2 Chronicles 33 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 மனாசே அரசனானபோது அவனுக்கு வயது பன்னிரண்டு; அவன் எருசலேமில் ஐம்பத்தைந்து ஆண்டுகள் ஆட்சி செய்தான்.2 இஸ்ரயேல் மக்களுக்கு முன்பாக ஆண்டவரால் துரத்தியடிக்கப்பட்ட நாடுகளின் அருவருக்கத்தக்க செயல்களைப் பின்பற்றி, அவனும் ஆண்டவரின் பார்வையில் தீமையானதையே செய்தான்.3 ஏனெனில், அவன் தன் தந்தை எசேக்கியா உடைத்தெறிந்த பலிபீடங்களை மீண்டும் கட்டியெழுப்பினான்; பாகால்களுக்குப் பலிபீடங்களையும், அசேராக் கம்பங்களையும் நிறுவி, வான்படைகளைப் பணிந்து தொழுதான்.4 “எனது பெயர் எருசலேமில் என்றென்றும் விளங்கும்” என்று சொன்ன ஆண்டவரின் இல்லத்தில் அவன் பலிபீடங்களை எழுப்பினான்.5 ஆண்டவரது இல்லத்தின் இரு மண்டபங்களிலும் வான்படைகளுக்கே பலிபீடங்களைக் கட்டினான்.6 பென்இன்னோம் பள்ளத்தாக்கில் அவன் தன் புதல்வரை நெருப்பில் சுட்டெரித்துப் பலியாக்கினான்; சகுனம் பார்த்து, குறிகேட்டு, பில்லி சூனியங்களைக் கடைப்பிடித்து, மந்திரவாதிகளுக்கும் மாயவித்தைக்காரர்களுக்கும் புகலிடமளித்து, ஆண்டவரின் திருமுன் மிகவும் தீமையானதைச் செய்து அவருக்குச் சினத்தை உண்டாக்கினான்.7 கடவுள் தாவீதிடமும் அவர் மகன் சாலமோனிடமும், “இஸ்ரயேலின் குலங்களில் நான் தேர்ந்தெடுத்துள்ள எருசலேமில் இருக்கும் இந்தக் கோவிலில் எனது பெயரை என்றென்றும் நிலைபெறச் செய்வேன்” என்றும்,8 “மோசே மூலமாக நான் அளித்துள்ள எல்லாச் சட்டங்களையும் நியமங்களையும் கட்டளைகளையும் இஸ்ரயேலர் சரியாய்க் கடைப்பிடித்து வந்தால், நான் அவர்களின் மூதாதையர்க்கு அளித்திருந்த நாட்டிலிருந்து அவர்களை வெளியேற்றமாட்டேன்” என்றும் கூறியிருந்தார்; அந்தக் கடவுளின் இல்லத்தில் மனாசே தான் செதுக்கிய ஒரு சிலையை வைத்தான்.9 இஸ்ரயேல் மக்களின் முன்பாக ஆண்டவர் அழித்த நாடுகள் செய்த தீமைகளைவிட யூதாவும், எருசலேம் வாழ் மக்களும் மிகுந்த தீமை செய்யவும் நெறி தவறவும் மனாசே காரணமாயிருந்தான்.10 ஆண்டவர் மனாசேயுடனும் மக்களுடனும் பேசிய போதிலும், அவர்கள் அதற்குச் செவிகொடுக்கவில்லை.11 ஆதலால், ஆண்டவர் அசீரிய மன்னனின் படைத்தலைவர்களை அவர்களுக்கு எதிராக வரச் செய்தார்; அவர்கள் மனாசேயைச் சிறைப்பிடித்து, கொக்கிகள் இட்டு, வெண்கலச் சங்கிலியால் கட்டி பாபிலோனுக்கு இழுத்துச் சென்றனர்.12 அங்கே அவன் துன்புறுத்தப்பட்டபோது தன் கடவுளாம் ஆண்டவரை நோக்கி மன்றாடி, தன் மூதாதையரின் கடவுள் முன் மிகுந்த வருத்தமுடன் தன்னையே தாழ்த்தினான்.13 ஆண்டவர், அவன் மீண்டும் தம்மைக் கெஞ்சி மன்றாடியதால், அவனது வேண்டுதலைக் கேட்டார்; அதனால் எருசலேமுக்கும் நாட்டுக்கும் அவன் திரும்பி வருமாறு செய்தார். இதனால், ஆண்டவரே கடவுள் என்று மனாசே அறிந்து கொண்டான்.⒫14 இதன்பின்னர், தாவீதின் நகரில் கீகோன் பள்ளத்தாக்கின் மேற்புறம் தொடங்கி, மீன்வாயிலின் தொடக்கம் வரையிலும், வெளிப்புற மதிலை அவன் எழுப்பினான். இம்மதில் ஓபேலைச் சுற்றிலும்உயர்ந்திருக்கச் செய்தான். யூதாவிலுள்ள அரண்சூழ் நகர்களில் எல்லாம் படைத்தலைவர்களை நியமித்தான்.15 மேலும், வேற்றுத் தெய்வங்களையும் சிலைகளையும் ஆண்டவர் இல்லத்திலிருந்து அகற்றினான்; ஆண்டவரின் இல்ல மலையிலும், எருசலேமிலும் தான் கட்டிய பலிபீடங்களைத் தகர்த்து, அவற்றை நகருக்கு வெளியே வீசியெறிந்தான்.16 அவன் ஆண்டவரின் பலிபீடத்தை மீண்டும் கட்டி, அதனில் நல்லுறவுப் பலியையும் நன்றிப் பலியையும் செலுத்தினான்; இஸ்ரயேலின் கடவுளாம் ஆண்டவரை வழிபடுமாறு யூதாவுக்குக் கட்டளையிட்டான்.17 ஆயினும், மக்கள் தொழுகை மேடுகளிலேயே — தங்கள் கடவுளாம் ஆண்டவருக்காக மட்டும் — பலியிட்டு வந்தனர்.18 மனாசேயின் பிற செயல்களும், அவன் கடவுளுக்கு எழுப்பிய வேண்டுதலும், இஸ்ரயேலின் கடவுளாம் ஆண்டவர் பெயரால் திருக்காட்சியாளர் உரைத்த வாக்குகள் ஆகிய யாவும் இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன.19 அவனது மன்றாட்டு, அதற்கு ஆண்டவர் செவிகொடுத்த பாங்கு, அவன் பாவங்கள், பற்றுறுதியற்ற தன்மை ஆகியவை பற்றியும், அவன் தொழுகை மேடுகளையும் அசேராக் கம்பங்களையும் சிலைகளையும் நிறுவிய இடங்கள் பற்றியும் ஓசாய் என்பவரது குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன.20 மனாசே தன் மூதாதையருடன் துயில்கொண்டு, தன் அரண்மனையிலேயே அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப்பின் அவன் மகன் ஆமோன் அரசனானான்.21 ஆமோன் ஆட்சியேற்றபோது, அவனுக்கு வயது இருபத்திரண்டு; அவன் எருசலேமில் இரண்டு ஆண்டுகளே ஆட்சி செய்தான்.22 அவன், தன் தந்தை மனாசேயைப் போல் ஆண்டவர் திருமுன் தீமையானதையே செய்தான்; தன் தந்தையால் வார்க்கப்பட்ட சிலைகளுக்கு ஆமோன் பலி நிறைவேற்றி வழிபாடு செய்து வந்தான்.23 ஆயினும், அவன் தந்தை போலன்றி, ஆண்டவர் திருமுன் தன்னையே தாழ்த்திக் கொள்ளாமல் தன் குற்றத்தை வளர்த்துக் கொண்டான்.24 அவன் அலுவலர்கள் அவனுக்கு எதிராகச் சதி செய்து, அவனது அரண்மனையிலேயே அவனைக் கொலை செய்தனர்.25 ஆனால், நாட்டுமக்கள் அரசன் ஆமோனுக்கு எதிராகச் சதிசெய்தவர் எல்லாரையும் கொன்றுவிட்டு, அவன் மகன் யோசியாவை அவனுக்குப்பதில் அரசனாக்கினர்.