்தக் கோல் யோசேப்புக்கும் அவன் நண்பர்களாகிய இஸ்ரவேல் ஜனங்களுக்கும் சொந்தம். அதனுடைய பெயர்: “எப்பிராயீமின் கோல்.”’
17 பின்னர் இரண்டு கோல்களையும் ஒன்று சேர்த்துவிடு. உன் கையில் இரண்டும் ஒன்றாக இருக்கும்.
18 “அதன் பொருள் என்னவென்று விளக்கும்படி உன் ஜனங்கள் உன்னிடம் கேட்பார்கள்.
19 கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார் என்று அவர்களிடம் சொல்: ‘நான் எப்பிராயீம் கையிலும் அவன் நண்பர்களாகிய இஸ்ரவேல் ஜனங்கள் கையிலும் இருக்கும் யோசேப்பின் கோலை எடுத்து, அக்கோலை யூதாவின் கோலோடு சேர்த்து அவற்றை ஒரே கோலாக்குவேன். என் கையில் அவை ஒரே கோலாக இருக்கும்!’
20 “அக்கோல்களை உன் கையில் அவர்களுக்கு முன்பாகப் பிடி. நீ அக்கோல்களில் அப்பெயர்களை எழுதினாய்.
21 கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார் என்று ஜனங்களிடம் சொல்: ‘நான் இஸ்ரவேல் ஜனங்களை அவர்கள் சென்ற நாடுகளிலிருந்து அழைத்து வருவேன். நான் அவர்களைச் சுற்றிலுமுள்ள நாடுகளிலிருந்து சேகரித்து அவர்களது சொந்த நாட்டிற்குக் கொண்டு வருவேன்.
22 நான் அவர்களை மலைகளின் தேசமாகிய இஸ்ரவேலில் ஒரே நாடாக்குவேன். அவர்கள் அனைவருக்கும் ஒரே அரசன் இருப்பான். அவர்கள் இரு நாட்டினராக இருக்கமாட்டார்கள். அவர்கள் இனிமேல் இரண்டு அரசுகளாக இருக்கமாட்டார்கள்.
23 அவர்கள் இனிமேல் அருவருப்பான சிலைகளையும், விக்கிரங்களையும் வணங்கித் தங்களைத் தீட்டாக்கிக் கொள்ள மாட்டார்கள். அல்லது, வேறு குற்றங்களையும் செய்யமாட்டார்கள். ஆனால் நான் அவர்கள் பாவம் செய்த எல்லா இடங்களிலிருந்தும் அவர்களைக் காப்பாற்றுவேன். நான் அவர்களைக் கழுவிச் சுத்த மாக்குவேன். அவர்கள் எனது ஜனங்களாக இருப்பார்கள். நான் அவர்களின் தேவனாக இருப்பேன்.
24 “‘அவர்களுக்கு எனது தாசனாகிய தாவீது அரசனாக இருப்பான். அவர்கள் அனைவருக்கும் ஒரே மேய்ப்பன் இருப்பான். அவர்கள் எனது நியாயங்களில் நடந்து என் கட்டளைகளைக் கடைபிடிப்பார்கள். அவர்கள் நான் சொன்னவற்றின்படியே நடப்பார்கள்.
25 நான் எனது தாசனாகிய யாக்கோபுக்குக் கொடுத்த நாட்டிலேயே அவர்கள் வாழ்வார்கள். உங்கள் முற்பிதாக்கள் அந்த இடத்தில் வாழ்ந்தார்கள். என் ஜனங்களும் அங்கே வாழ்வார்கள். அவர்களும் அவர்களது பிள்ளைகளும் அவர்களது பேரப்பிள்ளைகளும் அங்கே என்றென்றும் வாழ்வார்கள். எனது தாசனாகிய தாவீது என்றென்றும் அவர்களின் தலைவனாயிருப்பான்.
26 நான் அவர்களோடு ஒரு சமாதான உடன்படிக்கையைச் செய்துகொள்வேன். இந்த உடன்படிக்கை என்றென்றும் தொடர்ந்து இருக்கும். நான் அவர்களது நாட்டை அவர்களிடம் கொடுக்க ஒப்புக்கொள்கிறேன். நான் அவர்கள் மேலும் மேலும் பெருக ஒப்புக்கொண்டேன். நான் எனது பரிசுத்தமான இடத்தை அங்கே அவர்களுடன் என்றென்றும் வைக்க ஒப்புக்கொண்டேன்.
27 என் பரிசுத்தமான கூடாரம் அவர்களோடு இருக்கும். ஆம், நான் அவர்களது தேவனாக இருப்பேன். அவர்கள் எனது ஜனங்களாக இருப்பார்கள்.
28 மற்ற நாடுகளும் நானே கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள். எனது பரிசுத்தமான இடத்தினை இஸ்ரவேலர்களிடம் என்றென்றும் இருக்கச் செய்வதன் மூலம் அவர்களை எனது சிறப்புக்குரிய ஜனங்களாக்கினேன் என்பதை அவர்கள் அறிவார்கள்.’”
Ezekiel 37 ERV IRV TRV