1 அக்காலத்தில் பெலிஸ்தியர் இஸ்ரயேலுக்கு எதிராகப் போர் தொடுக்க தங்கள் படைகளை ஒன்று திரட்டினர். அப்பொழுது ஆக்கிசு தாவீதிடம், “நீரும் உம் ஆள்களும் என்னோடு போர்க்களம் வரவேண்டும் என்பதை அறிந்து கொள்ளும்” என்றார்.2 அதற்குத் தாவீது ஆக்கிசை நோக்கி, “மிக நல்லது, உம் பணியாளன் செய்யப்போவதை நீர் அறிந்து கொள்வீர்” என்றார். ஆக்கிசு தாவீதிடம், “எனக்கு என்றும் மெய்க்காப்பாளராய் இருக்கும்படி உம்மை நான் நியமிக்கிறேன்” என்று சொன்னார்.3 சாமுவேல் இறந்தார். இஸ்ரயேலர் அனைவரும் அவருக்காகத் துக்கம் கொண்டாடியபின் அவரது நகரான இராமாவில் அவரை அடக்கம் செய்தனர். சவுல் சூனியக்காரரையும் குறிசொல்பவர்களையும் நாட்டிலிருந்து துரத்தியிருந்தார்.⒫4 பெலிஸ்தியர் ஒன்று திரண்டு வந்து சூனேமில் பாளையம் இறங்கினர். சவுல் இஸ்ரயேலர் அனைவரையும் ஒன்று திரட்ட, அவர்கள் கில்போவாவில் பாளைமிறங்கினர்.5 பெலிஸ்தியரின் படையைக் கண்ட போது சவுல் அச்சம் கொண்டார்; அவருடைய உள்ளம் பெரிதும் திகிலுற்றது.6 சவுல் ஆண்டவரிடம் ஆலோசனைக் கேட்க, ஆண்டவர் கனவு மூலமோ, ஊரிம் மூலமோ அவருக்கு பதிலளிக்கவில்லை.7 பின்பு, சவுல் தம் பணியாளரிடம், “குறி சொல்லும் ஒரு பெண்ணைத் தேடி என்னிடம் அழைத்து வாருங்கள்; நான் அவளிடம் ஆலோசனைக் கேட்க வேண்டும்” என்றார். அதற்கு அவர்தம் பணியாளர்கள் அவரை நோக்கி, “இதோ ஏன்தோரில் குறி சொல்பவள் ஒருத்தி இருக்கிறாள்” என்றனர்.⒫8 சவுல் மாறுவேடமிட்டு, வேற்றுடைஅணிந்து கொண்டார். அவரும் அவருடன் இரு ஆள்களும் இரவில் புறப்பட்டு அப்பெண்ணிடம் சென்றனர். அவர் அவளை நோக்கி, ஏதாவதொரு ஆவியின் துணைகொண்டு குறிகேட்டுச் சொல். நான் பெயரிட்டுச் சொல்பவனை எனக்காக எழுப்பு, என்றார்.9 அப்பெண் அவரை நோக்கி, “சவுல் சூனியக்காரர்களையும் குறிசொல்பவர்களையும் நாட்டிலிருந்து துரத்தி விட்ட செய்தியை நீர் அறிவீர்; என்னைக் கொல்லத்தானே இப்பொழுது என் உயிருக்குக் கண்ணிவைக்கிறீர்?” என்றாள்.10 அதற்குச் சவுல், “வாழும் ஆண்டவர் மேல் ஆணை! இது குறித்து எத்தண்டனையும் உனக்கு வராது!” என்று ஆண்டவர் மேல் ஆணையிட்டுக் கூறினார்.⒫11 பின்பு, அப்பெண், “நான் உமக்காக யாரை எழுப்ப வேண்டும்?” என்று கேட்க, அவர், ‘சாமுவேலை எழுப்பு’என்று பதிலளித்தார்.12 அப்பெண்ணின் பார்வையில் சாமுவேல் பட்டவுடன் உரத்த குரலில் கதறி, “நீர் தாமே சவுல், ஏன் என்னை ஏமாற்றினீர்?” என்று சவுலை நோக்கிக் கூறினாள்.13 அதற்கு அரசர் அவளை நோக்கி, “அஞ்சாதே; நீர் பார்ப்பது என்ன?’ என்று கேட்க, அதற்கு அவள் சவுலிடம், “நிலத்திலிருந்து ஒரு தெய்வ உருவம் வெளிவருவதைக் காண்கிறேன்” என்றாள்.14 அவர் அவளிடம், “அதன் தோற்றம் என்ன?” என்று கேட்க, அவள் “முதியவர் ஒருவர் எழுந்து வருகிறார். அவர் ஒர் போர்வை அணிந்திருக்கிறார்”, என்றாள். அவர் சாமுவேல்தான் என்று சவுல் அறிந்து முகம் குப்புறத் தரையில் வீழ்ந்து வணங்கினார்.15 அப்பொழுது சாமுவேல் சவுல் நோக்கி, “என்னை எழுப்பி நீ ஏன் தொந்தரவு செய்கிறாய்?” என்று கேட்க, அதற்குச் சவுல் “நான் பெரும் இக்கட்டில் இருக்கிறேன்? ஏனெனில், பெலிஸ்தியர் எனக்கெதிராக போர் தொடுத்து வந்துள்ளனர். கடவுள் என்னை விட்டு அகன்று சென்று விட்டார்; இறைவாக்கினர் மூலமாகவோ அவர் எனக்குப் பதில் சொல்வதில்லை; ஆதலால், நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு அறிவிக்கும்படி உம்மை நான் அழைத்தேன்” என்றார்.⒫16 அதற்குச் சாமுவேல், “ஆண்டவர் உன்னை விட்டு விலகி உன் பகைவராய் மாறியபின் என்னிடம் ஏன் ஆலோசனைக் கேட்கிறாய்?17 ஆண்டவர் உன் மூலம் உரைத்தது போல் உனக்குச் செய்தார்; அரசை உன் கையினின்று பறித்து உனக்கு அடுத்திருப்பவனாகிய தாவீதிடம் கொடுப்பார்.18 நீ ஆண்டவர் வார்த்தையைக் கேளாமலும், அமலேக்கின் மேல் அவருக்கு இருந்த வெஞ்சினத்திற்கு ஏற்ப நீ நடந்துகொள்ளாமலும் இருந்ததால், ஆண்டவர் இன்று இதைச் செய்துள்ளார்.19 மேலும், ஆண்டவர் உன்னையும் உன்னோடு இருக்கும் இஸ்ரயேல் மக்களையும் பெலிஸ்தியரிடம் ஒப்புவிப்பார். நாளை நீயும் உன் புதல்வர்களும் என்னுடன் இருப்பீர்கள்; ஆண்டவர் இஸ்ரயேல் படையையும் பெலிஸ்தியர் கையில் ஒப்புவிப்பார்.⒫20 சாமுவேலின் வார்த்தைகளினால் அச்சமுற்ற சவுல், உடனே தரையில் நெடுங்கிடையாய் விழுந்தார். மேலும், அவர் இரவு பகலாய் ஒன்றும் உண்ணாது இருந்தமையால் வலிமையற்றிருந்தார்.21 அப்பெண் சவுலிடம் நெருங்கி வந்து, அவர் மிகவும் கலக்கமுற்றிருப்பதைக் கண்டு அவரை நோக்கி, “இதோ உம் அடியாள் உம் சொல்லைக் கேட்டு, என் உயிரைப் பொருட்படுத்தாது நீர் சொன்ன உம் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தேன்.22 ஆதலால், இப்பொழுது நீரும் உம் அடியாளின் வார்த்தைகளும் கேளும். நான் உமக்கு முன் கொஞ்சம் அப்பம் வைக்கிறேன்; வழிப் பயணத்திற்கான வலிமையை நீர் பெறுவதற்கு அதை நீர் உண்ணும்” என்றாள்.23 அதற்கு அவர், “நான் உண்ண மாட்டேன்” என்று மறுத்தார். ஆனால், அப்பெண்ணுடன் சேர்ந்து அவருடைய பணியாளர்கள் வற்புறுத்தவே, அவர் அவர்களது சொல்லுக்கு இசைந்தார்; அதனால் அவர் தரையிலிருந்து எழுந்து படுக்கையின் மேல் உட்கார்ந்தார்.24 அப்பெண் வீட்டில் ஒரு கொழுத்த கன்றுக்குட்டி வைத்திருந்தாள்; அதை விரைவில் அடித்து, மாவை எடுத்துப் பிசைந்து, புளிப்பற்ற அப்பங்கள் சுட்டாள்.25 அவள் அவற்றைச் சவுலுக்கும் அவர்தம் பணியாளர்களுக்கும் முன்னே வைத்தாள். அவர்களும் உண்டனர்; பின்னர், அவர்கள் எழுந்து அன்றிரவே புறப்பட்டுச் சென்றனர்.
By continuing to browse the site, you are agreeing to our use of cookies.