1 Corinthians 2 in Tamil ERV Compare Tamil Easy Reading Version
1 அன்பான சகோதர சகோதரிகளே! நான் உங்களிடம் வந்தபோது தேவனுடைய உண்மையை உங்களுக்குச் சொன்னேன். ஆனால் அதிகமான ஞானத்தையோ, அழகிய வார்த்தைகளையோ நான் உபயோகிக்கவில்லை.
2 உங்களோடு இருக்கையில் இயேசு கிறிஸ்துவையும் அவரது சிலுவை மரணத்தையும் தவிர பிற அனைத்தையும் மறப்பேன் என முடிவெடுத்தேன்.
3 நான் உங்களிடம் வந்தபோது மிகவும் சோர்வாகவும், பயத்தால் நடுங்கிக்கொண்டும் இருந்தேன்.
4 எனது போதனையும் பேச்சும் வலியுறுத்திச் சொல்லும் ஆற்றலுள்ள ஞானம் பொருந்திய வார்த்தைகளைக்கொண்டனவாய் இருக்கவில்லை. பரிசுத்தாவி கொடுக்கின்ற வல்லமையே எனது போதனைக்கு நிரூபணம் ஆகும்.
5 உங்கள் விசுவாசம் தேவனுடைய வல்லமையில் இருக்க வேண்டும் என்பதற்காகவும், மனிதனின் ஞானத்தில் இருக்கக் கூடாதென்பதற்காகவும் நான் இவ்வாறு செய்தேன்.
6 பக்குவமடைந்த மக்களுக்கே நாம் ஞானத்தைப் போதிக்கிறோம். ஆனால் நாம் போதிக்கும் இந்த ஞானம் இவ்வுலகத்திலிருந்து வருவதல்ல. இந்த உலகத்து ஆட்சியாளர்களின் ஞானமும் இதுவல்ல. அந்த ஆட்சியாளர்கள் தங்கள் அதிகாரத்தை இழந்து வருகின்றனர்.
7 ஆனால் நாம் தேவனுடைய இரகசியமான ஞானத்தைப் பேசுகிறோம். மக்களிடமிருந்து இந்த ஞானம் மறைக்கப்பட்டுள்ளது. நமது மகிமைக்காக தேவன் இந்த ஞானத்தைத் திட்டமிட்டார். உலகம் தோன்றுவதற்கு முன்பே தேவன் இதைத் திட்டமிட்டார்.
8 இந்த உலகத்தில் எந்த ஆட்சியாளனும் இந்த ஞானத்தைப் புரிந்துகொண்டிருக்கவில்லை. அவர்கள் அதனைப் புரிந்துகொண்டிருந்தால் மகிமையின் கர்த்தரை சிலுவையில் கொன்றிருக்கமாட்டார்கள்.
9 ஆனால், “தேவன் தன்னை நேசிக்கும் மக்களுக்காகச் செய்த ஏற்பாட்டை எந்த கண்ணும் பார்க்கவில்லை. எந்தக் காதும் கேட்கவில்லை, எந்த மனிaதனும் எண்ணிப் பார்த்ததில்லை” என்று எழுதப்பட்டிருக்கிறது.
10 ஆனால், தேவன் இவற்றை ஆவியானவரின் மூலமாக எங்களுக்குக் காட்டியுள்ளார். ஆவியானவர் எல்லாவற்றையும் அறிவார். தேவனுடைய ஆழ்ந்த அந்தரங்கங்களையும் பரிசுத்த ஆவியானவர் அறிவார்.
11 அதை இப்படி விளக்கலாம்: ஒருவர் அடுத்தவருடைய எண்ணங்களை அறிய முடியாது. அவனுக்குள்ளிருக்கிற அவனுடைய ஆவியே அறியும். அதுவே தேவனுக்கும் பொருந்தும். தேவனுடைய ஆவியானவர்தான் அந்த எண்ணங்களை அறிவார்.
12 நாம் உலகின் ஆவியைக்கொண்டிருக்கவில்லை. நாம் தேவனிடமிருந்து அவரது ஆவியானவரைப் பெற்றோம். தேவன் நமக்குக் கொடுத்துள்ள பொருள்களை அறியுமாறு நாம் ஆவியானவரைப் பெற்றோம்.
13 நாம் இவற்றைப் பேசும்போது மனிதனுக்குள்ள ஞானத்தால் நாம் அறிவிக்கப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்லை. பரிசுத்த ஆவியானவர் அறிவித்துள்ள வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். ஆன்மீகக் கருத்துகளை விளக்க ஆன்மீகமான சொற்களையே பயன்படுத்துகிறோம்.
14 ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபடாத மனிதன் தேவனுடைய ஆவியானவரிடமிருந்து வரும் வார்த்தைகளை ஏற்றுக்கொள்வதில்லை. அவன் அவற்றை மடமையாகக் கருதுகிறான். அவன் ஆவியானவர் கருதுவனவற்றை புரிந்துகொள்ள முடியாது. ஏனெனில் அவை ஆன்மீகமாகவே புரிந்துகொள்ளப்படக் கூடும்.
15 ஆனால், ஆன்மீக உணர்வுள்ளவனோ எல்லாவற்றைப் பற்றியும் நியாயம் தீர்க்கமுடியும். மற்றவர்கள் அவனை நியாயம் தீர்க்க முடியாது.
16 “யார் தேவனுடைய எண்ணத்தை அறிவார்? யார் தேவனுக்கு அறிவுறுத்துவார்கள்?” என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் நமக்கு கிறிஸ்துவின் சிந்தனை இருக்கிறது.