1 தாவீது ஒலிவமலை உச்சியின் மேல் கொஞ்சதூரம் நடந்துப்போனான். அங்கு மேவிபோசேத்தின் பணியாளாகிய சீபா தாவீதைச் சந்தித்தான். சீபாவிடம் சேணம் கட்டப்பட்ட இரண்டு கழுதைகள் இருந்தன. கழுதைகள் 200 ரொட்டிகளையும், 100 குலைகள் உலர்ந்த திராட்சைகளையும், 100 கோடைக்காலக் கனிகளையும் ஒரு துருத்தி திராட்சைரத்தையும் சுமந்து வந்தன.
2 தாவீது அரசன் சீபாவைப் பார்த்து, “இவைகளெல்லாம் எதற்கு?” என்று கேட்டான். சீபா பதிலாக, “இந்தக் கழுதைகள் அரசனின் குடும்பத்தினர் செல்வதற்காகவும் ரொட்டியும் பழங்களும் அதிகாரிகளின் உணவிற்காகவும், திராட்சைரசம் பாலைவனத்தில் நடந்து செல்வோர் சோர்வுறும் போது குடிப்பதற்காகவும் பயன்படும்” என்றான்.
3 அரசன், “மேவிபோசேத் எங்கே?” என்று கேட்டான். சீபா அரசனிடம், “மேவிபோசேத் எருசலேமில் இருக்கிறான் ஏனென்றால் அவன் ‘இன்று என் பாட்டனாரின் அரசை இஸ்ரவலர்கள் எனக்குத் திருப்பிக் கொடுப்பார்கள் என நினைக்கிறான்’” என்று கூறினான்.
4 பின்னர் அரசன் சீபாவிடம், “சரி மேவிபோசேத்திற்கு உரியவற்றையெல்லாம் இப்போது நான் உனக்குத் தருகிறேன்” என்றான். சீபா, “நான் உங்களை வணங்குகிறேன். நான் எப்போதுமே உங்கள் தயை பெறுவேன் எனக் கருதுகிறேன்” என்றான்.
5 தாவீது பகூரிமுக்கு வந்தான். சவுலின் குடும்பத்தைச் சேர்ந்த மனிதன் ஒருவன் பகூரிமுலிருந்து அங்கு வந்தான். இம்மனிதன் கேராவின் மகனாகிய சீமேயி. சீமேயி தாவீதிடம் தீயவற்றைப் பேசியவனாக வந்தான். அவன் மீண்டும் மீண்டும் தீயனவற்றையே பேசினான்.
6 தாவீதின் மீதும் அவனது அதிகாரிகள் மீதும் சீமேயி கற்களை வீச ஆரம்பித்தான். ஆனால் மக்களும் வீரர்களும் தாவீதைச் சூழ்ந்து நின்று அவனைக் காத்தனர்.
7 சீமேயி தாவீதை சபித்தான். அவன், “கொலைகாரனே! வெளியே போ. வெளியே போ.
8 கர்த்தர் உன்னைத் தண்டிக்கிறார். ஏனெனில், நீ சவுலின் குடும்பத்தாரைக் கொலைச் செய்தாய். நீ சவுலின் இடத்தில் அரசனாக அமர்ந்தாய். ஆனால் இப்போது கர்த்தர் அரசாட்சியை உனது மகனான அப்சலோமுக்குக் கொடுத்துள்ளார். இப்போது அதே தீமைகள் உனக்கு நேர்கின்றன. ஏனெனில் நீ ஒரு கொலைக்காரன்” என்றான்.
9 செருயாவின் மகனாகிய அபிசாய் அரசனை நோக்கி, “எனது அரசனாகிய ஆண்டவரே, ஏன் இந்த மரித்த நாய் உம்மை சபிக்க வேண்டும்? நான் சீமேயியின் தலையை வெட்டப் போகிறேன்” என்றான்.
10 அதற்கு அரசன், “நான் என்ன செய்ய முடியும், செருயாவின் ஜனங்களே? சீமேயி என்னை சபிக்கிறான். ஆனால் அவன் என்னை சபிக்குமாறு அவனிடம் கர்த்தர் கூறியுள்ளார்” என்றான்.
11 தாவீது அபிசாயிடமும் அவனது பணியாட்களிடமும், “இங்கே பாருங்கள், என் சொந்த மகனான அப்சலோம் என்னைக் கொல்ல முயல்கிறான். சீமேயி என்ற பென்யமீன் கோத்திரத்திலிருந்து வந்தவன் என்னைக் கொல்ல அதிக உரிமையுடைவன். அவன் அதைச் செய்யட்டும். அவன் தீய வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டே இருக்கட்டும். கர்த்தர் அவ்வாறு செய்ய அவனிடம் கூறியுள்ளார்.
12 ஒரு வேளை கர்த்தர் தீய காரியங்கள் எனக்கு நேரிடுவதைப் பார்ப்பார். பின்பு கர்த்தர் சீமேயி சொல்லும் தீய காரியங்கள் ஒவ்வொன்றிற்கும் பதிலாக நல்லதைச் செய்யலாம்” என்றான்.
13 இவ்வாறு தாவீதும் அவனுடைய ஆட்களும் பாதையில் தொடர்ந்து நடந்துச் சென்றனர். ஆனால் சீமேயி தாவீதைப் பின் தொடர்ந்தான். மலையோரமுள்ள மறுபுறத்துப் பாதையில் சிமேயி நடந்தான். சீமேயி தீயவற்றைச் சொல்லிக்கொண்டே நடந்தான். சீமேயி கற்களையும் அழுக்கையுங்கூட தாவீதின் மீது எறிந்தான்.
14 தாவீது அரசனும் அவனது ஆட்களும் பகூரிம்முக்கு வந்தனர். அரசனும் அவனது ஆட்களும் சோர்வுற்றிருந்தனர். ஆகையால் பகூரிமில் ஓய்வெடுத்தனர்.
15 அப்சலோம், அகித்தோப்பேல் மற்றும் இஸ்ரவேலர் அனைவரும் எருசலேமுக்கு வந்தனர்.
16 தாவீதின் நண்பனாகிய அற்கியனாகிய ஊசாய் அப்சலோமிடம் வந்தான். ஊசாய் அப்சலோமிடம், “அரசரே! நீண்டகாலம் வாழ்க” என்றான்.
17 அப்சலோம் பதிலாக, “நீ உன் நண்பனான தாவீதுக்கு உண்மையாக இருக்கவில்லையா? எருசலேமைவிட்டு உன் நண்பனோடு ஏன் போகவில்லை?” என்று கூறினான்.
18 அதற்கு ஊசாய், “கர்த்தர் தேர்ந்தெடுக்கும் ஆளைச் சார்ந்தவன் நான். இந்த ஜனங்களும் இஸ்ரவேலரும் உம்மைத் தேர்ந்தெடுத்தனர். நான் உம்மோடு தங்குவேன்.
19 முன்பு நான் உமது தந்தைக்குப் பணியாற்றியிருக்கிறேன். ஆகவே இப்போது நான் தாவீதின் மகனுக்குப் பணிசெய்யவேண்டும். எனவே உமக்குப் பணி செய்வேன்” என்றான்.
20 அப்சலோம் அகித்தோப்பேலிடம், “நாம் இப்போது என்ன செய்யவேண்டுமென்று சொல்லுங்கள்” என்றான்.
21 அகித்தோப்பேல் அப்சலோமிடம், “உங்கள் தந்தையார் அவரது மனைவியரில் சிலரை இங்கிருக்கும் வீட்டைக் கவனிக்க விட்டிருந்தார். போய், அவர்களோடு பாலின உறவுக்கொள்ளுங்கள். பின்பு எல்லா இஸ்ரவேலரும் உங்கள் தந்தை உங்களை வெறுப்பதை அறிவார்கள். உங்கள் ஜனங்கள் உங்களுக்கு அதிகமான ஆதரவு காட்ட ஊக்கமடைவார்கள்” என்றான்.
22 பின்பு அவர்கள் அப்சலோமிற்காக வீட்டின் மாடியின் மீது ஒரு கூடாரத்தை அமைத்தனர். அப்சலோம் தன் தந்தையின் மனைவியரோடு பாலின உறவுக்கொண்டான். இஸ்ரவேலர் அதனைப் பார்த்தனர்.
23 அந்நேரத்தில் அகித்தோப்பேலின் உபதேசம் தாவீதுக்கும் அப்சலோமுக்கும் மிக முக்கியமானதாக இருந்தது. தேவன் மனிதனுக்குச் சொன்ன வாக்கைப்போன்று முக்கியமானதாக இருந்தது.
2 Samuel 16 ERV IRV TRV