1 “மற்ற இன ஜனங்களை அழித்துவிட்டு உங்கள் தேவனாகிய கர்த்தர் அவர்களது தேசத்தை உங்களுக்குத் தருகின்றார். அவர்கள் வாழ்ந்த இடங்களிலேயே நீங்கள் வாழப்போகிறீர்கள். நீங்கள் அவர்களது நகரங்களையும், வீடுகளையும் எடுத்துக்கொண்டு அனுபவிக்கப் போகிறீர்கள். அப்படி நடக்கும்போது,
2 நீங்கள் அந்த தேசத்தை மூன்று பிரிவுகளாக பிரித்துக்கொள்ள வேண்டும். பின் ஒவ்வொரு பிரிவிலும் எல்லாருக்கும் மையமான ஒரு நகரத்தைத் தேர்ந்தெடுத்து, அந்த நகரங்களுக்குச் சாலைகளையும், வீதிகளையும் அமைத்துக்கொள்ளுங்கள். அப்போது தற்செயலாக மற்றவர்களைக் கொலை செய்திடும் நபர் பாதுகாப்பாய் அந்நகருக்குள் ஓடிப்போகலாம்.
4 “கொலை செய்தவன் எவனும் அம்மூன்று நகரங்களில் ஒன்றில் ஓடிப்போய் இருக்க வேண்டுவதற்கான நியாயம் என்னவென்றால்: அந்த நபர் மற்றவனைக் கொன்றது எதிர்ப்பாராத விதமாக நடந்திருக்க வேண்டும். தான் மனதறியாது எவ்வித முன் வெறுப்பும் இல்லாது கொன்றிருக்க வேண்டும்.
5 இங்கு உதாரணமாகச் சொன்னால், ஒருவன் மற்றவனோடு விறகு வெட்ட காட்டிற்குச் சென்று மரத்தை வெட்டும்படி தன் கையிலிருக்கும் கோடரியை ஓங்கும்போது, அதிலிருந்த இரும்பானது கைப்பிடியை விட்டு கழன்று மற்றவன்மேல் விழுந்ததினால் அவன் மரித்துப்போனால், அந்தக் கோடரியை ஓங்கியவன், அம்மூன்று பட்டணங்கள் ஒன்றில் ஓடிப்போய் பாதுகாப்படைந்து கொள்ளலாம்.
6 ஆனால், இந்தப் பட்டணம் வெகு தூரத்தில் இருப்பதினால் போதுமான வேகத்திற்கு அவனால் ஓடமுடியாமல் போகலாம். அப்போது கொலையுண்டவனின் நெருங்கிய உறவினன் பழிவாங்கும் நோக்கத்தோடு அவனை விரட்டக்கூடும். அவன் கோபாவேசம் நிறைந்தவனாய் கொலை செய்தவனை நெருங்கியவுடன் அவனைக் கொன்று போடக்கூடும். இப்படி அவன் மரிக்க வேண்டியவனல்ல. ஏனெனில், அவன் முன் விரோதமின்றி கொலை செய்தவனாவான்.
7 இந்த மூன்று நகரங்களும் அவைகளைச் சுற்றியுள்ள ஜனங்களுக்கு அருகாமையில் இருக்க வேண்டும். அதனால்தான், நீங்கள் விசேஷமான அந்த மூன்று நகரங்களைத் தேர்ந்தெடுக்கக் கட்டளையிட்டேன்.
8 “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்கள் பிதாக்களுக்கு வாக்களித்தபடி உங்கள் தேசத்தை விரிவுபடுத்தி, உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த வாக்கின்படி உங்களுக்கு இந்த தேசம் முழுவதையும் தருவார்.
9 தேவன் இதை உங்களுக்குச் செய்ய வேண்டுமென்றால், நான் இன்று உங்களுக்குத் தருகின்ற கட்டளைகளுக்கெல்லாம் நீங்கள் கீழ்ப்படிந்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் மீது நீங்கள் அன்பு செலுத்தும்பொருட்டு அவர் விரும்பியபடி நீங்கள் வாழவேண்டும். பின் கர்த்தர், உங்கள் தேசத்தை விரிவாக்கித் தருவதோடு, உங்கள் அடைக்கலத்திற்காக மூன்று பட்டணங்களை நீங்கள் அமைத்துக்கொள்ளச் செய்வார்.
10 பின் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு வழங்குகின்ற தேசத்தில் கள்ளம் கபடில்லாத அப்பாவி ஜனங்கள் கொல்லப்படமாட்டார்கள். அது மட்டுமின்றி, உங்கள் மீது எவ்வித கொலைக் குற்றமும் சுமத்தப்படாது.
11 “ஒருவன் வேறொருவன் மீது வெறுப் படைந்து அவனைப் பழிவாங்கும் விரோதத்தோடு காத்திருந்து அவன் மரிக்கும்படி அடித்துவிட்டு, இந்த நகரங்களுக்குள் ஒன்றில் ஓடிப்போய், தன்னைக் காத்துக்கொள்வான் என்றால்,
12 அந்த நகரத்தின் மூப்பர்கள் ஆள் அனுப்பி, அவன் தன்னைப் பாதுகாத்துக்கொண்டிருக்கும் வீட்டிற்குச் சென்று அவனைக் கொண்டுவந்து, அவனைப் பழிவாங்கத் துடிக்கும் மரித்தவனின் உறவினர்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும். கொலை செய்தவன் கண்டிப்பாக மரிக்க வேண்டும்.
13 நீங்கள் அவர்களுக்காக வருத்தப்படாதீர்கள். அவன் ஏதுமறியாத ஒரு அப்பாவியை கொன்ற குற்றவாளி. நீங்கள் அந்தக் குற்றத்தை இஸ்ரவேலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும், அப்போது, எல்லாம் உங்களுக்கு நல்லதாக அமையும்.
14 “உங்களது அயலாரின் சொத்திற்கான எல்லைக் கல்லை நீங்கள் நகர்த்த கூடாது. உங்களது தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தந்த நிலத்தில் உங்களது முன்னோர் இட்ட எல்லைக் கோடுகளையே நீங்களும், அவரவரது சொத்திற்கான எல்லைக் கற்களாக அடையாளமிட்டு வையுங்கள்.
15 “சட்டத்திற்கு எதிராக ஏதாவது குற்றத்தைச் செய்த நபரை, ஒரே ஒரு சாட்சியை வைத்து ‘அவன் குற்றவாளி’ என்று நிரூபிக்காதீர்கள். அவன் அக்குற்றத்தைச் செய்தானா இல்லையா என்பதை, இரண்டு அல்லது மூன்று சாட்சிகளை வைத்து நிரூபிக்க வேண்டும்.
16 “ஒருவன் குற்றத்தைச் செய்தான் என்று மற்றொருவன் அவன் மேல் பொய் சொல்லக்கூடும்.
17 பின், அவ்விருவரும் கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்று நீதியைப் பெற, அங்கு பணியில் இருக்கும் ஆசாரியர் மற்றும் நீதிபதிகளிடம் நிற்கவேண்டும்.
18 நீதிபதிகள், நன்றாக விசாரிப்பதன் மூலம் அந்த நபருக்கு எதிராக பொய்சாட்சி கூறியதாகக் கண்டறிந்தால், அவன் பொய்சாட்சி என்று நிரூபிக்கப்பட்டால்,
19 நீங்கள் அவனைத் தண்டிக்கவேண்டும். அவன் மற்றவர்களுக்குச் செய்ய விரும்பியதையே நீங்கள் அவனுக்கு செய்யவேண்டும். இந்த வித மாக, இந்தத் தீமையை உங்கள் சமுதாயத்திலிருந்து அகற்றிவிட வேண்டும்.
20 மற்ற ஜனங்கள் அனைவரும் இதைக் கேட்டும் கண்டும் பயப்படுவார்கள். அதுமட்டுமின்றி, மீண்டும் இத்தகைய தீயச் செயலைச் செய்யாதிருப்பார்கள்.
21 “குற்றங்களுக்குத் தகுந்தாற்போல் தண்டனைகளும் கடுமையாக இருக்கவேண்டும். ஒருவன் செய்த குற்றத்திற்காக அவனைத் தண்டிக்கின்றபோது, அதற்காக நீங்கள் வருத்தம் கொள்ளாதீர்கள். ஒருவன் ஒரு உயிரை எடுத்தான் என்றால் அவன் கண்டிப்பாக அவனது உயிரை இழப்பான். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால், என்பதே சட்டமாகும்.
Deuteronomy 19 ERV IRV TRV