Deuteronomy 5 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 மோசே இஸ்ரயேலர் அனைவரையும் வரவழைத்துக் கூறியதாவது: "இஸ்ரயேலரே, உங்கள் காதுகள் கேட்க நான் இன்று கூறப்போகும் நியமங்களையும் முறைமைகளையும் கேளுங்கள். அவைகளைக் கற்று, கடைப்பிடிப்பதில் கருத்தாயிருங்கள்.2 கடவுளாகிய ஆண்டவர் ஓரேபில் நம்மோடு ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார்.3 நம் மூதாதையரோடு ஆண்டவர் இது போன்ற உடன்படிக்கையைச் செய்து கொள்ளவில்லை. மாறாக, நம்மோடு, ஆம் இன்று, இங்கு உயிரோடிருக்கும் நம் அனைவரோடும் செய்து கொண்டார்.4 மலையில் நெருப்பின் நடுவிலிருந்து ஆண்டவர் உங்களோடு நேருக்கு நேர் பேசினார்.5 ஆண்டவரின் வாக்கை உங்களுக்கு அறிவிக்க நானே அவ்வேளையில் ஆண்டவருக்கும் உங்களுக்கும் இடையே நின்றேன். ஏனெனில், நீங்கள் நெருப்பைக் கண்டு அஞ்சினீர்கள்; மலைமீதும் ஏறவில்லை. அப்பொழுது அவர் கூறியது:6 உன் கடவுளாகிய ஆண்டவர் நானே. அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து உன்னைப் புறப்படச் செய்தவர் நானே.7 என்னைத் தவிர வேறு கடவுள் உனக்கு இருத்தல் ஆகாது.8 மேலே விண்ணுலகிலும், கீழே மண்ணுலகிலும், மண்ணுலகின் கீழுள்ள நீர்த்திரளிலும் உள்ள எந்த உருவத்திலேனும் உனக்கென நீ சிலையைச் செய்யாதே.9 நீ அவைகளை வழிபடவோ அவற்றுக்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில், நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத இறைவன்; என்னை வெறுக்கும் மூதாதையரின் தீச்செயலுக்காக மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் பிள்ளைகளைத் தண்டிப்பவன்.10 மாறாக, என்மீது அன்பு கூர்ந்து என் கட்டளைகளைக் கடைப்பிடிப்போர்க்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுபவன்.11 உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே. ஏனெனில், தம் பெயரை வீணாகப் பயன்படுத்துபவனை ஆண்டவர் தண்டியாது விடார்.12 உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கட்டளையிட்டபடி ஓய்வுநாளைப் புனிதமாகக் கடைப்பிடி.13 ஆறு நாள்கள் நீ உழைத்து உன் அனைத்து வேலைகளையும் செய்வாய்.14 ஏழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவருக்கான ஓய்வுநாள். எனவே, அன்று நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும், மாடு, கழுதை மற்றெல்லாக் கால்நடைகளும், உன் வாயில்களுக்குள் இருக்கும் அந்நியனும் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம். நீ ஓய்வெடுப்பதுபோல் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும் ஓய்வெடுக்கட்டும்.15 எகிப்து நாட்டில் நீ அடிமையாய் இருந்தாய் என்பதையும், உன் கடவுளாகிய ஆண்டவரே தம் வலிய கரத்தாலும் ஓங்கிய புயத்தாலும் உன்னை அங்கிருந்து கூட்டி வந்தார் என்பதையும் நினைவில் கொள். ஆதலால், ஓய்வுநாளைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கட்டளையிட்டார்.⒫16 உன் தந்தையையும் தாயையும் மதித்து நட இதனால் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு அளிக்கும் நாட்டில் நீ நெடுநாள் நலமுடன் வாழ்வாய். உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு இடும் கட்டளை இதுவே.⒫17 கொலை செய்யாதே.18 விபசாரம் செய்யாதே.19 களவு செய்யாதே.20 பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே.⒫21 பிறர் மனைவியைக் காமுறாதே! பிறர் வீடு, நிலம், அடிமை, அடிமைப்பெண், மாடு கழுதை அல்லது பிறர்க்குரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே.⒫22 இவ்வார்த்தைகளை ஆண்டவர், மலைமேல் நெருப்பு, மேகம், காரிருள் நடுவிலிருந்து, உரத்தக்குரலில் உங்கள் சபையோர் எல்லோரிடமும் பேசினார். மேலும், வேறு எதையும் கூட்டாமல் அவர் அவற்றை இரு கற்பலகைகளில் எழுதி என்னிடம் தந்தார்.23 மலையில் தீப்பற்றிஎரியும் பொழுதே, இருளின் நடுவிலிருந்து வந்த குரலொலியை நீங்கள் கேட்டதும், நீங்கள் எல்லோரும், உங்கள் குலத்தலைவர்களும் உங்கள் பெரியோர்களும் என்னை அணுகினீர்கள்.24 நீங்கள் என்னிடம் கூறியது: ‘இதோ, நம் கடவுளாகிய ஆண்டவர் அவர்தம் மாட்சியையும் ஆற்றலையும் நமக்குக் காண்பித்துள்ளார். மேலும், நெருப்பின் நடுவிலிருந்து வந்த அவரது குரலையும் நாம் கேட்டோம். கடவுள் மனிதரோடு பேசியதையும், ஆயினும் அம்மனிதன் உயிரோடிருப்பதையும் இன்று கண்டோம்.25 அப்படியானால், இப்பொழுது நாங்கள் ஏன் சாகவேண்டும்? ஏனெனில், இப்பெரும் நெருப்பு எங்களை விழுங்குமே! நம் கடவுளாகிய ஆண்டவரின் குரலை இனியும் கேட்போமாகில் நாங்கள் மடிவோம்.26 நெருப்பிலிருந்து பேசுகின்ற வாழும் கடவுளின் குரலை நாங்கள் கேட்டும் உயிரோடு இருப்பதுபோல், கடவுளது குரலைக் கேட்டும் உயிரோடு இருக்கின்ற மானிடன் எவனாவது உண்டா?27 நீரே அருகில் சென்று, நம் கடவுளாகிய ஆண்டவர் கூறப்போவது அனைத்தையும் கேட்டு, அவர் கூறுவது அனைத்தையும் நீரே எமக்குச் சொல்லும், நாங்கள் கேட்டு அதன்படியே செய்வோம்.’⒫28 நீங்கள் என்னிடம் சொன்ன வார்த்தைகளை ஆண்டவர் கேட்டு, அவர் என்னிடம் கூறியது: ‘இந்த மக்கள் உன்னிடம் சொன்ன வார்த்தைகளைக் கேட்டேன்; அவர்கள் சொல்வது சரியே.29 அவர்களும், அவர்கள் மக்களும் என்றென்றும் நலமாயிருக்குமாறு எந்நாளும் எனக்கு அஞ்சி நடந்து, என் கட்டளைகள் அனைத்தையும் கடைப்பிடிக்கும் இத்தகைய உள்ளம் அவர்களுக்கு இருந்தால் எவ்வளவோ நல்லது!30 நீ சென்று ‘உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிப் போங்கள்’ என அவர்களுக்குச் சொல்.31 நீயோ இங்கே என்னோடு இரு. எல்லாக் கட்டளைகளையும், நியமங்களையும், முறைமைகளையும் நான் உனக்குச் சொல்வேன். அவர்களுக்கு நான் உடைமையாகக் கொடுக்கப்போகும் நாட்டில் அவர்கள் கடைப்பிடிக்குமாறு அவற்றை நீ கற்றுக் கொடு.’⒫32 ஆகவே, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கட்டளையிட்டவற்றை நிறைவேற்றுவதில் கருத்தாயிருங்கள். வலமோ இடமோ விலகி நடக்கவேண்டாம்.33 மாறாக, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கட்டளையிட்டுக் கூறிய எல்லா வழிகளிலும் நடங்கள்; அப்பொழுது வாழ்வீர்கள், அது உங்களுக்கு நலமாகும். நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளப்போகும் நாட்டிலும் நெடுநாள் வாழ்வீர்கள்.Deuteronomy 5 ERV IRV TRV