2 Chronicles 16 in Tamil IRV Compare Tamil Indian Revised Version
1 ஆசா அரசாண்ட முப்பத்தாறாம் வருடத்திலே, இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு விரோதமாக வந்து, ஒருவரும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் போக்கும் வரத்துமாயிராதபடிக்கு ராமாவைக் கட்டினான்.
2 அப்பொழுது ஆசா கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவின் அரண்மனையிலும் உள்ள பொக்கிஷங்களிலிருந்து வெள்ளியும் பொன்னும் எடுத்து, தமஸ்குவில் வசிக்கிற பென்னாதாத் என்னும் சீரியாவின் ராஜாவினிடம் அனுப்பி:
3 எனக்கும் உமக்கும், என் தகப்பனுக்கும் உம்முடைய தகப்பனுக்கும் உடன்படிக்கை உண்டே; இதோ, வெள்ளியும் பொன்னும் உமக்கு அனுப்பினேன்; இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா என்னைவிட்டு விலகிப்போகும்படி நீர் வந்து, அவனோடு செய்த உடன்படிக்கையை முறித்துப்போடும் என்று சொல்லி அனுப்பினான்.
4 பென்னாதாத், ராஜாவாகிய ஆசாவுக்கு செவிகொடுத்து, தனக்கு உண்டான சேனாபதிகளை இஸ்ரவேலின் பட்டணங்களுக்கு விரோதமாக அனுப்பினான்; அவர்கள் ஈயோனையும், தாணையும், ஆபேல்மாயீமையும், நப்தலி பட்டணங்களின் அனைத்து சேமிப்புக் கிடங்குகளையும் தாக்கினார்கள்.
5 இதை பாஷா கேட்டபோது, ராமாவைக் கட்டுகிறதை நிறுத்தி, தன் வேலையைக் கைவிட்டான்.
6 அப்பொழுது ராஜாவாகிய ஆசா யூதா அனைத்தையும் கூட்டிக்கொண்டுபோய், பாஷா கட்டின ராமாவின் கற்களையும் அதின் மரங்களையும் எடுத்துவந்து, அவைகளால் கேபாவையும் மிஸ்பாவையும் கட்டினான்.
7 அக்காலத்திலே தரிசனம் காண்கிறவனாகிய அனானி யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உம்முடைய தேவனாகிய கர்த்தரைச் சார்ந்துகொள்ளாமல், சீரியாவின் ராஜாவைச் சார்ந்துகொண்டதால், சீரியா ராஜாவின் படை உமது கைக்குத் தப்பிப்போனது.
8 மிகவும் ஏராளமான இரதங்களும் குதிரை வீரருமுள்ள எத்தியோப்பியரும் லூபியரும் மகா சேனையாயிருந்தார்கள் அல்லவா? நீர் கர்த்தரைச் சார்ந்து கொண்டபோதோவெனில், அவர்களை உமது கையில் ஒப்புக்கொடுத்தாரே.
9 தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை வெளிப்படுத்த, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது; இந்தக் காரியத்தில் அறிவில்லாதவராயிருந்தீர்; ஆகையால் இதுமுதற்கொண்டு உமக்கு போர்கள் ஏற்படும் என்றான்.
10 அதனால் ஆசா தரிசனம் காண்கிறவன்மேல் கடுங்கோபங்கொண்டு அவனைக் காவலறையிலே வைத்தான்; இதைத்தவிர அக்காலத்தில் மக்களுக்குள் சிலரைக் கொடூரமாக நடப்பித்தான்.
11 ஆசாவின் ஆரம்பம்முதல் முடிவுவரையுள்ள செயல்பாடுகளெல்லாம் யூதாவையும் இஸ்ரவேலையும் சேர்ந்த ராஜாக்களின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
12 ஆசா அரசாண்ட முப்பத்தொன்பதாம் வருடத்திலே தன் கால்களில் வியாதி ஏற்பட்டு, அந்த வியாதி மிகவும் அதிகரித்தது; அவன் தன் வியாதியிலும் கர்த்தரை அல்ல, மருத்துவர்களையே தேடினான்.
13 ஆசா தான் அரசாண்ட நாற்பத்தோராம் வருடத்தில் இறந்தான்.
14 தைலக்காரர்களால் செய்யப்பட்ட கந்தவர்க்கங்களினாலும் பரிமளங்களினாலும் நிறைந்த ஒரு மெத்தையின்மேல் அவனைக் கிடத்தி, அவனுக்காக வெகு திரளான கந்தவர்க்கங்களைக் கொளுத்தின பின்பு, அவன் தாவீதின் நகரத்தில் தனக்காக வெட்டிவைத்திருந்த அவனுடைய கல்லறையிலே, அவனை அடக்கம்செய்தார்கள்.